விலைமாதுவின் விண்ணப்பம்

அதொரு சிவன் சன்னதி வீதி. அந்த வீதியில் சிவன் கோயில் இருப்பதால் அந்தப்பெயர். பல ஆண்டுகளாக சிவன் அங்கு குடிகொண்டிருக்கிறாராம். வாடகை தராமல். நான் அந்தக் கோயிலுக்குள் சென்றதில்லை. செல்வதுமாகவுமில்லை. காரணம் உள்ளே தம்மடிக்க கூடாது என்கிறார்கள். சிவன் கஞ்சா இழுக்கலாமாம். நான் சிகரெட் இழுக்கக் கூடாதாம். இதென்ன ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம்? ஒன்று, சிவன் திருந்த வேண்டும். இல்லை என்னை தம்மடிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரையில் உள்ளே செல்வதாய் இல்லை.

எல்லா இடங்களிலும் சிகரெட் விற்கலாம். ஆனால் பொது இடத்தில் புகைபிடிக்க கூடாது. எளியவனிடம் எகிறும் அதிகாரம் வழுத்தவனிடம் எடுபடுவதில்லை. சிகரெட் கம்பெனிக்காரன் மேல் கை வைத்தால் திருப்பி அடிப்பான். ஆனால் மக்கள் வாங்கிக் கொள்வார்கள். அதையும் மீறி, பொது இடத்தில் சிகரெட் அடிப்பேண்டா, கால் மேல் கால் போட்டு அடிப்பேண்டா என்றால் சுகாதார சீர்கேடு, மக்களுக்கு இடையூறு என்று சொல்லி அபராதம் போடுவார்கள். அபராதம் கட்டிவிட்டு சிகரெட் அடித்தால், சுகாதார சீர்கேடோ, மக்களுக்கு இடையூறோ கிடையாது. என்னங்க சார் உங்க சட்டம்? இந்த கேடு கெட்டவர்கள் மத்தியில் வாழ்வதை விட சாவது மேல் என்று முடிவெடுத்து விசம் குடித்தால், தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் போட்டு காப்பாற்றி விடுவார்கள். இதற்கு பெயர்தான் வச்சு செய்வது. வாழவும் விடாமல், சாகவும் விடாமல்.

அந்த வீதியில் ஆறேழு பூக்கடைகள் இருக்கிறது. அதிலொரு கடையை வைத்து வியாபாரம் செய்பவள்தான் சீதா. அவளின் அம்மா அப்பா வைத்த பெயர்தான் சீதா. ஆனால் அந்த ஊர்க்காரர்கள் வைத்த பெயர் தேவிடியாள். அழகான பெயர். ஒரு காலத்தில் தெய்வங்களின் ஜூனியர்களான தேவர்களுக்கு பணிவிடை செய்வதற்கும், காம இச்சைக்காகவும் அப்பாவி பெண்களை அடிமைப்படுத்தி கோயிலுக்கு நேர்ந்துவிட்டார்கள். அதனால் அவர்களை ’தேவரடியாள்’ என அழைத்தார்கள். அதுவே காலப்போக்கில் மருவி தேவிடியாள் என்றானது. கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறவன்தான், அப்பாவிப் பெண்களை அடிமைப்படுத்தி சீரழித்திருக்கிறான். கடவுள் இருக்கிறது என்று சொல்கிறவன்தான் கோயிலை இடித்ததைப் போல. மனிதம் மறைந்து கொண்டே வருகிறது. ஒருவன் சாதியால் இணைவோம் என்கிறான். ஒருவன் மதத்தால் இணைவோம் என்கிறான். ஒருவன் இனத்தால் இணைவோம் என்கிறான். ஒருவன் மொழியால் இணைவோம் என்கிறான். மனிதனாக இணைவோம் என்று ஒரு தெருநாயும் சொல்வதில்லை.

சீதாவிற்கு இந்தப் பெயர் வரக்காரணம், அவளின் கணவனை அவள் இழந்து விட்ட காரணத்தால். பொதுவாக கணவனை இழந்தப் பெண்களை கொஞ்ச காலம் ’விதவை’ என்பார்கள். போகப்போக ’தேவ்டியா’ என்று மாற்றிக் கொள்வார்கள். இந்தப் பெயர் மாற்றம் அவர்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா? என்று அவர்களோடு கலந்தாலோசிக்கவெல்லாம் மாட்டார்கள். தரம் கெட்ட மனிதர்கள்.

சீதா காதலித்து திருமணம் செய்து கொண்டு அந்த ஊருக்கு பிழைக்க வந்தவள். சீதா உயர்ஜாதி வகுப்பை சார்ந்தவர். கணவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். சீதாவின் கணவர் அங்கிருந்த ஸ்பின்னிங் மில்லில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திடிரென்று ஒருநாள் மில்லில் மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது. அது தெரியாமல் இயந்திரத்தில் கை வைத்திருக்கிறார். அவர் புதிதாகத்தான் சேர்ந்தவர் என்பதால் இழப்பீடாக மில் நிர்வாகமும் பெரிய தொகை எதுவும் சீதாவிற்கு தரவில்லை. மகிழ்ச்சியாக வாழ்வோம் என்றுதான் அவள் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஆனால் கணவன் இறந்தது எதிர்பாராத நிகழ்வு. அவளின் பெற்றோர் அவளை ஏற்றுக் கொள்ளவேயில்லை. கணவன் இறந்த பிறகும் கூட. அவளின் அழுகைக்கு ஆறுதல் சொல்லக் கூட ஆளில்லை. இருபது வயதில் அனைத்து உறவுகளையும் இழந்து அனாதரவாக நின்றாள் சீதா.

அப்பா அம்மா பாதுகாப்பிலேயே வளர்ந்த ஒரு பெண் ஒருநாள் மனம் கவர்ந்தவனோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். எதிர்பாராதவிதமாக அவனும் மரணித்து விடுகிறான். இப்போது அனாதரவாக நிற்கும் அந்தப் பெண்ணை அரவணைத்து ஆதரவு கொடுத்து பாதுகாக்க வேண்டிய சமூகமே அவளுக்கு எதிராக நிற்பது எவ்வளவு பெரிய கொடுமை. இந்த இடத்தில் சில எச்சக்கலைகள் ஒரு வசனம் பேசுவார்கள். ”இதுக்குதா அப்பா அம்மா பாத்து வெக்கிறவன கல்யாணம் பண்ணிருந்தா இந்த நெலமை வந்துருக்குமா” என்பார்கள். தனக்கு பிடித்தவரோடு இணைவது அவரவர் உரிமை. இதில் தலையிட பெற்றோருக்கே உரிமை கிடையாது. உனக்குப் பிடித்ததைப் போல் மற்றவன் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட கேவலம் வேறெதுவுமில்லை. எனக்கு புடிக்கல நா செய்ல என்பது உன்னுடைய சுதந்திரம். எனக்கு புடிக்கல அதனால நீயும் செய்யாத என்பது சர்வாதிகாரம். ஒவ்வொருவருக்கும் பிடித்த வாழ்க்கையென்று ஒன்றிருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ அனைவருக்கும் உரிமையிருக்கிறது. அதைத் தடுக்க எவனுக்கும் உரிமையில்லை. தாய் தகப்பன் உள்பட.
அப்பா அம்மா பேச்சக் கேக்காம நீ தனிச்சுதா முடிவெடுப்பேனா, நா அப்டித்தா அத்துமீறுவேன் என்று சொல்கிற ஆணாதிக்க அயோக்கியர்களை, நீ அத்துமீறுனா, நா உன்ன அறுப்பேன் என்று பெண்கள் முடிவெடுத்துவிட்டால் அந்த ஆணாதிக்க அயோக்கியர்கள் எல்லாம் அரவாணியாகத்தான் திரிய வேண்டும்.

தவறு செய்கிற ஆணாதிக்க அயோக்கியர்கள் தங்கள் தவறை மறைக்க பழியை அந்தப் பெண் மேலே தூக்கிப் போடுவார்கள். ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா? என்பார்கள். என்னவொரு கொடூரமான சிந்தனை. அந்த அயோக்கிய நாய்களுக்கு ஒரே ஒரு கேள்வி. பாலியல் பலாத்காரம் செய்யும் போது ஊசி இடம் கொடுத்தா நூல் நுழைகிறது? ஒரு கோயிலுக்குள்ளே எட்டு வயது குழந்தையை கடத்தி வைத்து பத்து நாட்களாக ஐந்து அயோக்கியர்கள் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார்கள். இங்கே எந்த ஊசி இடம் கொடுத்தது? இவர்களை நாய் என்றால் கூட நாய் இனம் கேவலப்பட்டு விடும். நாய் கூட உடலுறவுக்கு தயாரான பெண் நாயோடுதான் உறவு வைத்துக் கொள்கிறது.   

கணவனை இழந்த பிறகு தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தாள் சீதா. அந்த சூழ்னிலையில் அந்த ஊர் இளைஞன் ஒருவனிடம் பழக்கம் ஏற்பட்டது. அவனிடம் தன் மனதை பறி கொடுத்தாள். அதனுடன், உடல், பொருள், ஆவி அனைத்தையும். தன்னை திருமணம் செய்து கொள்வான் என்று நம்பிக் கொண்டிருந்தாள். அது நடக்கவில்லை. மாறாக வேறொருவளை திருமணம் செய்து கொண்டான் அவன். தோள் கொடுத்தவன் தொடர்ந்து வருவான் என்று நினைத்தாள். அவன் படுக்கையை மட்டும் பகிந்து கொண்டு சென்றுவிட்டான். கற்பையும், கலாச்சாரத்தையும் பெண்ணுறுப்பில் கொண்டு வைத்தவர்கள் தாறுமாறாக பேச, அவளும் தடம் மாறிக் கொண்டாள்.

ஒருவன் தச்சு வேலையை பழகிய பிறகே அவனை தச்சன் என்று அழைக்கிறார்கள். ஒருவன் கட்டிட வேலையை பழகிய பிறகே அவனை கொத்தனார் என்று அழைக்கிறார்கள். ஒருவன் மேலாளர் பதவியில் அமர்ந்த பிறகே அவனை மேலாளர் என்று அழைக்கிறார்கள். எதுவுமே அப்படித்தான். ஒருவன் அந்த வேலைக்கோ, பதவிக்கோ தகுதியான பிறகுதான் அந்தப் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறான். ஆனால் சீதாவிற்கு தேவ்டியாள் என்று பெயர் வைத்த பிறகுதான் அவள் அந்த வேலையிலேயே ஈடுபட தொடங்கினாள். ஈடுபட்டாள் என்பதை விட ஈடுபடுத்தினார்கள். அவளின் தனிமை, அவளின் பொருளாதார பிரச்சினை, அவளின் உடல் உணர்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டார்கள். ஒன்றிரண்டு பேரிடம் ஏமாறும் வரைதான் அது ஏமாற்றம். அதன் பிறகு அது தொழில். நாம் தொழில் செய்கிறோம் என்பதையே அவள் கொஞ்ச நாள் கழித்துதான் புரிந்து கொண்டாள். அதுவரை நம்மிடம் பழகுபவன் நம்மை காதலிக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஒருவன் வியர்வையை சிந்தி உழைத்து விட்டு அதற்கான ஊதியத்தையும் அவனே தந்து விட்டு செல்கிற ஒரே தொழில் இது மட்டும்தான்.

மனைவியை அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்பவன்தான், இவளிடம் வந்து அவளை வேலை வாங்குகிறான். மனைவி என்றால் எதுவும் தெரியாமல் இருக்க வேண்டும். தாசி என்றால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். மனைவி, தாசி என்பதெல்லாம் ஒரு உறவு முறைக்கான பெயர். அடிப்படையில் அவர்கள் பெண்கள். ஆனால் ஒருத்தி அப்படியிருக்க வேண்டும். ஒருத்தி இப்படியிருக்க வேண்டுமென்பது எந்த மரபு சார்ந்தது? உணர்வும், உணர்ச்சியும் அனைத்துயிருக்கும் பொதுவானது. தாசிக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதெல்லாம் மனைவிக்கும் தோன்றும். மனைவி என்னவெல்லாம் ஆசைப்படுகிறாளோ அதெல்லாம் தாசியும் ஆசைப்படுவாள்.

அவளுக்கு உணர்ச்சி செத்துவிட்டது, முன்பு போல் அவளிடம் ஒரு துடிப்பே இல்லை என்று பேசிக் கொள்கிறார்கள் அந்த ஊர் ஆண்மகன்கள். அவளுக்கு உணர்ச்சியெல்லாம் சாகவில்லை. அவளின் உணர்ச்சியை அடங்க வைக்க கையாலாகாத காயடித்த கபோதிகளிடம் உணர்ச்சியை காட்டுவதை விட, பிணமாக கிடப்பதே மேல் என்று அவள் சமீப காலத்தில் முடிவெடுத்திருக்கிறாள்.

அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு சீதா வைத்த பெயர் குணசேகரன். ஊர்க்காரர்கள் வைத்த பெயர் ’தேவ்டியா மவன்’. அந்தத் தேவிடியா மவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.

இவன் ஒருத்தனுக்கு பிறக்கவில்லை, பல பேருக்கு பிறந்திருக்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். இது சாத்தியமற்றது. ஒரு பெண் பல பேரிடம் உறவு கொண்டாலும் கரு உருவாவது ஒருவனின் விந்தணுக்கள் மூலம்தான். கரு உருவாகாத விந்து வெளியேறி விடும். பல பேரின் விந்து ஒன்று கூடி ஒரு கருவை உருவாக்காது. இவர்கள் இயற்கைக்கு மாறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் கூறுகெட்ட கபோதிகள்.

இது ஒரு பெரிய மனவலி. அவன் காது படவே நிறைய பேசுகிறார்கள். விபரம் தெரிய தெரிய அவன் மிகவும் வேதனைக்குள்ளானான். பொறுத்து பொறுத்து பார்த்தவன் அம்மாவிடம் ஒருநாள் பொங்கிவிட்டான். எதற்காக உனக்கு அந்தப்பெயர் என்று கேட்கிறான். கணவனை இழந்த காரணத்தால் என்கிறாள். அதாவது என் அப்பாவை இழந்த காரணத்தாலா? என்கிறான். ஆமாம். ஆனால் உன் அப்பா இறந்து இரண்டு வருடம் கழித்துதான் நீ பிறந்தாய் என்கிறாள். கணவனை இழந்த பெண்களுக்கெல்லாம் இந்தப் பெயர்தானா? என்று கேட்கிறான். கணவனை இழந்தவள், கற்பையும் இழப்பாள் என்கிற குரூர சிந்தனை பொதுவாக மனிதர்களிடம் இருப்பதுதான் அதற்கு காரணம் என்கிறாள். கற்பு என்றால் என்ன? என்று கேட்கிறான். அதைத்தான் நான் நினைவு தெரிந்த நாளிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அப்படியெந்தவொரு உறுப்பும் எனக்குள் அகப்படவில்லை என்கிறாள். அப்படியென்றால் இல்லாத ஒன்றை எப்படி இழக்க முடியும்? என்று கேட்கிறான். ஒருவர் ஒருவரைதான் மனதால் நினைக்க வேண்டும். அவரோடுதான் உறவும் இருக்க வேண்டும். மாறாக இன்னொருவரை நினைப்பதோ, அவரோடு உறவு கொள்வதோ செய்தால் கற்பை இழந்து விட்டதாக அர்த்தம் என்கிறாள். நீ அப்படி செய்தாயா? என்று கேட்கிறான். ஆமாம் என்றாள். சற்று யோசித்தவன் சட்டென சொன்னான், அப்படியானால் உன்னிடம் வந்து போனவனும் கற்பை இழந்தவன்தானே…

வீட்டை விட்டு வெளியே வந்தவள், பூக்கடை வீதியின் நடுவே வந்து நின்றாள். சத்தமாக பேசத் தொடங்கினாள்…

இந்த ஊரில் பெண்களில் நான் மட்டும்தான் தேவிடியாள். ஆனால் ஆண்களில் பாதிப்பேர் தேவிடியான்கள். உங்கள் மனைவிக்கு பிறந்த குழந்தையை மட்டும் தனக்கு பிறந்தது என்று மீசையை முறுக்கி சொல்கிறீர்கள். என் மகனும் உங்களில் ஒருவனுக்குதான் பிறந்திருக்கிறான். அதை உங்களால் தைரியமாக சொல்ல முடியுமானால் மீசையை முறுக்கிக் கொள்ளுங்கள். முடியாதென்றால் மழித்துக் கொள்ளுங்கள்.

அந்தப் பூக்கடை கூட்டமே அமைதியாக வேடிக்கைப் பார்த்தது.

எழுதியவர் : ரமேஷ்குமார் (4-Nov-18, 10:44 am)
சேர்த்தது : ரமேஷ்குமார்
பார்வை : 165

மேலே