தீதும் நன்றும்

மருந்துக்கடையில் எலி மருந்து வாங்கினான் அரசன். அவன் வீட்டில் எலிகளே இல்லை. பின் எதற்க்காக எலி மருந்து? மருந்து எலிகளுக்கு இல்லை அவனுக்குதான்.எலி மருந்து சாப்பிட்டால் விளைவு என்னாகும் என்பது கண்டிப்பாக அவனுக்கு தெரியும். மனிதனுக்கு என்ன விளைவை உண்டாக்கும் என்பதை ஆராய எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. எலிகளுக்கு என்ன விளைவை உண்டாக்கும் என்பதை ஆராய மனிதனை பயன்படுத்துவதில்லை. அந்த தொழில்நுட்பமும் இன்னும் வரவில்லை. அதனால் இவன் வாங்கிய எலி மருந்து ஆராய்ச்சிக்கு இல்லை. என்ன காரணத்திற்காக வாங்கியிருப்பான்? இன்று அவனுக்கு நடந்த கொடூரமே காரணமாக இருக்கும்.

பெட்டிக்கடையில் சிகெரெட் வாங்கி பற்ற வைத்தான். காசு கொடுக்கும் போது ஒரு ருபாய் விலை ஏறி விட்டதாக கடைக்காரன் சொன்னான். அரசன் ஒரு நொடி யோசித்தான். இதற்காக கூட எலி மருந்து சாப்பிடலாம். காசை கொடுத்து விட்டு புகையை ஊதினான்.

புகை காற்றில் பரவ, எதிரில் ஒரு அழகான பெண் நின்றிருந்தாள். நிச்சயம் அவளுக்கு கணவன் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் கல்யாணம் ஆனதற்க்கான எந்த அணிகலன்களும் அவள் அணிந்திருக்கவில்லை. அவளை உற்று பார்த்தான். அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் மிகவும் அழகாக இருக்கிறாள். கண்டிப்பாக சினிமா நடிகையை போல் அவளில்லை. உண்மையிலேயே அவள் அழகாக இருக்கிறாள். வாழ்வின் கடைசி வரியை எழுதிக்கொண்டிருக்கிறான் அரசன். இந்த நிலையில் இப்படியொரு குறுக்கீடு அனாவசியமானது. சிகெரெட் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது. அரசனும்தான். அவள் ஒரு பார்வை பார்த்தால் போதும் பெட்டிக்கடை முன்பே எலி மருந்தை சாப்பிட்டு விடலாம். ஆனால் பார்க்கத்தான் மாட்டேன் என்கிறாள்.

இந்த நிலையில் அரசனுக்கு விபரீத ஆசையெல்லாம் தோன்றியது. அவளை காதலிக்கலாமா என்று நினைத்தான் மனம் முகத்தில் காறி துப்பியது. காமம் கொள்ளலாமா என்று நினைத்தான் மூத்திரமே பெய்து விட்டது. ஆசையை அடக்கி நின்றிருந்தான். சரக்கென அவளின் முன்னால் ஒரு காஸ்ட்லி பைக் வந்து நின்றது. அதில் கரு கருவென ஒருவன் இருந்தான். அவள் சிரித்தாள். அவன் முகத்தில் வெள்ளையாக ஏதோ எதிரொளித்தது. அரசன் புரியாமல் பார்த்தான். உற்றுப்பார்த்தான். பற்கள்…. அவனும் சிரிக்கிறான். அவள் சிரித்தபடியே ஏறி அமர்ந்தாள். அவளுக்கு கணவன் இல்லைதான் ஆனால் காதலன் இருக்கிறான். ஆனால் அவள் அந்த கருப்பனை காதலிப்பது ஏற்புடயதல்ல. எதை வைத்து அவனை அவள் காதலித்திருப்பாள்? அவன் நிச்சயம் காந்தி இல்லை, நேதாஜியுமில்லை, கடைசிக்கு தனுஸ் போன்றவனுமில்லை.

அரசன் அவளுக்கு பொருத்தமானவனா இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் கருப்பன் நிச்சயம் பொருத்தமானவனில்லை. இருவரும் பறந்து விட்டார்கள். ஒருவேளை அவள் கருப்பனை காதலிக்காமல் அரசனை ஒரு பார்வை பார்த்திருந்தால் எலி மருந்து தேவைப்படாமல் இருந்திருக்கலாம். அரசனின் வாழ்க்கை புத்தகத்திலும் ஒரு புள்ளியாகவாவது காதல் வந்து மறைந்துவிட்டது. காதல், ஒரு விளக்க முடியாத உணர்வு. தவிர்க்க முடியாத உணர்வு.

மனிதன் ஒரு முறைதான் இறக்க முடியும். இன்னொரு முறை வாய்ப்பு இருந்தால் அவள் எனக்கு கிடைக்காததற்க்காக அல்ல, கருப்பனை காதலித்ததற்க்காக இன்னொரு முறை இறந்திருக்கலாம். என்று மனதில் நினைத்தபடியே சிகெரெட்டை கீழே போட்டு காலில் மிதித்தான்.

எலி மருந்து வீண் போகவில்லை. அந்த இடத்தை விட்டு நகர முற்ப்பட்டான். சர்ரென்று ஒரு கார் வந்து அரசனை மறித்து நின்றது. அரசன் பார்த்தான். கார் கண்ணாடி இறங்கியது. உள்ளே சந்தோஸ். அரசனின் பள்ளித்தோழன். சந்தோஸைப் பற்றி மறக்க முடியாத சம்பவமொன்று இருக்கிறது. பள்ளி அரையாண்டுத் தேர்வில் ஜாலியன் வாலாபாக் படுகொலை அய்ந்து மார்க் கேள்விதான். ஆனால் சந்தோஸ் அதற்க்கு பதினைந்து மார்க்கிற்க்கு பதில் எழுதியிருந்தான். அவன் எழுதியதில் முக்கியமானது, ஜாலியன் வாலாபாக் மிகவும் நேர்மையானவர் என்றும் இதுவரை அவரைப் போல் உத்தமர் உலகில் பிறக்கவில்லையென்றும், அவரை அனியாயமாக ராஜராஜசோழன் கொன்று விட்டதாகவும் எழுதியிருந்தான். இதற்காக வாத்தியார் அவனுக்கு கொடுத்த தண்டனைதான் முக்கியமானது. அவன் எழுதிய இந்த புதுக்கவிதையை சமூக அறிவியல் பிரியட் முடியும் வரை திரும்ப திரும்ப எல்லோருக்கும் படித்துக் காட்ட வேண்டும் என்பதுதான்.

அரசன் சந்தோசோடு பள்ளியில் மட்டுமே படித்தான். கல்லூரியில் இல்லை. ஏனென்றால் அரசன் கல்லூரி செல்லவே இல்லை. பள்ளிப்பாடம் மட்டுமே.பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாக வந்தும் கல்லூரியில் சேரவில்லை. காரணம் குடும்ப சூழ்நிலை மற்றும் நம் அரசாங்கத்தின் அவல நிலை.

ஏண்டா இங்க நின்னுட்ருக்ற? சந்தோஸ் கேட்டான்.

சும்மாதான் அரசன் சொன்னான்.

சரி வா கார்லேரு.

எதுக்கு?

சும்மா ரவுண்ட் போலாண்டா.

அரசன் காரிலேரினான். கார் புறப்பட்டு சென்றது.

ஏண்டா இன்னைக்கு கட தொறக்கலியா? என்று காரோட்டியபடியே கேட்டான் சந்தோஸ்.

இல்ல லீவு விட்டுடேன் என்றான் அரசன்.

அரசன் பல பேரிடம் கடன் வாங்கி ஒரு மொபைல் கடை வைத்தான். இன்று எலி மருந்து வங்க அதுதான் ஆரம்ப சுழி என்பது அப்போது அவனுக்கு தெரியவில்லை.

இந்த சமூகம் யாரை வாழ வைக்கிறது யாரை வீழ வைக்கிறது என்பதில் ஒரு குழப்பம் நிலவிக்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் கடனை கட்டுமளவிற்கு வருமானம் வந்து கொண்டுதானிருந்தது. கடன் முடிந்தால் வருமானம் மிச்சமாகும் என்கிற நம்பிக்கையும் அரசனுக்கிருந்தது.

எதிர்பாராத விதமாக அரசனின் மொபைல் கடை எதிரில் இன்னொரு மொபைல் கடை ஆரம்பித்தார்கள். அது இன்னொரு மொபைல் கடையாக இருந்திருந்தால் பரவாயில்லை. அது மொபைல் கடையல்ல கடல். அவர்களும் அப்படி சொல்லித்தான் ஆரம்பித்தார்கள். அந்த கடல் அரசனின் கடையை பெட்டிகடையாக பார்க்க வைத்தது.

கண் கவரும் மின் விளக்குகள், கண்ணாடியில் வடிவமைப்புகள், அந்த சுற்று வட்டாரத்தில் யாருமே தர முடியாத சலுகையில் மொபைல்கள், ரீச்சார்ஜ்கள், அடம்பரமான விளம்பரங்கள், அட்டகாசமான ஆஃபர்கள் என மக்களை ஈர்த்தது. அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்க வக்கில்லாமல் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு தன் முட்டாள்தனத்தை பெருமையாக பேசும் மக்கள் இதிலும் விதி விலக்கல்ல.

கடன் வாங்கி கடை வைத்தவன் கடனுக்கு ரீச்சார்ஜ் செய்து கொடுத்தான். இப்படியாவது வாடிக்கையாளர்களை வசப்படுத்தலாம் என்று நினைத்தான். ஆனால் வாடிக்கையாளர்கள் வேறு மாதிரி நினைத்தார்கள். காசிருந்தால் ஆடம்பரக்கடை. காசில்லையென்றால் அரசனின் கடை. முன்பாவது கடனை கட்டுமளவிற்க்கு வருமானம் வந்தது. இப்போது அடியோடு நின்று விட்டது. கடனுக்கு பொருள் வாங்கி செல்பவர்கள் சிலர் காந்தி கணக்கில் எழுதி விடுகிறார்கள். சிலர் ஞாபகம் வரும் போது தருகிறார்கள்.

அரசனும் மேலும் கடன் வாங்கி தன் கடையில் இயன்றளவு ஏதேதோ செய்து பார்த்தான். நாய் நரியோடு சண்டையிடலாம், புலியோடு முடியாதல்லவா. திறமையும் உழைப்பையும் மட்டுமே நம்பி தொழில் தொடங்கியவன், பணம் படைத்தவன் முன்னால் தோற்றுப் போனான்.

கடன் கொடுத்தவர்களில் ஒருவர் கடையை எழுதிக் கேட்டார். அரசனும் வேறு வழியின்றி எழுதிக் கொடுத்து விட்டான். ஆனாலும் கடன் தீர்ந்து விடவில்லை.

ஏண்டா லீவு விட்டுட்ட? சந்தோஸ் கேட்டான்.

இன்னைக்கு பெருசா எதும் சேல்ஸ் ஆகாது அதான் என்றான் அரசன். சந்தோஸுக்கு விசயம் எதுவும் தெரியாது.

அப்போது சந்தோஸின் மொபைல் ஒலித்தது. எடுத்து அட்டென் செய்து பேசினான். சொல்லுடி என்றான். டக்கென அரசன் அவனை பார்த்தான். அது சந்தோஸின் வருங்கால மனைவியாகவும் இருக்கலாம். அல்லது தற்காலிக காதலியாகவும் இருக்கலாம். ஃப்ரண்டு இருக்காண்டி அப்புறமா கால் பன்றேன் என்றான். அவள் இந்த இடத்தில் கண்டிப்பாக முத்தம் கேட்டிருக்க வேண்டும். சந்தோஸ் மறுத்ததற்க்காக அவள் அரசன் மேல் கோபப்பட்டிருக்கவும் கூடும். சந்தோஸின் இன்னொரு மொபைல் ஒலித்தது. ஓகே பை என கட் செய்து விட்டு அந்த மொபைலை எடுத்து பேசினான். சொல்லுடி… அரசன் சற்று அதிர்ந்தவனாகவே பார்த்தான். சந்தேகமே இல்லை இவர்கள் இவனின் தற்காலிக காதலிகள்தான்.அரசன் சந்தோஸ் பேசும் மொபைலை பார்த்து விட்டு தன் மொபைலை பார்த்தான். சைனா மேக் சைடில் சீரியல் பல்பு எரியும் மொபைல் அது.

அரசனின் வீட்டிற்க்கு ஒருவர் வந்தார். அரசனை அம்மாவிடம் கேட்டார். அவரும் கூப்பிட்டு விட்டார். அரசன் வெளியே வந்தான். அவர், பொண்டாட்டிய ஆஸ்பாத்திரியில சேத்திருக்கரேன். ரொம்ப அர்ஜெண்ட்டு… வாங்குன பணத்த கொஞ்சம் குடுத்தீனா….

அரசன் அவரை ஒரு மொபைல் கடைக்கு அழைத்து சென்றான். தான் வைத்திருந்த ஒரு காஸ்ட்லி மொபைலை காட்டி விலை கேட்டான். அய்யாயிரம் என்றான் கடைக்காரன். பதினஞ்சாயிரத்துக்கு வாங்குனேன். நீங்க வாங்குன வெலைக்கே நானும் வாங்க முடியுமா? சூழ்னிலை, பேரம் பேச முடியாத நிலை. ஒருவனின் நிலைதான் அவனின் விலையை தீர்மானிக்கிறது. பணத்தை வாங்கி அவரிடம் கொடுத்தான்.

ஓகே வைடி அப்புறமா கால் பன்றேன். சந்தோஸ் மொபைலை கட் செய்தான்.

சந்தோஸ் அரசனிடம், ஒருத்திகிட்ட பேசிட்டு இருக்கும் போது இன்னொருத்தி கால் பண்ணி வெய்ட்டிங்கால் வந்தா சந்தேக பட்றாளுக மச்சான் அதான் ஒவ்வொருத்திக்கும் ஒரொரு மொபைல் யூஸ் பண்ணிட்ருக்கறேன் என்றான்.

நீ என்ன பண்ணிட்ருக்கற என்று கேட்டான் அரசன்.

நானா? நா அப்பாவோட பிஸினஸ பாத்துட்ருக்கறேன் என்றான் சந்தோஸ்.

அப்டி சொல்லிட்டு ஊர் சுத்திட்டு இருக்கற, அப்பஞ்சொத்துல என்ஜாய் பண்ணிட்ருக்கற? அரசன் கேட்டான்.

ம்.. அப்படியும் வெச்சுக்கலாம் என்றான் சந்தோஸ். அரசன் எதுவும் பேசவில்லை.

ஆமா உன் பைக் எங்கடா? சந்தோஸ் கேட்டான்.

வித்துட்டேன்.

வித்துட்டியா ஏன்?

வேற பைக் வங்குலானுதான்.

அரசனும் பாலுவும் வீதிக்குள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். பாலு அரசனை விட பத்து வயது மூத்தவர். அரசனின் ஆலோசகர். அரசனின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்பவர். சில நாட்களாக துக்கங்களில் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அரசனுக்கு கடன் கொடுத்த கந்தசாமி அவரின் அல்லக்கை மயில்வாகனனோடு அங்கே வந்தார். அரசன் அவரை பார்த்து சற்று அதிர்ந்தான். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார் கந்தசாமி. இன்னும் பத்து நாட்களில் திருப்பி தந்து விடுவதாக சொன்னான். நீ பணத்தை திருப்பி தரும் போது பைக்கை வாங்கி கொள் என்று சொல்லி தன் அல்லக்கை மயில்வாகனனை பைக்கை எடுத்து வர சொன்னார். அரசன் எவ்வளவு சொல்லியும் கந்தசாமியின் காதில் கேட்கவேயில்லை. காசில்லாதவனின் வார்த்தைகள் காசுள்ளவனின் காதில் எப்போதுமே விழுந்ததில்லை. அதிலும் அரசன் கடன் பெற்றவன். பைக்கை ஓட்டி சென்றே விட்டார்கள்.

அரசன் ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தான்.

ஏண்டா ஒரு மாதிரியாவே இருக்கற எதாவது பிரச்சனையா? சந்தோஸ் கேட்டான்.

அப்டியெல்லாம் இல்ல சமாளித்தான் அரசன்.

எதாவதுனா சொல்றா ஹெல்ப் எதாவது வேனுமா? சந்தோஸ் கேட்க, சந்தோஸையே பார்த்து விட்டு,

எனக்கு சரக்கு வாங்கி தர்றியா? என்று கேட்ட அரசனை புரியாமல் பார்த்தான் சந்தோஸ்.

சரக்கு டம்ளரில் ஊற்றப்பட்டது. அரசனும் பாலுவும் எடுத்து குடித்தனர். கடன் ரொம்ப ஆயிருச்சு எதாவது பன்னனும்ணா என்றான் அரசன். நோட்டு மாத்தலாமா ஒரு லச்சத்துக்கு ரெண்ட்ற குடுப்பாங்க ரெண்டு தடவ மாத்துன போதும் நீ ரிலிப்பாயிர்லாம் என்றார் பாலு. அப்டி பண்ணனும்னா ஒரு லச்சம் வேண்டாணா ஒரு கத்தி போதும் என்ற அரசனை எதிர்கொள்ள முடியாமல் பார்த்தார். சற்று யோசித்து விட்டு, தனக்கு சேர் மார்க்கெட் பிஸினஸ் செய்யும் ஒருவரை தெரியுமெனவும் நீ எப்டியாவது ஒரு லச்சம் திரட்டி கொண்டு வந்தால் அவரிடம் பேசி நீயும் அந்த பிஸினஸ் செய்தால் ஒரு வருடத்திற்குள் உன் கடனை அடைத்து விடலாம் என்றார் பாலு. மறுபடியும் கடனா? என்று யோசித்தான் அரசன்.

மதுபானக்கடை முன்பு காரை நிறுத்தினான் சந்தோஸ். அரசனிடம் பணத்தை தந்து போய் சரக்கு வாங்கிட்டு வா என்றான். பொதுவாக முதலாளித்துவ நாட்டில் பணம் போடுபவன் வேலை செய்வதில்லை. வேலை வாங்குபவனாகத்தான் இருக்கிறான். அரசன் இறங்கி சென்று சரக்கு வாங்கி வந்து காரிலேறினான். கார் புறப்பட்டு சென்றது.

சேர் மார்க்கெட் ஆபிஸ் வைத்திருக்கும் வினோத் என்பவனை அரசனும் பாலுவும் சந்தித்து பேசினர். அவன் கோல்டு, பிளாட்டினம், காப்பர், உப்பு, மிளகாய், வெண்டைக்காய், கத்தரிக்காய் என்றும், அதிகமாய் ஆசை படக்கூடாது என்றும், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, ஓரளவு லாபம் வந்தால் நிறுத்திக் கொள்ள வேண்டும், அதிக முதலீடு அதிக லாபம், குறைந்த முதலீடு குறைந்த லாபம் என்றெல்லாம் ஏதேதோ பேசினான். பணத்தை அவனிடம் கொடுத்தார்கள். இதற்குதான் இவ்வளவு கருத்து கொப்பளிப்புகள்.

நாட்கள் ஓடின. பணம் வந்தபாடில்லை. இதோ காப்பரில் முதலீடு செய்திருக்கிறேன், கோல்டில் முதலீடு செய்திருக்கிறேன், ப்ளாட்டினத்தில் முதலீடு செய்திருக்கிறேன் என்று சொல்லி கொண்டிருந்தானே தவிர முதலீட்டுக்கு லாபம் என்று ஒன்றுருக்கிறது என்பதை அவன் மறந்தவனாகவும் தெரியவில்லை. எதோ சமாளித்துக் கொண்டிருந்தான். நேரில் சென்று பார்த்தனர் அரசனும் பாலுவும்.

கோல்டு இப்டி சரியும்னு நா எதிர்பாக்கவே இல்ல ஃபுல்லா கோல்டு வாங்கிருந்தேன். செம அடி. ஒரு மாசம் பொறுங்க ஒன்னு உங்க பணத்த திருப்பி குடுத்தறேன். இல்லீனா வேற எதாவதுல முதலீடு பண்ணி உங்களுக்கு லாபம் எடுத்து தர்றேன் என்றான் வினோத். அதற்கு கோபமுற்று தகராறு செய்தார் பாலு. நீ பணம் தர்ற வரைக்கும் உன்னோட கார் எங்க கிட்ட இருக்கட்டும் என்றார். அரசன் அவரைத் தடுத்தான். கந்தசாமி செய்த அதே அயோக்கியதனத்தை நானும் செய்வதா? மனிதனாக வாழ கொஞ்சம் பணம் தேவை என்றுதானே தொழில் தொடங்கினேன். அதே பணம் என்னை மிருகமாக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி பாலுவை அழைத்து வந்து விட்டான்.

கடன் பெற்றிருந்த அதே கந்தசாமியிடம்தான் கையில் காலில் விழுந்து மறுபடியும் ஒரு லட்சம் கடனாக பெற்றான். பழைய கடனுக்கே பதில் சொல்ல முடியாத நிலையில் இந்த ஒரு லட்சத்திற்கு எப்படி பதில் சொல்வது? வீட்டின் மூலையில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான்.

சந்தோசின் கார் ஓர் காட்டிற்குள் வந்து நின்றது. அரசனும் சந்தோசும் இறங்கி வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர். இருவரும் சரக்கை ஊற்றி குடித்தனர். அரசனுக்கு கண்ணில் வெறி ஏறியது.

அரசன் வீதிக்குள் சென்று கொண்டிருந்தான். சற்று தொலைவில் கந்தசாமி பைக்கில் வந்தார். டக்கென ஒளிந்து கொண்டான். இருப்பினும் கந்தசாமி பார்த்தபடியே சென்றார்.

தன் வீட்டிலிருந்து அரசனுக்கு கால் செய்தார் கந்தசாமி. அரசன் தன்னுடய வீட்டிலிருந்தான். மொபைலை எடுத்து பார்த்தான். கந்தசாமி என தெரிந்ததும் அழைப்பை ஏற்கவில்லை.

தொழில் செய்கிறேன் என்று ஊர் முழுக்க கடன் வாங்கி வைத்திருக்கும் மகனை எந்த பெற்றோராவது கொஞ்சுவார்களா? வழக்கம் போல் அப்பா அர்ச்சனை செய்ய அம்மா தூபம்தூபம் காட்ட கோபத்தில் சாப்பிடாமல் வெளியேறினான் அரசன்.

இந்த பசி காசில்லாத போதுதான் அதிகமாய் துன்புறுத்தும். பசிக்கு தெரியாதல்லவா தன்னை ஆற்ற காசு வேண்டுமென்று. பசி என்பது இயற்க்கை. அதற்கு உணவு என்பதும் இயற்க்கை. ஆனால் இரண்டுக்குமிடையில் பணம் என்ற ஒன்று இருக்கிறதே அது செயற்க்கை. மனிதனால் செய்யப்பட்டது. மனிதனுக்கு பசி உண்டாகிறது. அதைப் போக்க மண்ணில் உணவு விளைகிறது. இதற்க்கிடையில் சம்மந்தமில்லாமல் பணம் எதற்கு வருகிறது.

பாக்கெட்டில் இருபது ருபாய்தான் இருக்கிறது. டீ கடையில் போய் டீயும் பன்னும் சாப்பிடலாம் என்று நினைத்து சென்றான். அதற்கும் வழியில்லை. டீ கடையில் கந்தசாமியும் அல்லக்கை மயில்வாகனனும் நின்றிருந்தனர். இது இயற்கையா? செயற்கையா? சோர்ந்து அங்கேயே உட்கார்ந்தான்.

அப்போது அவ்வழியே ஒரு சிறுவன் வந்தான். அவனை அழைத்து அவனிடம் பணத்தை கொடுத்து டீயும் பன்னும் வாங்கி வர சொன்னான். மீதிக்கு சாக்லேட் வாங்கி கொள்ளச் சொன்னான். சிறுவனும் காசை வாங்கி சென்றான். அரசன் எட்டி பார்த்தான். இன்னமும் கந்தசாமியும் அல்லக்கை மயில்வாகனனும் அங்கேயே நின்றிருந்தனர். சிறுவன் வந்து டீயையும் பன்னையும் கொடுத்து விட்டு மீதி சில்லரையை அரசனின் பாக்கெட்டில் போட்டான். டேய் பரவால்ல சாக்லேட் வங்கிக்கடா என்றான். ப்ச் பரவால்லணா என்று சொல்லி சிறுவன் சென்றான்.

உதவி செய்ததற்கு ஊழியம் வாங்க மறுத்த சிறுவனை பார்த்து விட்டு டீ கடையில் நின்றிருந்த கந்தசாமியை பார்த்தான். கந்தசாமிதான் சிறுவனாக தெரிந்தார். டீயையும் பன்னையும் சாப்பிட ஆரம்பித்தான். முன்னால் ஒரு பைக் வந்து நின்றது. நிமிர்ந்து பார்த்தான். கந்தசாமியும் அல்லக்கை மயிவாகனனும்.

என்றா என்னய பாத்தா ஓட்ற ஒளியற போன் பன்னா போன் எடுக்க மாட்டிக்கிற என்றார் கந்தசாமி.

இன்னும் பத்து நாள்ல பணம் ரெடி பண்ணி தந்தறணா என்றான் அரசன்.

எத்தன பத்து நாள்றா உனக்கு அறிவு இருக்குதா இல்லையாடா? சோத்த திங்கிறியா? பியத்திங்கிறியா?

எதையும் சாப்பிடாமல் காய்ந்த வயிற்றோடு இருப்பவனிடம் கேட்க கூடாத கேள்வி.

பாத்து பேசுங்ணா என்றான் அரசன்.

என்றா பாத்து பேசறது ப்ராடு பையங்கிட்ட என்ற கந்தசாமியின் வார்த்தை அரசனை மிகவும் காயப்படுத்தியது. நேர்மைதான் அரசனின் இந்த நிலைக்கு காரணமென்று தெரியாமல் விடப்பட்ட வார்த்தை.

ப்ராடு அது இதுனு பேசுனிங்னா டென்சனாயிருவேன் கோபத்தில் அரசன் வார்த்தையை விட, வாக்குவாதம் முற்றியது.

கோபமுற்ற கந்தசாமி அரசனை ஓங்கி அறைந்தார். அரசனும் அவரை திருப்பி அறைந்தான். அல்லக்கை மயில்வாகனன் அரசனை அடிக்க செல்ல கந்தசாமி தடுத்து அவன தோட்டத்திற்கு கொண்டு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றார். அரசன் அதிர்ந்தான்.

சரக்கை ராவாக குடித்தான் அரசன். சந்தோஸ் போதை மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தான்.

பணம்.. எந்த தகுதிய வெச்சுடா ஒருத்தண்ட்ட வந்து சேருது? என்று கேட்டான் அரசன்.

தெரிலியே மச்சான் என்றான் சந்தோஸ்.

தோட்டத்து பங்களாவில் அரசனின் ஆடையெல்லாம் உருவி நிர்வாணமாக ஐந்தாறு பேர் அடித்து உதைத்தனர். அடியை விட ஆடை இல்லாததே வலியை கொடுத்தது. மானம்.. உயிரை விட பெரியது. இவர்களுக்கு கோபமென்றால் கொன்றிருக்கலாம். மானபங்கம் படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு ஆண் தன் நிர்வாணத்தை சக ஆண்களிடம் காட்டி கிடப்பது எவ்வளவு கொடுமையானது. இயலாமை தரும் கோபம் மிகவும் கொடூரமானது. திருப்பி அடிக்க வக்கில்லாதவனை திருப்பி திருப்பி அடிப்பது எவ்வளவு கேவலமானது. சக்கையாய் பிளிந்து நிர்வாண உடலை தூக்கி வெளியே எறிந்தனர். கூனிக்குறுகி தனக்குள்ளே தன்னை ஒழித்துக்கொண்டான். அரசனின் ஆடையை தூக்கி வெளியே எறிந்தனர்.

இன்னும் ஒரு வாரத்துல பணம் வந்து சேர்ல இத விட கொடுமைய அனுபவிப்ப. மிரட்டல் விட்டு உள்ளே சென்றார் கந்தசாமி. இதை விட கொடுமையா? இதையே என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று நினைக்க அரசனின் கண்களில் நீர் வடிந்தது.

அரசன் சந்தோஸை உற்றுப் பார்த்தான். சந்தோஸ் போதை தலைக்கேறி தள்ளாடிக் கொண்டிருந்தான். கழுத்தில் செயின், கையில் ப்ரெஸ்லெட், இரண்டு காஸ்ட்லி மொபைல், உயர்ரக ஆடை, அவனின் கார் என சந்தோஸின் ஒவ்வொரு பொருளையும் பார்த்தான்.

ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் வந்தவண்டா நா. அஞ்சுலியும் ஃபெயிலானவன் நீ. அஞ்சுலியும் ஃபெயிலான உனக்கு ஸ்கொடா கெடச்சுருக்றப்போ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்த எனக்கு கடைசிக்கு மாருதி 800வது கெடச்சுருக்கனும்ல என்றான் அரசன்.

ஆமாண்டா மச்சா என்றான் சந்தோஸ்.

தகுதியே இல்லாதவங்கிட்டயெல்லா பணம் போய் சேந்தா திறமை இருக்கறவன் பிச்சதாண்டா எடுக்கணும் என்றான் அரசன்.

ஆமாண்டா மச்சா என்றான் சந்தோஸ்.

இங்க பணந்தா ஒருத்தன தீர்மானிக்குதுனா அத எப்டி சம்பாதிக்கனும்ங்றத நாமதாண்டா தீர்மானிக்கனும் என்றான் அரசன்.

ஆமாண்டா மச்சா என்றான் சந்தோஸ்.

அரசன் தன் பாக்கெட்டில் இருந்த எலி மருந்தை எடுத்தான். டம்ளரில்கொட்டினான். பிராந்தியை அதில் ஊற்றினான். சந்தோஸைப் பார்த்தான். அவன் போதையில் தலை தொங்கியிருந்தான். டேய்….. என்று அரசன் சந்தோஸை அழைத்தான். சந்தோஸ் நிமிர்ந்து பார்த்தான். அரசன் அவனை உக்கிரமாக பார்த்தான்.

ஒரு சமூக விரோதி உருவாகிவிட்டான் என்று நீங்கள் நினைத்து விட்டால் அதை பொய்யென்று நான் மறுத்து பேச மாட்டேன்.

எழுதியவர் : ரமேஷ்குமார் (4-Nov-18, 7:00 pm)
சேர்த்தது : ரமேஷ்குமார்
பார்வை : 190

மேலே