கற்க கசடற

ச்சீய்ய்…… எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. சாதாரண விசயம். அதற்காக என்னை இப்படியா அடித்து அசிங்கப்படுத்துவது? என் அப்பாவிற்கு நாகரிகமே இல்லை. அறிவும் இல்லை. ஒன்று இருந்தால்தானே இன்னொன்றும் இருக்கும்.

டி.வி யில் விஸ்பர் விளம்பரத்தை பார்த்து விட்டு என்னுடன் படிக்கும் என் பக்கத்து வீட்டு பெண் பவித்ராவிடம் விஸ்பர்னா என்ன? என்று கேட்டு விட்டேன். அதற்குதான் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அந்த அடி அடித்து விட்டார். அதுவும் பவித்ரா முன்னாலேயே. இதுவரை நான் சேர்த்து வைத்த மானம், மரியாதை, கவுரவம் எல்லாம் காற்றில் பறந்து ஒசோனில் கலந்து விட்டது

இந்த பவித்ரா தனியார் செய்தி சேனலையும் மிஞ்சி விடுவாள். இந்த கொடூர நிகழ்வை அதிவேகமாக பரப்பி விடுவாள். அதிவேகம் ஆபத்து என்பதை அறியாத கூமுட்டை அவள். பள்ளிக்கூடம் சென்றால் எல்லோரும் என்னை கேலி செய்வார்கள்.

என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு அசிங்கப்பட்டாலும் சரி விஸ்பர்னா ப்ரட்டா பிஸ்கட்டா? என்பதை கண்டுபிடிக்காமல் விட மாட்டேன். இப்போதைக்கு இதுதான் என் லட்சியம். காசு சேர்த்து விஸ்பர் பாக்கெட்டை வாங்கியே தீர வேண்டும்.

சனி, ஞாயிறு இரண்டு விடுமுறை நாட்களில் நாயை விட மோசமாக சுற்றிய களைப்பில் ஓய்வெடுக்க பள்ளிக்கு சென்றேன். ஐந்தாவது வரிசை பென்ஜில் முதலாவதாக அமருபவள் பவித்ரா. இன்று அவளை காணவில்லை. விசாரித்ததில் அவள் இன்று விடுமுறை. காரணம் தெரியவில்லை தேவையுமில்லை. மிக்க சந்தோசம். நான் அசிங்கப்பட்ட விசயம் யாருக்கும் தெரிந்திருக்காது. என் இருக்கையில் போய் அமர்ந்தேன்.

சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. எங்களின் வகுப்பு தலைவி நிவேதா [ இவள் நாளைக்கு புரட்சித்தலைவியாக வரவும் வாய்ப்பிருக்கிறது ]. என்னருகில் வந்து ‘ உன்ன பி.டி மாஸ்டர் கூப்பிட்டாரு’ என்றாள். எனக்கு தூக்கிவாரி போட்டது. இப்போதுதான் எனக்கு ஞாபகாமே வருகிறது.

வெள்ளிக்கிழமை மாலை பி. டி பிரியடில் விளையாடாமல் பெண்களின் பாத்ரூமிற்குள் சென்று சுற்றி பார்த்து விட்டு வந்தேன். அதை குற்றமென கருதி என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அன்று நேரமின்மையால் விட்டு விட்டார்கள். இன்று வழக்கு தலைமையாசிரியரிடம் சென்றிருக்கும். அவர் விசாரணை நடத்தி நிச்சயம் தண்டனையும் கொடுப்பார்.

இது எனக்கு ஞாபகம் இருந்திருந்தால் பேதியாகிறது என்று லீவு போட்டிருக்கலாம். இரண்டு மூன்று முறை கக்கூஸ்க்குள் சென்று வந்தால் போதுமானது. கக்கூஸுக்குள் சென்றவன் கக்கூஸ் போகிறானா என்று வந்து பார்க்கவா போகிறார்கள்? புலம்பியபடியே தலைமையாசிரியர் அறைக்குள் சென்றேன்.

தலைமையாசிரியர் விசாரணை நடத்தினார்.போனாயா? போனேன். பார்த்தாயா? பார்த்தேன். தண்டனை தரப்பட்டது. அவர் ஒரு வினோதமான தண்டனை தருவார். அதற்கு சேர் எக்சர்ஸைஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். அதாவது சேர் போல் நிற்க வேண்டும். இவர் இந்த தண்டனையை தருவதற்கு பேசாமல் வகுப்பிற்கு அனுப்பி விடலாம். அல்லது ஆசை தீர அடித்து விடலாம். இப்படியொரு தண்டனையை கொடுத்து என்னை போல் மாவீரனை அவமானப்படுத்துவார். வெஸ்டர்ன் டாய்லெட்டில் பேசன் இல்லாமல் உட்காருவது போல ரொம்ப நேரம் நின்றிருந்தேன்.

தண்டனை காலம் முடிந்து பி.டி மாஸ்டர் விடுதலையை அறிவித்தார். வகுப்பறைக்கு சென்றேன். சமூக விரோதிக்கு தரப்படும் அத்தனை மரியாதையும் எனக்கு பஞ்சமில்லாமல் தரப்பட்டது. கூச்சம் கொன்று தின்றது. என் இருக்கையில் போய் அமர்ந்தேன். என்னருகில் அமர்ந்திருப்பவன் நரேன். இவன் எதையும் சுயமாக முயற்சி செய்யவே மாட்டான். அடுத்தவன் கஸ்டப்பட்டு கண்டுபிடிக்கும் விசயத்தை கேட்டு தெரிந்து கொள்ளும் சோம்பேறி. என்னிடம் மெதுவாக ’பொண்ணுங்க பாத்ரூம் எப்டி இருந்துச்சு’ என்று கேட்டான். நம்ம பாத்ரூம்கும் அவங்க பாத்ரூம்கும் ஒரே வித்தியாசந்தான் என்றேன். என்ன அது?. என்று ஆவலாக கேட்டான். நம்ம பாத்ரூம் அசுத்தமாக இருக்கும் அவங்க பாத்ரூம் சுத்தமா இருந்துச்சு என்றேன்.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றேன். இன்று சில பல சமூக பிரச்சனைகளை சந்தித்திருந்ததால் ஓய்வெடுக்க நினைத்து விளையாட செல்லாமல் வீட்டிலிருந்தேன். அப்போது என் அப்பாவும் அம்மாவும் பவித்ரா வயதுக்கு வந்து விட்டதாகவும் அவளுக்கு சடங்கு செய்ததையும் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றி கேட்கலாம் எனத் தோன்றியது. ஆனால் முந்தாநாள் என் அப்பா என்னை அடித்து துவைத்தது ஞாபகத்திற்கு வர, வேண்டாம் என முடிவு செய்து விட்டேன்.

வீட்டிலிருந்து வெளியே வந்தேன். அப்போது எதேச்சையாக பவித்ராவின் அம்மா வெளியே வந்தார். அவரிடம் சென்று பவித்ராவின் நலம் பற்றி விசாரிக்கலாம் என்று தோன்றியது. அவரின் அருகில் சென்று ’பவித்ரா வயசுக்கு வந்துட்டாளாமா?’ என்று கேட்டேன். ’டேய் லூசு போடா அந்தப்பக்கம்’ என்று கோபமாக திட்டி விட்டு உள்ளே சென்றார். எனக்கு சற்று அதிர்ச்சியானது. நான் என்ன கேட்டு விட்டேன்? என்னை எதற்காக இப்படி திட்ட வேண்டும்? நான் அப்படி ஒன்றும் மோசமாக கேட்டு விடவில்லையே. வயதுக்கு வந்ததைத்தானே கேட்டேன்? வயதுக்கு வருவது அப்படி ஒரு மோசமான செயலா? அப்படி அது மோசமான செயலென்றால் இவர்கள் ஏன் வயதுக்கு வர வேண்டும் தேவையே இல்லாமல்? இப்படி என்னுள் பல கேள்விகள் எழுந்து என்னை குழப்பின.

சில மாதங்கள் ஓடியிருந்தன. அதில் ஒரு மாதத்தில் ஒரு நாள் பவித்ராவை ஒரு கடையில் பார்த்தேன். அவள் விஸ்பர் வாங்கி கொண்டிருந்தாள். நான் மறந்திருந்த என் லட்சியம் மறுபடியும் துளிர்த்து விட்டது. அவளிடம் சென்றேன். அவள் கடையிலிருந்து வந்தாள். ’எனக்கும் ஒரு விஸ்பர் வாங்கி தா நா உனக்கு அப்புறமா காசு தர்றேன்’ என்றேன். ’ஏய் உனக்கெதுக்குடா விஸ்பர்?’ என்றாள். ஏன் ’நீ சாப்ட்லாம் நா சாப்ட கூடாதா?’ என்றேன். ’ஏய் இது சாப்ட்றது இல்லடா இதெல்லாம் பொண்ணுங்க விசயம் போடா அந்தப்பக்கம்’ என்று சொல்லி சென்றாள். பொண்ணுங்க விசயமா? புரியவில்லை எனக்கு. அப்படி ஒன்று இருக்கிறதா மனித உலகில்?

இதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் . யாரிடம் கேட்பது? இருக்கவே இருக்கிறார் தினேஸ் அண்ணன் . காலேஜ் எல்லாம் படித்திருக்கிறார். எனக்கு, மண்டையை திறந்து மூளையில் சூடு போட்டாலும் ஏறாத கணக்கை ஈஸியாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

அவரை பிடித்து விஸ்பர் விசயத்தை கேட்டேன். விஸ்பர் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? இதுதான் அவரிடம் என் கேள்வி. டேய் அது பொம்பளைங்களுக்கு மாசா மாசம் வர்ற மாதவிடாய்க்கு யூஸ் பன்றதுறா’ என்றார். தினேஸ் அண்ணன். மாதவிடாய்க்கு யூஸ் பன்றதா? அப்டினா அடுத்த கேள்வி. மாதவிடாய்னா என்ன? அதற்கும் தெளிவாக பதில் சொன்னார். எனக்கு ஏதோ தலை கிர்ரென்றது. அப்படியே அடுத்த கேள்வி. வயசுக்கு வர்றதுனா என்ன? என்று கேட்டேன். மாசா மாசம் வர்ற மாதவிடாய் முதல் முதலா வர்றதுக்கு பேருதாண்டா வயசுக்கு வர்றது என்றார். புரிந்து விட்டது. விஸ்பர் பவித்ராவுக்குதான் எனக்கு தேவையில்லை. ஆனால் நான் அதைப் பற்றி தெரிந்து கொள்வதில் தவறேதுமில்லை. அதற்காக என் அப்பா என்னை அடித்து துவைத்ததில் நியாயமுமில்லை.

என்னிடம் இதுபோன்ற நிறைய கேள்விகள் இருக்கிறது. பதில் சொல்ல தினேஸ் அண்ணன் இருக்கிறார். இதுபோன்ற கல்வியில் இல்லாத பாடங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் வளர வேண்டுமல்லவா !

எழுதியவர் : ரமேஷ்குமார் (3-Nov-18, 7:23 pm)
சேர்த்தது : ரமேஷ்குமார்
Tanglish : karka kasadara
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே