அவனும் நானும்-அத்தியாயம்-17

....அவனும் நானும்....

அத்தியாயம் : 17

சௌமியின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெகுவாகவே காயப்பட்டுப் போனவள்,அன்றைய இரவு முழுவதுமே அதையே மீண்டும் மீண்டுமாய் நினைத்து நினைத்து கண்ணீரினால் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள்...அவளது உடலும் உள்ளமும் இந்த நிகழ்வினால் மிகவும் சோர்ந்து போனதாலோ என்னவோ அதிகாலையில் அவளின் உடல் உயர் கொதிநிலையினை அடைந்திருந்தது...

காய்ச்சலின் தாக்கமும்,மனதில் குடியிருந்த கவலையும் அவளை ஒருசேரத் தாக்கியதில் மிகுந்த பலவீனத்திற்குள்ளானவளிற்கு வைத்தியரிடம் சிகிச்சை எடுத்தும் கூடக் குணமாகவில்லை...உடலில் தோன்றும் வலிகளுக்குத்தானே மருந்திட்டிட முடியும்..உள்ளத்தில் தோன்றிடும் வலிகளுக்கல்லவே...

இதற்கு முன் அவள் இப்படி காய்ச்சலென்று படுத்துக் காணாத அவளின் பெற்றோர்கள்தான் துடிதுடித்துப் போய்விட்டார்கள்...என்னதான் அவளை ஒருவர் மாறி ஒருவர் அருகிலிருந்தே கவனித்துக் கொண்டாலும் அவள்தான் தேறி வருவதாகவேயில்லை...ஆனால் அவளின் இந்த சுகவீனம் கூட ஓர்விதத்தில் நல்லதாகவே அவளிற்கு அமைந்தது...

மூன்று நாட்களாக அவள் கல்லூரிக்கு வராததால் அன்று அவளைத் தேடி வீட்டிற்கே வந்திருந்தாள் சௌமி...

"வாம்மா...உட்காரு...நல்லாயிருக்கியா...??.."

"நான் ரொம்பவே சூப்பரா இருக்கேன் மா...ஆனால் கீர்த்து எங்க..??..மூனு நாளாய் ஆளைக் காணவேயில்லை...கோல் பண்ணால் போனும் சுவீட்ச் ஆப்ன்னு வருது...வீட்டு நம்பருக்கும் லைன் கிடைக்கல...அதான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்திட்டு நேராவே வந்திட்டேன்...எங்கே அவள்..??..வீட்டில இருக்காளா இல்லையா...?..."என்று அவள் இடைவேளையின்றி பேசிக் கொண்டே செல்லவும்,

"அது சரி...கொஞ்சம் என்னையும் பேச விடும்மா...அப்போதானே என்னாலேயும் என்ன ஏதுன்னு சொல்ல முடியும்.."

"ஹா..ஹா...மன்னிச்சிருங்க மா...இனி நான் வாயையே திறக்க மாட்டேனாக்கும்.."என்றவாறே அவள் இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொள்ளவும்,அவளது குறும்பில் புன்னகைத்தவர்...சிரிப்பு லேசாய் அடங்கியதும் விடயத்திற்கு வந்தார்...

"நான் உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்...அவளுக்கு மூனு நாளாவே சரியான காய்ச்சல்...மருந்தெடுத்தும் குணமாகலை...நாளைக்கும் குறையலன்னா மறுபடியும்தான் கொண்டுபோய் காட்டனும் போல..."

"என்னம்மா சொல்லுறீங்க...எனக்குத் தெரியவே தெரியாது...தெரிஞ்சிருந்தால் முதலே வந்திருப்பேன் மா..."என்றவாறே இருக்கையிலிருந்து எழுந்தவள்,விறு விறுவென்று மாடிப்படிகளில் ஏறி கீர்த்தனாவின் அறையினைச் சென்றடைந்தாள்...

அங்கே அவள் கண்ட காட்சியே அவள் மனதினை உருக்க கீர்த்தனாவின் உறக்கம் கலையாத வண்ணம் அருகில் போய் சத்தமின்றியே நின்று கொண்டாள்...ஆனால் அவளின் அரவம் உணர்ந்து லேசாய் கண் விழித்தவள்,நடுங்கிக் கொண்டிருந்த உதடுகளை அடக்கி "சௌமி"என்றழைத்தாள்..அழைத்தவாறே அவள் எழுவதற்கு முயற்சிக்கவும்,அவளுக்கருகே சென்று அவளின் தலையினைத் தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் சௌமி...

"இப்போவாச்சும் என் மேலயிருந்த கோபம் போயிடுச்சா...இல்லை திட்டினது பத்தாதின்னு இன்னைக்கு என்னை அடிக்க வந்திருக்கிறியா...??.."

"இப்போ மட்டும் நீ வாயை மூடிட்டு பேசாமல் இருக்கலைன்னா நீ சொன்னதுதான் இங்க நடக்கும்..."

"உன்கிட்ட பேசாமல் என்னால மட்டும் எப்பிடிடீ இருக்க முடியும்..??..அன்னைக்கு ஏதோ வருத்தத்தில பேசிட்டேன்...ஆனால் அதுக்காக அன்னைக்குப்பூராவும் எவ்வளவு வருதப்பட்டேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்..."

"எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுறவ..இதை மட்டும் என்கிட்டையிருந்து மறைச்சால் கோபம் வராதா..??..அந்தக் கோபத்திலேயும் வருத்தத்திலையும் ஏதோ கொஞ்சம் அதிகமாகவே பேசிட்டேன்...அன்னைக்கே என்னைக் கொஞ்சிக் கெஞ்சியாவது சமாதானப்படுத்துவியா..??..அதைவிட்டிட்டு இப்படிக் காய்ச்சல்ன்னு படுத்திருந்தால் என்னடி அர்த்தம்...??.."

"அவ்வளவுதானே இப்ப் பாரு உன்னை எப்படிச் சமாதானப்படுத்துறேன்னு.."என்றவாறே மீண்டும் எழ முயற்சித்தவளை அடக்கியவள்,

"முதல்ல ஒழுங்காய் குணமாகிற வழியைப் பாரு...அதுக்கப்புறம் என்னை சமாதானப்படுத்திக்கலாம்..."

"அதான் இப்போ நீ வந்திட்டாய் ல...காய்ச்சல் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் எப்படி ஓடுதின்னு மட்டும் பாரு..."என்றவள் தலையணையை முதுகிற்கு கொடுத்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்...அப்போது சரியாக பார்வதியும் தேநீரோடு உள்நுழைந்து கொண்டார்...

"ப்ரண்டைக் கண்டதும்தான் மேடமுக்கு உணர்வே வந்திருக்குப் போல..."என்றவாறே தேநீரை இருவரிடம் கொடுத்தவர்...அவர்களிருவரும் பேசிக் கொள்வதற்கான தனிமையைக் கொடுத்து விலகிச் சென்றார்..அவர்கள் வெளியேறியதும் சௌமியின் கைகளை இறுக்கமாகப் பிடித்து தன் கைகளிற்குள் வைத்துக் கொண்டவள், அப்படியே பேச ஆரம்பித்தாள்...

"உன்கிட்ட சொல்லாமல் மறைச்சது தப்புத்தான்...சொல்லக்கூடாதின்னு எல்லாம் இல்லை...நானே அந்த விசயத்தில இன்னுமொரு தெளிவிற்கு வரலை..."

"அவனை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு என்றது உண்மைதான்...கல்லூரிக்குள்ள நுழைஞ்ச அடுத்த விநாடியில இருந்து என்னோட கண்கள் அவனை மட்டுமேதான் தேடுது என்றதும் உண்மைதான்...ஆனால் இது எல்லாத்துக்குமே பெயர்தான் காதலான்னு கேட்டால் அதுக்கான பதில் என்கிட்டயில்லை..."

"இப்படி நானே ஒரு தெளிவான முடிவில இல்லாதப்போ,அதைப்பத்தி உன்கூட ஆலோசிக்க நான் விரும்பல சௌமி...மத்தபடி உன்கிட்டயிருந்து மறைக்கனும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கில்லை...இந்த விசயத்தில நான் உன்னை ரொம்பவே காயப்படுத்தியிருக்கேன்னு தெரியும்...இது எல்லாத்துக்குமே சேர்த்து என்னை மன்னிச்சிரு ப்ளீஸ்..."

"ஆனால் நான் காயப்பட்டதை விட அதிகமாய் நீதான் காயப்பட்டிருப்பேன்னு எனக்குத் தெரியும் கீர்த்து...அதனால நீயும் என்னை மன்னிச்சிரு..."என்றவள்,

"சரி இப்போ உன்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..எப்போ இது எல்லாத்துக்குமே பெயர் காதல்ன்னு உன்னோட மனசு உன்கிட்ட சொல்லுதோ..அதுவரைக்கும் நான் இதைப்பத்தி உன்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்...அது யாரு எவருன்னு நீ எதுவுமே என்கிட்ட சொல்ல வேண்டாம்..."

"ஆனால் காதல்தான்னு தெரிஞ்சதுக்கப்புறமும் என்கிட்டயிருந்து மறைச்ச...அப்புறம் உன்னை என்கிட்டயிருந்து யாராலையுமே காப்பாத்த முடியாதாக்கும்..."என்று அவள் ஏதோ வில்லி போல் பேசிட முயற்சிக்கவும்,அதில் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டாள் கீர்த்தனா...

அவள் சிரிப்பதையே சௌமி முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க,அவளோ சிரிப்பினை ஒருவழியாய் முடித்துக் கொண்டு நிமிர்ந்தாள்...

"இப்போ நான் சொல்றதை நீ நல்லாக் கேட்டுக்கோ..இதுதான்னு என்னைக்கு என்னோட மனசு சொல்லுதோ,அன்னைக்கு என் காதலையும் காதலுக்குரியவனையும் தெரிஞ்சக்கப்போற முதல் ஆள் நீயாகத்தான் இருப்பாய்...சரியா..??.."

ஆனால் அப்படியொரு நாள் என்றுமே அமையப்போவதில்லை என அறியாத அந்த இருவரும் புன்னகையோடு ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்...

சௌமி வந்து சென்ற அன்றே அவளின் காய்ச்சல் குணமாகியிருந்தாலும்..இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த வார ஆரம்பத்தில்தான் அவள் கல்லூரிக்கு வந்திருந்தாள்...ஆனால் கடந்த வாரம் முழுதும் அவனும் கல்லூரிக்கு விடுப்பெடுத்திருந்ததால் அவளின் சுகவீனம் தொடர்பில் அவனும் எதையும் அறிந்திருக்கவில்லை...

கல்லூரியின் வாசலைக் கடந்து அவள் வரவும் அவளோடு வந்து தானும் இணைந்து கொண்டான் கிருஷ்...

"ஹலோ மேடம் குட்மோர்னிங்..."

"ஹேய்...ஹாய்...வெரி குட் மோர்னிங்..."

"அப்புறம் மேடமோட காய்ச்சல் எல்லாம் குணமாகிருச்சா..??.."

"ம்ம்...பார்த்தால் எப்படித் தெரியுதாம்..??.."

"ம்ம்...காய்ச்சல் வந்த ஆள் மாதிரியே தெரியலையாம்..."என்று அவன் புருவத்தை உயர்த்திப் புன்னகைக்கவும்,அவனோடு இணைந்து தானும் புன்னகைத்தவாறே திரும்பியவள் தூரமாய் நின்று நண்பனொருவனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவனைக் கண்டு கொண்டாள்...

அவள் எதிர்பார்த்தது போலவே அவனது விழிகள் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன...ஆனால் வழமையான அவனின் வருடலிற்குப் பதில் அந்த விழிகளிரண்டும் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தன...அதில் அவளது மனம் ஓர் நொடியிலேயே வாடிப் போனது...

"என்ன இவன்...ஒரு வாரம் கழிச்சு இன்னைக்குத்தான் பார்க்குறேன்...சிரிச்ச மாதிரி முகத்தைத்தான் வச்சிருக்க முடியல...அட்லீஸ்ட் அந்த இரண்டு கண்ணாலவாச்சும் சிரிக்கலாம்தானே ...அதைவிட்டிட்டு உர்ரென்னு முறைச்சுப் பார்த்தால் என்ன அர்த்தமாம்..கடுவன் பூனை...கடுவன் பூனை.."என்று தனக்குள்ளாகவே அவனைத் திட்டித் தீர்த்துக் கொண்டாள் அவள்...ஆனால் அவளின் அருகே எதையோ பேசியாவாறே வந்தவனிற்கு அது விசித்திரமாகத் தெரியவும்,

"ஹலோ என்ன உங்களுக்கு நீங்களே பேசிட்டு வாறீங்க...??..."

"ஆஆ...அது அது...ஒன்னுமில்லையே..."என்று அவள் சமாளிக்க முயன்று கொண்டிருக்கவும்,நல்லவேளையாக சௌமி அங்கே வந்து சேர்ந்தாள்...

"ஹலோ கிருஷ்ணா சேர்...ஏன் எங்க கூடவெல்லாம் கதைக்க மாட்டீங்களா...கீர்த்துவோட மட்டும்தானா..??.."

"அது சரி உங்க ப்ரண்டு அப்படியே பேசிட்டாலும்...எப்பவுமே பொண்ணுங்க கொஞ்சம் அதிகமாவே பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்...ஆனால் உங்க ப்ரண்டு இருக்காங்களே...ரொம்பவுமே அமைதி..."

"ஹா..ஹா...அவள் கொஞ்சம் அப்படித்தான்...ஆனால் அவள் கூட ரொம்பக் க்ளோஸ் ஆனவங்களுக்குத்தான் தெரியும் அவள் எவ்வளவு கலகலப்பானவன்னு..."

அவர்களிருவரும் அவளைப்பற்றிப் பேசியது எதுவுமே அவளின் காதினில் ஏறவில்லை...அவளின் பார்வை திரும்பி அவனையே பார்த்துக் கொண்டிருந்தது...அவளின் பார்வைக்கு எப்போதும் பதில் பார்வை புரிபவன் அன்று வேண்டுமென்றே வேறுபுறமாய் திரும்பி நின்று கொண்டான்...அது அவளின் மனதில் எதுவென்றே சொல்ல முடியாதவோர் தவிப்பினை ஏற்படுத்திச் சென்றது...அவள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்ததையே கிருஷ் கவனித்தவனாய்,

"என்ன அங்கேயே பார்த்துக்கிட்டிருக்கீங்க கீர்த்தனா..??யாரையாச்சும் தேடுறீங்களா..??.."

"ஆஆ...அப்படியெல்லாம் ஒன்னுமில்லை...யாரோ கூப்பிடுற மாதிரி இருந்திச்சு அதான்..."

"ஓஓ...ஓகே..."என்றவன்,அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்...அவன் சென்றதும் தாமதம் இங்கே சௌமி அவளைக் கேலி பண்ண ஆரம்பித்துவிட்டாள்...

"என்ன வந்ததுமே மேடமோட கண்ணு இரண்டும் அவனுடைய காதல் விழிகளைத் தேட ஆரம்பிச்சாச்சு போல..."என்றவாறே அவள் கண்ணடிக்கவும்,

"பச்...போடி...நானே கடுப்பில இருக்கேன்...நீ வேற...வா க்ளாசுக்குப் போகலாம்..."

"சரி...சரி...வா...போலாம்..."

கீர்த்தனாவின் மனம் அவனின் விழிகளில் தெரிந்த கோபத்தினையே எண்ணிக் கொண்டிருந்தது...அதற்கான காரணத்தை ஆராய்வதற்குள்ளாகவே அவள் வகுப்பினை வந்தடைந்துவிட்டதனால்,அதனை அப்போதைக்குத் தள்ளி வைத்தவள் தோழிகளோடு இணைந்து கொண்டாள்...

..."...என் விழியிரண்டும்
உனை மட்டுமாகவே தேடி
அலைபாய்கையில்,
நீயோ முகத்தினைத் திருப்பி
விழிகளை மறைத்துக்
கொள்வதுதான் ஏனடா....??..."...

தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (3-Nov-18, 9:29 pm)
சேர்த்தது : உதயசகி
பார்வை : 229

மேலே