வேலனுக்கு வந்தனைகள்

ஆலமுண்ட நீலகண்டன்றன்
அருந்தவப் புதல்வா
வேலெடுத்து வினைதீர்க்கும்
கோலமயில் வாகனா
மாலவன் மனமகிழும்
சீலமிகு மருகா
பாலனெனைக் காக்கவந்த
பாலசுப்ர மணியா

உருவும் திருவும்
கருவில் அமைந்த உன்
அருமையும் பெருமையும்
தெரியா துழன்று
அருள்நெறி போற்றாது
மருள்நெறி யேற்றஎம்
தெருளதை வதைத்துஅக
இருளது போக்கிடு

எந்தமிழர் உறும் இன்னல்கள் நீக்கி
இந்திரன் முதலாய் இமையவர் பதங்கண்டு
அந்தமில் இன்பத்து அழிவில் வீடது
தந்திட விரைந்துவா செந்தமிழ்க் குமரனே

(வேறு)
ஒன்றுக்கும் பற்றாத நாயேன்
குன்றுவிட்டுநீ குளக்கரை தனில்வதியத்
தோன்றாத் துணையாய்
நின்றிடும் உன்முன்
கற்றாவின் அகமன்னக் கசிந்துருகிக்
கண்ணைப்பறிக்கும்
கட்டழகன் உனைக்கண்டு
கண்டதே காட்சியென்று கொண்டதேகோலமாகிக்
கண்ணீர்வார மெய்ம்மயிர் சிலிர்ப்பக்
கண்ணுக்குக் கண்ணாய்ப் போற்றிக்
கண்கண்ட தெய்வமாய்க்
கொண்டேனே வேல்முருகா

(வேறு)
கந்தா கடம்பா காங்கேயா - சிவன்
மைந்தா எனையாள் சண்முகனே குகனே
எந்தாயும் எனக்கருள்
தந்தையும் ஆனவனே
சிந்தாகுல மிவைதீர்த்
தெனையாள் சேயோனே
சிந்தையில் உனைக்கண்டு
வந்தித்து நிற்கின்ற
எந்தனது ஆசைத்தீ
இன்னமும் வளர்கிறதே
வந்தனை செய்தமைக்கும்
பலனிலையோ ஐயா
வந்துனை வந்திக்க
வகையிலையே ஐயா
எந்தனையும் ஓர்பொருட்டாய்
ஏற்றுநீ ஆளுகிறாய்
சிந்தனையில் செய்துநின்றேன்
வந்தனையை ஏற்றருள்வாய்...

~தமிழ்க்கிழவி(2000).

எழுதியவர் : தமிழ்க்கிழவி (8-Nov-18, 12:59 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 3042

மேலே