போக்கிரி சங்கர்
கட்டிங்.. கட்டிங்.. கட்டிங்குங்ளா..? என்று மதுபானக்கடைக்கு வருபவர்களிடம் ஐம்பது ருபாயை வைத்துக்கொண்டு கோட்ருக்கு பாதி முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருந்தான் போக்கிரி சங்கர். ரொம்ப நேரமாகியது. யாருமே கிடைக்கவில்லை. எப்போதும் இவ்வளவு நேரம் இத்தனை பேரிடம் அவன் கேட்டதே இல்லை. வந்த ஐந்து நிமிடத்திற்குள் ஒன்றிரண்டு பேரிடம் கேட்டாலே சிறிது நேர சினேகிதர்கள் கிடைத்துவிடுவார்கள். இன்று ஏன் இப்படி? கை நடுங்குகிறது. உடல் உதறுகிறது. உடனடியாக குடிக்க வேண்டும். குடித்தே ஆக வேண்டும். சில காலமாக குடிக்காமலிருந்தால் அவன் காதில் யாரோ வந்து காறி காறி துப்புகிறார்கள். உருவம் தெரிவதில்லை. குரல் மட்டும் கேட்கிறது. நீயெல்லாம் ஒரு மனுசனா? இந்த பொழப்புக்கு.. போய் எவனையாவது…. என்று அசிங்கமாக பேசுகிறது அந்த குரல். கோபம் கொப்பளிக்கிறது. இன்றைக்கு ஏன் இந்த குடிகார நாய்களெல்லாம் கோட்ராகவே குடிக்கிறார்கள்?.. கட்டிங் குடித்தால் என்ன கேடு இவர்களுக்கு?.. என்று தனக்குள்ளே திட்டிக் கொண்டிருந்தான் போக்கிரி சங்கர்.
நேற்று இரண்டாயிரம் ருபாயை குடித்தே காலி செய்திருக்கிறான். இன்று கட்டிங்கிற்கு அழைந்து கொண்டிருக்கிறான்.
அப்போது ஒரு ஐந்து பேர் பைக்கில் வேகமாக வந்திறங்கினர். போக்கிரி சங்கர் அவர்களை பார்த்ததும் சற்று நடுங்கினான். வந்தவர்கள் சங்கரை இழுத்துப் போட்டு சராமாரியாக அடித்து உதைத்தனர். கண்டபடியாக, ஈவு இரக்கமில்லாத அடி. யார் இவர்கள்? எதற்காக இப்படி அடிக்கிறார்கள்? ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிக்க என்ன உரிமை இருக்கிறது? இவர்களுக்கு யாரிந்த உரிமையை கொடுத்தது?
நடந்தது இதுதான்..
ஆள் நடமாட்டமில்லாத ஒரு காட்டுப்பாதையில் ஒரு இளம்பெண் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவ்வழியே போக்கிரி சங்கர் சென்றான். இளம்பெண்ணைப் பார்த்தான். அவள் கையை பிடித்து தர தரவென இழுத்து சென்று அவள் கதற கதற கழுத்தில் இருந்த செயினை கலட்டிக் கொண்டு ஓடிவிட்டான். அந்த செயினை ரெண்டாயிர ருபாய்க்கு விற்றுதான் நேற்று முழுக்க குடித்திருக்கிறான். அதற்குதான் இந்த மரண அடி.
போக்கிரி சங்கரை அடித்து துவைத்து விட்டு ஐந்து பேரும் பைக்கை எடுத்து சென்று விட்டார்கள். அடிவாங்கி அலங்கோலமாய் நின்றிருந்தவனிடம்.. ஏப்பா இப்புடி போட்டு அடிச்சுட்டு போறானுங்க? என்று சில குடிமகன்கள் கேட்டதற்கு நேத்து ஒரு மேட்ரு சின்ன பஞ்சாயத்தாயிருச்சு என்றான் சிம்பிளாக. அவர்கள் இவனையே பார்த்தார்கள். அவர்களிடம்.. ஒரு கட்டிங் வாங்கித் தர முடியுமா ரொம்ப டயர்டா இருக்கு என்றான்.
சங்கர் குடிப்பதற்காக இது போன்ற சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுவான். அதற்காக அவனை கண்ட இடத்தில் கந்தலாக்குவார்கள். வீட்டில் அண்டாவை காணோமா? சங்கர் வந்து போயிருப்பான். சைக்கிளை காணோமா? சும்மாதானே நிற்கிறது என்று அதற்கு வேலை கொடுத்திருப்பான். குழந்தையின் அர்ணா, சார்ஜ் போட்டு வைத்திருந்த செல்போன்.. என்று எது கண்ணில் பட்டாலும் எடுத்து சென்று விற்று குடித்து விடுவான்.
சங்கர் எப்போதுமே எதையுமே உன்னுடையது என்னுடையது என்று பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாம் நம்முடையது என்று நினைப்பவன். நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும் என்ற வாசகத்தை மிகத் தீவிரமாக பின்பற்றக்கூடியவன். உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் மனிதர்களுக்கு பொதுவானது என்கிற சித்தாந்தத்தை வழிமொழியக் கூடியவன் சங்கர்.
ஏண்டா இப்டி அடி வாங்கி சாகற? உனக்கெல்லா வெட்கமே இல்லையா? என்று கேட்டால், நான் திருடும் பொருளையெல்லாம் விற்று மதுக்கடையில்தான் கொடுக்கிறேன். நான் கொடுக்கும் பணத்தில்தான் உங்களுக்கு வீட்டுக்கு இலவசப் பொருட்கள் வருகிறது. நான் நல்லவர்கள் பணத்தில்தான் குடிக்கிறேன். நீங்கள் குடிகாரர்கள் பணத்தில்தான் இலவச பொருட்களை வாங்குகிறீர்கள். இப்போது வெட்கப்பட வேண்டியது நானா? நீங்களா? என்று வெட்கித் தலை குனிய வேண்டிய கேள்வியை கேட்பான்.
ஆமாம். பொண்டாட்டி தாலியை அறுத்தவன், கடுகு டப்பாவில் காசு திருடியவன், குழந்தையின் அர்ணாவை அறுத்தவன், அடுத்தவன் வீட்டில் கை வைத்தவன், குழந்தையின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்தவன், பாட்டியின் சுருக்குப் பையை உருவியவன் என எல்லோரும் டாஸ்மாக்கில்தான் பணத்தைக் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தில்தான் இலவசப் பொருட்களை மக்கள் பல்லிளித்து வாங்கி கொள்கிறார்கள். இந்த வெக்கங்கெட்ட மக்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது போக்கிரி சங்கரை அடிக்க?
இவன் படும் கஸ்டங்கள், அவமானங்கள், அடிகள், துன்பங்கள், துயரங்கள், எல்லாமே அரை வயிறு சோற்றுக்கும் ஆஃப் பாட்டில் பிராந்திக்கும்தான். இவ்வளவு கஸ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அரசாங்கத்திற்கே திருப்பி கொடுத்து விடும் தியாகி போக்கிரி சங்கர்.
போக்கிரி சங்கருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். ஒரு மகள் இரண்டாம் வகுப்பும், ஒரு மகள் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள்.மனைவி பக்கத்து தறி குடோனில் வேலை பார்த்து இரண்டு மகள்களை வளர்த்து வருகிறாள். இதைப்பற்றியெல்லாம் போக்கிரி சங்கருக்கு கவலையேயில்லை. அரசங்கத்திற்கு வரி கட்டுவதுதான் அவனுக்கு முக்கியம். மனைவி சிறிது சிறிதாய் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கூட எடுத்து சென்று குடித்து விடுவான். இவனுக்குத் தெரியாமல் பணத்தை ஒளித்து வைப்பதே மனைவிக்கு பெரும்பாடு.
ஒரு சில நேரங்களில் வெறி கொண்டவனாய் கத்துவான். யாரோ என்னையத் திட்றாங்க.. குடிக்க சொல்றாங்க.. காறித்துப்புறாங்க.. பணங்குட்றி குடிக்கணும்.. என்று கத்தியபடியே மனைவியை அடித்து துன்புறுத்தி பணத்தை பிடுங்கி சென்று குடித்தால்தான் அமைதியாவான்.
போக்கிரி சங்கர் பிறவிக்குடிகாரனா?.. இல்லை இல்லவே இல்லை.. நிச்சயமாக இல்லை. எந்தவொரு மனிதனும் குடிகாரனாக பிறப்பதில்லை. சங்கரை குடிகாரன் என்று சொல்வது கூட தவறு. அவன் ஒரு குடிநோயாளி.
இன்று சங்கரை குடிகாரன் என்று வசைபாடும் இதே மக்கள்தான், ஒரு காலத்தில் மிகச்சிறந்த தொழில்காரன் என்று மெச்சினார்கள்.
ஆம்.. சங்கர் ஒரு டூவீலர் மெக்கானிக். அவ்வளவு தொழில் நேர்த்தி.குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் சர்வீஸ் செய்து முடித்து டெலிவரி கொடுத்து விடும் நேரம் பிசகாமை, பில்லில், செய்த வேலைக்கும் வாங்கிய பொருளுக்கான உண்மையான விலையை மட்டுமே வாங்கும் நேர்மை என சுற்று வட்டாரத்தில் எல்லோரையும் கவர்ந்திருந்தான் சங்கர்.
சங்கருக்கு எந்தவொரு கெட்டப்பழக்கமும் கிடையாது. தண்ணி, தம் உள்பட. விஜய் படம் ரிலிசென்றால் முதல்நாள் முதல்ஸோ பார்த்தே ஆக வேண்டும் அவனுக்கு. பார்த்தும் விடுவான். தீவிர விஜய் வெறியன். போக்கிரி படத்தை முப்பத்தேழு முறைப் பார்த்திருக்கிறான். அந்தப் படத்த எப்டிய்யா அத்தன தடவ.. என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படத்தை அத்தனை முறைப் பார்த்ததால்தான் சாதா சங்கர் போக்கிரி சங்கர் ஆனான்.
எப்போதும் பத்து பைக்குகள் எதாவது ஒரு வேலைக்காக நின்று கொண்டிருக்கும் பிஸி ஒர்க்சாப் சங்கருடையது. இதற்கு காரணம் அவனின் தொழில் நேர்த்தி மட்டுமல்ல. அவனின் அணுகுமுறையும், அணுசரனையும், பண்பும், பணிவும்தான்.
அதனால் சங்கரின் கடையில் இடப்பற்றாக்குறை இருந்தது. சங்கரின் கடைக்குப் பின்னால் ஒரு பெரிய காலி இடம் இருந்தது. அதில் செட் போல போடுவதற்கு தன் பில்டிங் ஓனர் பழனிசாமியிடம் சொல்லி அந்த இடத்துக்காரரிடம் பேசிக்கூடப் பார்த்தான். ஆனால் அந்த இடத்துக்காரர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. நிறையப் பேர் வேறு கடை பார்க்கலாமே என்று கூட கூறினார்கள். ஆனால் கடையை மாற்றும் எண்ணம் சங்கருக்கு துளி கூட இல்லை. அதற்கும் காரணமிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னால் அந்தக் கடையில் மாணிக்கம் என்பவர் ஒர்க்சாப் வைத்திருந்தார். மிகவும் நேர்மையானவர். திறமையான தொழில்காரர். ஒரு நாள் அவர் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் முன்னால் பதினோறு வயது சிறுவனாக வந்து நின்றான் சங்கர். அவர் அவனைப் பார்த்து யார் என்னவென்று விசாரித்த போது…
தன்னுடைய அம்மா அப்பா விபத்தில் இறந்து விட்டதாகவும், அத்தையின் வீட்டில் கொஞ்ச நாள் இருந்ததாகவும். அத்தையின் ”தவறான நடத்தை”யின் காரணமாக வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாகவும் சொல்லி அழுதான். ஆனால் மாணிக்கமோ நீ சின்னப்பையன் உன் அத்தை எப்டி இருந்தாலும் சகித்துக் கொண்டு சிறிது காலம் அவர்களுடன் இருப்பதுதான் உனக்கு நல்லது என்று அறிவுறுத்தினார். உடனே சங்கர், தன் சட்டையை கலட்டி முதுகை காண்பித்தான். பெரிய சூடு போடப்பட்டிருந்தது. மாணிக்கம் அதிர்ச்சியானார்.
தனக்கு மதியம் சாப்பிட கொண்டு வந்த சாப்பாட்டை சங்கருக்கு கொடுத்தார். பசியோடு இருந்தவன் அதை வாங்கி அள்ளி அள்ளி சாப்பிடுவதைப் பார்த்த மாணிக்கம் பரிதாபப்பட்டார்.
அன்றிலிருந்து அவரின் கடையிலேயே வேலை செய்து கொண்டும், அங்கேயே படுத்துக் கொண்டும், அப்படியே தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டிருந்தான் சங்கர். மாணிக்கத்திடம் இருந்த அதே நேர்மையும், தொழில் திறமையும் அப்படியே சங்கருக்கும் சொல்லிக் கொடுத்து அவனை சிறந்த மனிதனாகவும், தொழில்காரனாகவும் உருவாக்கிவிட்டார் மாணிக்கம். சிறப்பாக தொழிலையும் கற்றுக்கொண்டு இளைஞனாகவும் வளர்ந்து நின்றான் சங்கர்.
சங்கர் ஒரு பைக்குக்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தான். மாணிக்கம் ஒரு பைக்குக்கு இன்ஜின் பழுதுப் பார்த்துக் கொண்டிருந்தார். திடிரென்று மாணிக்கத்திற்கு வியர்த்தது. நெஞ்சு படப்படத்தது. நெஞ்சைப்பிடித்தார். சங்கர் நிமிர்ந்துப் பார்த்து ஓடி சென்று பிடிப்பதற்குள் சரிந்து விட்டார்.
சங்கர் தன் வாழ்வில் சந்திக்கும் இரண்டாவது பெரிய இழப்பு. தான் மிகவும் நேசிப்பவர்கள் வாழ்வின் கடைசி வரை தன்னுடன் வரப்போவதில்லைதான். அதற்காக தன்னை விட்டு சீக்கிரமே சென்று விடுவது எந்த விதத்தில் நியாயம்? பெற்றோரை இழந்து அனாதரவாக நின்ற போது கண்ட வெறுமையை மாணிக்கண்ணனை இழந்து நின்ற போது உணர்ந்தான்.
அண்ண உனக்கு இதுவரைக்கும் எதுமே பெருசா செய்லடா. அந்தக் கடைய இனி நீயே பாத்துக்கோ.. என்று மாணிக்கத்தின் மனைவி பத்மா கூற, நா எப்டிக்கா? எனக்கு என்ன தெரியும்? என்று சொல்லி அழுதான். உன்னால முடியுண்டா. அண்ணனே உனக்கொரு கட வெச்சுக் குடுக்கணும்னு சொல்லிட்ருந்தாரு, இப்போ.. அவரு கடையவே உனக்கு குடுத்துட்டாரு.. பாத்துக்கோ.. என்று அத்தனை பெரிய இழப்பையும் மனதில் வைத்துக் கொண்டு அவனை தெம்பூட்டினார்.
மாணிக்கம் ஒர்க்சாப் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சங்கர் ஒர்க்சாப் என்ற பெயரே உச்சரிக்கப்பட்டது. சங்கருக்கு அது தனி முகவரி கொடுத்தது. சங்கர் ஒர்க்சாப் என்றால் தெரியாதவர்கள் யாருமில்லை. அந்த வீதியின் வழிகாட்டி அவனின் ஒர்க்சாப். சங்கர் ஒர்க்சாப்கிட்ட வா, சங்கர் ஒர்க்சாப்கிட்ட நிக்கிற. சங்கர் ஒர்க்சாப்கிட்ட இருக்குற வீடு என பல பேருக்கு வழித்தடம் காட்ட உதவுவது சங்கரின் ஒர்க்சாப். அவன் ஓரளவு நல்ல நிலைக்கு வந்த பிறகு, பெற்றோரை இழந்து தன் பாட்டியிடம் வளர்ந்த வசந்தி என்ற பெண்ணைப் பார்த்து சங்கருக்கு கல்யாணம் செய்து வைத்தார் மாணிக்கத்தின் மனைவி பத்மா. சங்கரின் வாழ்வில் இப்படியொரு நல்ல விசயம் நடந்ததற்கு காரணம் கூட அந்த ஒர்க்சாப்தான். அதையும் தாண்டி அது அவனின் பள்ளிக்கூடம். அவன் வளர்ந்த இடம். உலகமறிந்த இடம். அதனால் அந்தக்கடை அவனின் உடம்பில் ஒரு அணுவாய் ஒட்டிக் கொண்டுவிட்டது. விட்டுப்போக மனமில்லை.
தன் பில்டிங் ஓனர் பழனிசாமியிடம், இந்தக் கடைய எனக்கே குடுத்துருங்ணா.. என்னால முடிஞ்ச தொகைய கேளுங்க தரேன். அத விட்டுட்டு காலி பண்ணுனோ.. இல்ல வேற ஒருத்தருக்கு விக்கிறனோ.. சொன்னிங்க டென்சனாயிருவேன்.. என்று அடிக்கடி அவரோடு உரிமையாக சண்டையிடுவான். அவரோ.. நீயே வெச்சுக்கடா சாமி.. இந்த பத்துக்கு பதினாறு ரூம நா யாருக்கு குடுக்கப் போற என்பார்.
காலையில் கடை திறந்து கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வாசல் தெளித்து விட்டு, பழுது பார்க்கும் பைக்குகளை வெளியே எடுத்து நிறுத்தி விட்டு, ஒரு பைக்கை பழுது பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது நான்கைந்து அரசதிகாரிகள் காரில் வந்திறங்கி, கடையையே நோட்டமிட்டனர். சங்கர் புரியாமல் அவர்களையேப் பார்த்தான். அவனை அவர்கள் அழைத்தார்கள். எழுந்து சென்றான். பில்டிங் ஓனர் செல்போன் நம்பரைக் கேட்டார்கள். சங்கர் நம்பரை சொல்லி விட்டு என்ன விசயம் என்று கேட்டான். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. சென்று விட்டார்கள். சங்கர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேலையில் ஈடுபட்டான்.
இரவு ஒர்க்சாப் பொருட்களையெல்லாம் உள்ளே எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்புவதற்காக.அப்போது பில்டிங் ஓனர் பழனிசாமி பைக்கில் வந்து நின்றார். சங்கர் அவரைப் பார்த்ததும் அவரிடம் சென்றான். காலையில் அரசு அதிகாரிகள் எதற்கு வந்தார்கள்? என்று கேட்டான். அரசு மதுபானக்கடை வைப்பதற்கு கட்டிடத்தைக் கேட்கிறார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் கேட்பதாக இல்லை. கட்டாயமாக வேண்டும் என்கிறார்கள். என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. இரண்டு வாரத்தில் நீ வேறு கடைப் பார்த்துக் கொள் என்றார். சங்கருக்கு தூக்கிவாரிப் போட்டது.
சில வேலையாட்கள் சங்கரின் ஒர்க்சாப்பை ஒயின்சாப்பாக சிறு சிறு மாற்றம் செய்து கொண்டிருந்தார்கள். சற்று தூரத்தில் நின்று சங்கர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கூடம் முன்பு மதுக்கடை இருந்தாலே தவறு என்று சொல்லி போராட்டம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பும். ஆனால் இங்கே ஒருவனின் பள்ளிகூடத்தையே மதுகடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க ஒருவரும் வரவில்லை.
சங்கர் தன் வாழ்வில் சந்திக்கும் மூன்றாவது பெரிய இழப்பு. இதை சங்கரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டான். சங்கர் ஒர்க்சாப் போர்டு கலட்டப்பட்டு அரசு மதுபானக்கடை போர்டு மாட்டப்பட்டது.
ஒரு சுபமுகூர்த்த நாளில் மதுபானக்கடை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. இந்தியக் ’ குடிமகன்கள் ‘ முண்டியடித்து சென்று சந்தோசமாக சாராயத்தை வாங்கி குடித்தார்கள். சங்கர் ஒரு ஓரமாக நின்று சாராயக்கடையையே பார்த்துக்கொண்டிருந்தான். கடையில் டூல்ஸ், கம்ப்ரஸ்ஸர், பைக்குகள் என வைத்திருந்த இடத்தில் சாராய பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பார்த்தவனுக்கு மனம் வெம்பியது.
அன்றாடம் வந்து ஒரு பத்து நிமிடமேனும் அந்தக் கடையைப் பார்த்து விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான். ஒரு நாள் உள்ளே சென்று எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என நினைத்து உள்ளே சென்றான். கடைக்குப் பின்னால் இருந்த காலியிடத்தை பாராக மாற்றியிருந்தார்கள். அப்பாவி கேட்கும் போது தர மறுத்த இடத்துக்காரன் அதிகாரம் கேட்கும் போது தாரை வார்த்து விட்டான். குடிகாரர்கள் தள்ளாடியும், தடுமாறியும் கொண்டிருந்தனர். சங்கர் வெறுத்துப் போனான். அவன் உலாவிய இடம், அவன் அமர்ந்து சாப்பிட்ட இடம், அசதிக்கு உறங்கிய இடம், சிறுவனாக வந்து இளைஞனாக வளர்ந்த இடம், குடி பாட்டில்களால் பாலாய்ப்போய்க் கிடக்கிறது.
அங்கே இருந்த பில்டிங் ஓனர் பழனிசாமி சங்கரைப் பார்த்து அழைத்தார். அவரைப் பார்த்து அவரிடம் சென்று அமர்ந்தான் சங்கர். ஏன் வேற எங்கியும் கட வெக்கிலியா? என்று ஆரம்பித்தப் பேச்சு, சரக்கடிக்கிறியா? என்பதில் வந்து நின்றது. இல்லணா என்று மறுத்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை கொஞ்சம் ஊத்துங்ணா என்றான்.
தினம் தினம் வந்து அந்தக் கொஞ்சத்தைக் குடித்துக் கொண்டிருந்தான். நாளுக்கு நாள் அந்தக் கொஞ்சம், கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டிருந்தது. கொஞ்ச நாளில் முழுக் குடிமகனாய் உருவாகி விட்டிருந்தான். அவனை மிகத் திறமையான தொழில்காரனாய் உருவாக்கிய அதே இடம் இப்போது முழுக் குடிகாரனாய் மாற்றியிருக்கிறது.
வேலையில் ஈடுபாடில்லை. வேலை செய்ய முடியவில்லை. வேலை செய்ய மனமில்லை. அதனால் காசில்லை. இருந்தாலும் குடிக்க வேண்டும். வீட்டில் காசு கேட்பது, மறுத்தால் தெரியாமல் திருடுவது, வீட்டில் எதுவுமில்லையென்றால் வீதியில்.. அடுத்தவன் வீட்டில்.. என எப்பிடியாவது பணம் திரட்டி குடிக்க வேண்டும். அரசாங்கம் அவனை குடிகாரனாய் மாற்றியது. குடி, திருடனாய் மாற்றியது.
அடி வாங்கிய களைப்பும், கட்டிங்கு ஆள் கிடைக்காத கோபமும் இணைந்து செயல்பட்டதால் கன்னாபின்னாவென்று எல்லோரையும் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தான் போக்கிரி சங்கர். அப்போது ‘ ‘ சாமி ‘ என்றொரு பெண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பிச்சைக்காரி. காசெல்லா இல்ல போ என்றான் கோபமாக. அதில்ல சாமி எங்கிட்ட அம்பது ருவா இருக்குது.. நீங்க அம்பது ருவா போட்டிங்கனா ஒரு கோட்ரு வாங்கி ஆளுக்கு பாதி குடிச்சுக்குலா.. என்றாள். உற்சாகத்தில் அவளையே பார்த்தான். என்னைய என்ன சொன்ன? நா உனக்கு சாமியா?. சேச்சே.. நீதா எனக்கு சாமி.. வா.. என்று சொல்லி அவள் தோளில் கையைப் போட்டு சரக்கு வாங்க கடைக்குக் கூட்டி சென்றான்.
சங்கரும் இந்தியக் குடிமகன்தான். அதற்கான எல்லா ஆதாரங்களையும் வைத்திருக்கிறான். ஆனாலும் அவன் பாமரன். அதனால் அவனின் வாழ்க்கையை சுலபமாக நாசமாக்கி விட்டார்கள்.