தீரா விருந்து

திருமணம் முடிந்து பதினைந்து நாட்களாகிவிட்டது. குடும்பமே மகிழ்ச்சியாகவும் பரபரப்பாகவும், உறவினர்கள் வந்து போவதாகவும், உறவினர் வீட்டிற்கு இவர்கள் சென்று வருவதாகவும் கொஞ்சம் கூட திருமண உற்சாகம் குறையாமலிருந்தார்கள். ஆனால் மணமகன் கலையரசனோ முகத்தில் களையிலந்து காணப்பட்டான். திருமண நாளன்று இருந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டெமினா குறைந்து போய் சோர்ந்து கிடந்தான். காரணம், பதினைந்து இரவுகள் கடந்தும் அவனுக்கு முதலிரவு நடக்கவில்லை. “தேன கைல குடுத்துட்டு நக்கக் கூடாதுனு சொன்னா எப்ட்றா?” என புலம்பியபடியே இருந்தான்.

கலையரசனின் மனைவி நர்மதா ராகினி அவ்வளவு அழகு. மாநிறம்தான். ‘Weatish brown’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அழகு கலரில் இல்லை. அமைப்பில் இருக்கிறது. கலை ரசனை மிக்கவர்கள் அதிக கலரை விரும்புவதில்லை. அதிக வெண்மையானாலும், அதிக கருமையானாலும் இரண்டையுமே. மிதமான கலரில்தான் கவர்ச்சியிருக்கிறது. என்றுமே திகட்டாத நிறம் மாநிறம்தான். சங்ககாலத்தில் மாநிறத்தைதான் அழகென ரசித்திருக்கிறார்கள். மாமை என்பார்கள். அதாவது மாந்தளிர் நிறம். மாநிறம். சிவப்பை அழகு என மதிப்பிட்டதற்கு என்ன காரணமென்று சங்க கலத்திலிருந்து புரட்டிப் பார்த்தால் நமக்கு புரிபடலாம். இன்று முகப்பவுடர், முகக்ரீம், சோப்பு இதையெல்லாம் ஏமாற்றி நம் தலையில் கட்டுவதற்கு சிவப்பு கலர் தேவைப்படுகிறது. சூர்ய வெளிச்சத்தோடு கூட இந்த கலரை ஒப்பிடலாம். காலை வெயில் தங்க நிறமென்றும், மாலை வெயில் மாநிறமென்றும், இரவை கருப்பு என்றும் வகைப்படுத்தலாம். மாலை வெயில் மனதுக்கு இதமானது. அதுபோலத்தான் மாநிறப்பெண்களும். இந்த வகைப் பெண்களுக்கு ஒரு கூடுதல் சிறப்பு இருக்கிறது. இவர்களை எந்தவொரு மேக்கப் அலங்காரமும் இல்லாமலே பார்த்து ரசிக்க முடியும். இந்த விசயத்தில் இவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

கலையரசனும், நர்மதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதாவது ஓடிப்போய். சமீப  காலங்களில் ஓடிப்போய் திருமணம் செய்வது என்பது குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. நம் சிறு வயதில் நிறைய அண்ணன்களும் அக்காக்களும் ஓடிப்போயே திருமணம் செய்து கொண்டார்கள். அந்தப்பையன் இந்தப்பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான். அந்தப்பொண்ணு இந்தப்பையன இழுத்துட்டு ஓடிட்டா என்கிற வார்த்தைகள் அதிகமாக நம் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் இப்போது அந்த வார்த்தைகளை குறைவாகவே கேட்க முடிகிறது. காரணமென்னவென்று சரியாக தெரியவில்லை. காதலித்தால் வீட்டில் உடனடியாக சம்மதித்து விடுகிறார்களா? இல்லை பொறுத்திருந்து காதலர்கள் சம்மதம் வாங்கி விடுகிறார்களா? அல்லது கிடா மீசை வைத்துக் கொண்டு சாதிப்பெருமை பேசும் கேடுகெட்ட பிறவிகளெல்லாம் திருந்திவிட்டார்களா? அல்லது அழிந்துவிட்டார்களா? ஓடிப்போவதென்றால் எவ்வளவு தூரம் ஓடுவது என்று காதலர்கள் சங்கடப்படுகிறார்களா? ஓடிபோவதென்றால் ஓடியே போவதில்லை பைக்கிலோ, பஸ்ஸிலோ, காரிலோ, ரயிலிலோ செல்வது எனத் தெரியாமல் குழம்புகிறார்களா?

கலையரசன், நர்மதா காதலுக்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது இரு வீட்டிலும். முறைத்து முறைத்து பார்ப்பார்கள், பல்லை நர நரவென கடிப்பார்கள், கெட்ட கெட்ட வார்த்தையில் அசிங்க அசிங்கமாய் பேசுவார்கள். ஆனால் இருவரும் எதற்கும் அசைந்ததாக தெரியவில்லை. சொல்லப்போனால் ரசித்து சிரித்து என்ஜாய் செய்து கொண்டிருந்தார்கள். ’வயித்துல நெருப்ப கட்டிட்ருக்கண்டி’ என்று நர்மதாவின் அம்மா சொன்னால், அதுல ஒரு டீ போட்டுக் குடும்மா ஸ்ட்ராங்கா என்பாள் நர்மதா. ஊர்ஜனங்க முன்னாடி தல குனிய வெச்சறாதடி என்றார் அம்மா. அப்போ எனக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணி வைங்க. உங்க கவுரவத்துக்கு நா கேரண்டி. புடிக்காதவன கல்யாணம் பண்ணி வெச்சீங்கனா நீங்க தல குனிஞ்சுதா நிக்கனும் என்றாள் நர்மதா.

இதேபோல வாக்குவாதங்கள்தான் கலையரசன் வீட்டிலும். ஆனால் இருவரும் காதலை விட்டுத் தருவதாக இல்லை. அவளை நீ கல்யாணம் செய்தால் நாங்கள் குடும்பத்தோடு விசமருந்தி நேரடியாக கைலாசம் சென்று விடுவதாக மிரட்டினார்கள். எந்த ப்ராண்ட் விசம் வேண்டுமென்று சொல்லுங்கள் வாங்கித் தந்துவிட்டு செல்கிறேன் என்றான் கலையரசன். காதலை எதிர்ப்பவர்கள் இங்கு வாழ்ந்து மண்ணை மாசுபடுத்துவதை விட, மரணித்து மண் புழுவுக்கு இரையாகட்டும் என முடிவெடுத்து, இரண்டு பேரும் பைக்கில் ஓடிப்போனார்கள். தன்னுடைய பள்ளிச் சான்றிதல், கல்லூரி சான்றிதல், ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை என அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டனர். திருமணம் செய்து பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக. அதுமட்டுமில்லாமல் திருமணம் முடிந்து வேலைக்கு செல்ல வேண்டுமே அதற்காகவும் தேவை என்பதற்காக. உடன் வழிச்செலவுக்கு வீட்டிலிருந்த நகை, பணம் என இருவரும் ஐந்து லட்சத்திற்கு மேல் ஆட்டயப் போட்டுக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

போனவர்கள் சும்மா போகவில்லை. உள்ளூர் காவல்நிலையத்தில்நாங்கள் இருவரும் உண்மையாகவும், உயிருக்குயிராகவும், நேர்மையாகவும், நேர்த்தியாகவும் காதலித்து வந்தோம். தற்போது வீட்டில் எதிர்ப்பு காரணமாக திருமணம் செய்து கொள்ள சுயநினைவுடன் முடிவெடுத்திருக்கிறோம். எங்களின் உயிருக்கும் உடமைக்கும் எதாவது ஆபத்து வருமானால், அதற்கு எங்களின் இரு வீட்டாரும்தான் காரணம். அதுவே அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் ஒருபோதும் காரணமாக மாட்டோம் என தெளிவாக ஒரு பெட்டிசனை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

விசயம் தெரிந்து இரு வீட்டாரும் கொந்தளித்தார்கள். அவர்கள் பெட்டிசன் எழுதிக் கொடுத்த அதே காவல்நிலையத்தில் இவர்கள் சென்று ‘பொண்ண பையன் கடத்தீட்டான்’ ’பையன பொண்ணு கடத்தீட்டா’ என ஆளுக்கொரு வழக்கை பதிந்தார்கள். விசயத்தை கேட்ட ஆய்வாளர், அவர்கள் எழுதிக் கொடுத்த பெட்டிசனைக் காட்டி, அவர்கள் ஆள் கடத்தலில் எல்லாம் ஈடுபடவில்லை, திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடமே ஒரு குழந்தையை பெற்று விட வேண்டுமென்று தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். நீங்கள் நிம்மதியாக வீட்டிற்கு சென்று விருந்து சமைத்து சாப்பிட்டு நன்றாக தூங்குங்கள் என்றார்.

ஓடிப்போனவர்கள் ரொம்ப தூரமெல்லாம் ஓடவில்லை. அவர்கள் ஊரிலிருந்து ஒரு முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலையரசனின் நண்பன் கார்த்தியின் தாத்தா வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அவர் அந்தக் காலத்து ஜெமினிகணேசன். அவர் அப்போதே பி.ஏ பட்டதாரி. காதல் திருமணம் செய்து கொண்டவர். அதை கலப்பு திருமணம் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார். சாதி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டவன்தான் அதை கலப்பு திருமணம் என்பான். சாதியே இல்லை என்பவனுக்கு அது காதல்திருமணம்தான். மனிதனுக்கும் மாட்டிற்கும் திருமணம் நடந்தால்தான் அது கலப்புதிருமணம். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடந்தால் அது காதல் திருமணம். சாதிவெறி பிடித்த கேடுகெட்ட கூமுட்டைகள் அதிகம் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே இவர் அறிவாளியாக இருந்திருக்கிறார். இப்போது காதல் மனைவியை இழந்து வருகிற பென்சனை வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். கார்த்தியின் அம்மா எவ்வளவோ அவர்கள் வீட்டிற்கு அழைத்தும் வர மறுத்துவிட்டார். அவரின் காதல் மனைவியுடன் வாழ்ந்த அந்த வீட்டில்தான் தன்னுயிரும் போக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். இவர்களுக்கு அடைக்கலம் தந்தார்.

அங்கேயே திருமணம் செய்து அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்து கொண்டனர். திருமணம் முடித்து அங்கு ஒருநாள் தங்கினார்கள். ரொமான்ஸ் எட்டிப்பார்த்தாலும் தாத்தா இருக்கிறாரே என கட்டுப்படுத்திக் கொண்டார்கள். தாத்தா அவருடைய காதல்கதையை சொல்ல, இவர்கள் கேட்பதிலேயே ஒருநாள் ஓடிப்போனது.

கலையரசனின் பெற்றோர் கார்த்தியை பிடித்து காலில் விழாத குறையாக கெஞ்ச, சத்தியம் வாங்கிக் கொண்டு உண்மையை சொன்னான் கார்த்தி. அவர்களை அழைத்து வர அனைவரும் சென்றார்கள். கார்த்தியும், நான்கைந்து நண்பர்களும்  உடன் சென்றனர். சாதி வெறியர்கள் எதாவது அசம்பாவிதம் நிகழ்த்த நேரிட்டால் அவர்களை அடித்து சாக்கடையில் போட்டு மூடிவிடுவது என்கிற முடிவோடு சென்றார்கள்.

அங்கு சென்று பார்த்து, பேசி, அழுது, கதறினார்கள். அவர்களைப் பார்த்ததும் கலையரசன் கேட்டக் கேள்வி, நீங்க இன்னும் சாகலையா?

அவர்கள் அப்படித்தானே சொன்னார்கள். நீ அவள கல்யாணம் பண்ணுனா செத்தே போவோம். மானம் போனா உயிர் போன மாதிரி, உயிரை விட மானம் பெரியது என்கிற விலையுயர்ந்த வார்த்தைகளை பேசினார்கள். எது மானம் என்பதே தெரியாத அறிவுகெட்ட ஜென்மங்களுக்கு எதை சொல்லி புரிய வைப்பது? சாதி பார்ப்பதே அவமானமடா அறிவுகெட்ட கூமுட்டைகளே என்று சொல்லி எத்தனை முறை குட்டு வைத்தாலும் திருந்தாத கபோதிகள் இவர்கள்.

சாதிதா உன்னோட மானம்னா செத்துப்போ. காதல்தா மனித இனத்த வாழவைக்கும்னு புரிஞ்சுதுனா இவங்கள கூட்டிட்டு போ என்றார் கார்த்தியின் தாத்தா.

மன்றாடி மன்னிப்பு கேட்டுவிட்டு இருவரையும் கூட்டி சென்றனர். தாத்தாவுக்கு நன்றி சொல்லி வாழ்த்து வாங்கி விட்டு விடை பெற்றனர்.

கல்யாணம்தான் நல்ல நாள் பார்த்து செய்யவில்லை. முதலிரவிற்காவது நல்ல நாள் பார்க்க வேண்டும் என்று சொல்லி அதை தள்ளி வைத்தனர். அதற்குள் நெருங்கிய சொந்தங்களையாவது அழைத்து ஒரு ரிசப்சன் நடத்திவிடலாம் என முடிவு செய்து நாள் குறித்தனர். அதற்காக இவர்கள் ஆட்டயப் போட்டு சென்ற ஐந்து லட்சத்தை பிடுங்கி கொண்டார்கள். ரிசப்சன் முடியும் வரை இருவரையும் நெருங்கவே விடவில்லை. ஒரு வாரத்தில் ரிசப்சனை நடத்தினர். சொந்த பந்தங்களை அழைத்து ஓடிப்போனவர்களுக்கு வரவேற்பு விழா.

ரிசப்சன் முடிந்த அன்றே கலையரசனின் பாட்டியை நாய் கடித்துவிட்டது. பாட்டி என்றால் அப்பாவின் அம்மா. அதுவும் தெருவில் அழையும் ஒரு சொறி நாய். கிழவியை தூக்கி சென்று ஆஸ்பத்தரியில் போட்டு குணப்படுத்தி கொண்டு வந்து வீட்டில் போட்டார்கள். கட்டைப் போட்டுக் கொண்டு கட்டிலில் கிழவி படுத்திருக்கும் போது, நாம் எப்படி முதலிரவு கொண்டாடுவது என தள்ளி வைத்தார்கள்.

அஸ்டமி, நவமி என தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். கலையரசன் முதலே காய்ந்து போய் கிடந்தவன் சறுகாகிக் கொண்டிருந்தான். இதில் நர்மதா வேறு அடிக்கடி முன்னால் வந்து சூடேற்றிக் கொண்டிருந்தாள். ஓடிப்போன போதே கொடைக்கானல் போய் காட்டேஜை வாடகைக்கு எடுத்திருந்தால் எப்போதோ சம்பவத்தை சிறப்பாக நடத்தியிருக்கலாம். இவர்கள் கையில் சிக்கி இரண்டு வார காலம் இழுபறியாகிவிட்டது. காதலிக்கும் போது இருவரும் இதற்கு முயற்சி செய்யவில்லை. முயற்சி செய்யவில்லை என்பதை விட அவர்களுக்கு வாய்க்கவில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் விளையாடியிருப்பார்கள். அவர்கள் அவ்வளவு யோக்கியமெல்லாம் இல்லை. எப்படியோ ஒரு வழியாக முதலிரவுக்கு முடிவு செய்தார்கள். சிறப்பு இன்று முதலிரவு.

மச்சி பாத்து.. கவனமா பண்ணு.. சொதப்பீராத நண்பன் கார்த்தியின் அறிவுரை.

உனக்கு எந்த நேரத்துல என்ன டவுட்டுனாலும் எனக்கு ஒடனே கால் பண்ணு நா உனக்கு க்ளியர் பண்ற. உனக்காக  இருவத்தினாலு மணி நேர சேவைல நா இருக்கறண்டா என்று தைரியம் கொடுத்தான் நண்பன் வினோத்.

நீங்க கொஞ்சம் மூடுங்க.. நாங்க பாத்துக்கறோம். எங்களுக்கும் கொஞ்சம் இதப்பத்தி தெரியும் என்றான் கலையரசன்.

மச்சி நீ வாங்கி குடுத்த சாராயத்துக்காக நாங்க இத சொல்லுல. உண்மையாவே உன்னோட நல்வாழ்வுக்காக சொல்லீட்ருக்கறோம் என்றான் கார்த்தி.

ஒரு புண்ணாக்கும் வேண்டா

நல்ல நேரத்திற்காக காத்திருந்தார்கள். எவண்டா இந்த நல்ல நேரத்த கண்டுபுடுச்சது என சலித்துக் கொண்டிருந்தான் கலையரசன். ஜாதகம். ஜோசியம். நல்லநாள், நல்லநேரம் என இவர்கள் செய்யும் அட்டூழியங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருந்தான். நல்லநேரம் வந்ததும் இருவரையும் முதலிரவு அறைக்குள் அனுப்பினர்.

உள்ளே வந்தவன், அப்பாடா.. இப்பவாவது விட்டானுகளே என்றான். நர்மதா சிரித்தாள். காய்ந்த மாடு கம்பிற்குள் புகுந்தது போல் உடனடியாக அதிரடி ஆக்சனில் இறங்குவது சரியாகாது. இந்த இரவு மட்டுமல்ல இனி வரும் இரவுகளும் நமக்காகத்தான். பகலும் கூட. கொஞ்ச நேரம் பொறுமை காப்பது தவறில்லை. சிறிது நேரம் எதையெதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். சிற்சில சீண்டல்களும், தீண்டல்களுமாக நகர்ந்தது நேரம்.

ஸ்டார்ட் பண்லாமா என்றான்

ஆஃப் பண்ணு என்றாள்

காமத்திற்கான வெளிச்சம் எது? எவ்வளவு? அதிகப்படியான வெளிச்சமும் ஆகாது. கும்மிருட்டும் ஒத்துவராது. அடர்ந்த காட்டிற்குள் படர்கிற நிலவொளி அளவுதான் சரியானது. அதிக வெளிச்சத்தை அணைத்து விட்டு, குறைவான வெளிச்சத்தை எரிய விட்டார்கள்.

காமம் எதிலிருந்து தொடங்குகிறது? முத்தத்திலிருந்து. முத்தம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? உச்சியிலிருந்தா? பாதத்திலிருந்தா? அது அவரவர் விருப்பம் சார்ந்தது. எங்கிருந்து தொடங்கினும் முத்தம் முடிவது உதட்டில்தான். அது முடிவல்ல. உண்மையான காமத்தின் தொடக்கம் அங்கிருந்துதான்.

தொடங்கியது.

ஆடைகளை களைய நேர விதிகள் இருக்கிறதா? காமம் தொடங்கி எவ்வளவு நேரத்தில் ஆடைகளை களையலாம். அதை பெண்மைதான் தீர்மானிக்கிறது. அவள் எப்போது அனுமதிக்கிறாளோ அப்போது. இருவரின் ஆடைகளும் ஒவ்வொன்றாக களைந்து கொண்டிருக்க, ஒரு ஓரத்தில் சாதி அதனின் வாய்க்குள் விரலை விட்டு நாக்கைப் பிடுங்கி சாகத் தயாராகிக் கொண்டிருந்தது.

அந்த மிதமான இருட்டில்… இல்லை வெளிச்சம் என்பதுதான் சரியாக இருக்கும். அந்த மிதமான வெளிச்சத்தில், அமைதியான சூழ்நிலையில் நினைவு லேசாக மங்கிய நிலையில் லேசான முனகல் சிணுங்களுக்கிடையில்..

நீ எப்படா மனுசனா மாறுவ? என்றாள் நர்மதா.

எழுதியவர் : ரமேஷ்குமார் (4-Nov-18, 11:10 am)
சேர்த்தது : ரமேஷ்குமார்
Tanglish : theeraa virunthu
பார்வை : 476

மேலே