சமரசம்
காதலியே !
குவியத் தொலைவில்
என் குடும்பத்தின்
அங்கமே ...
எதிர்வுகூறினால்
என் எதிர்காலமே !
எதிர்முனையில்
என்னை எண்ணி
வருந்தும் உன் குமுறல் ..
என் இதயத் திரையில்
அரங்கேறி செல்கிறது.
எதிரும் புதிருமாய்
எண்ணங்கள் ஏக்கங்கள்
இண்டு இடுக்கெல்லாம்
சென்றெனை கொல்கிறது..
என்னவளே !
இடைவெளி வந்து
தளிர்விடும் முன் - நாம்
எதிர் எதிர் திசைகளில்
புறப்படும் முன் .
உள்கொண்ட விசனம்
பரிமாறிக்கொள்வோம்
உள்ளபடியே
பரிகாரம் காண்போம் .
மூவிரு திங்கள் கடந்த
பின்பும் ..உன் மூளையில்
கனக்கும் எண்ணம் ஏனோ ?
நாம் கலந்து பேசி
கரையென
கண்டது என்ன
கானல் நீரோ ?
பல ஆயிரம் மணித்துளி
செலவிட்டோம் - அதில்
நல்லது தீயது
அளவிட்டோம்.
கூடியே ஒன்றாய்
பயணப்பட்டோம்.
சொல் இதில் எக்கணம்
நாமும் பிழைவிட்டோம்?
நாளும் பொழுதும்
கடந்துசெல்ல மனம்
ஒருவரை ஒருவர்
அறிந்துகொள்ளும்
விருப்பு எது ?
வெறுப்பு எது ?
சரிவர மெல்ல
புரிந்துகொள்ளும்.
அவரவர் வாழ்க்கையை
கருத்தில் கொண்டால்
அழகாய் வாழ்க்கை
அர்த்தப்படும்
அடுத்தவர் வார்த்தையை
திணித்து கொண்டால்
அதிர்வு கொள்ளும்
ஓர் நாள் அழிவில் தள்ளும் .
மோகம் கொண்டு
உரசிக்கொண்டால்
இருளில்கூட ஒளி பிறக்கும்.
கோபம் கொண்டு
உரசிக்கொண்டால்
விடுப்பு நேர வழி சமைக்கும்
ஒன்றரக் கலந்து
ஒப்புதலுடனே
ஒரு வழி செல்ல
வழிமொழிவாய்
முத்தமிழ் பெண்ணே
சித்தம் நிறுத்தி
சமரசம் செய்யும்
மொழி பயில்வாய்.
வாள்வீச்சு ஒப்ப
வாய்ப்பேச்சு நிறுத்தி
மௌனங்கள் பேசும்
பொருள் காண்போம்.
மாருதம் தாக்கிட மாறா
வெற்பென,கற்பென
காதல் பிரமாணம்
கொள்வோம்.
வழிமுறை வரையறை
வாழ்வின் வகுப்பறை
அவமான அலை கடந்தால்
வெகுமானம் கலங்கரை.
கூப்பாடு ,குறைபாடு
விலகிட மெல்ல
நூறு விழுக்காடு
தளரும் இடைக்கோடு
முட்புதர் கடந்து
வெளிவரும் போதே
கட்புலனாகும்
வாழ்க்கை பூக்காடு.
விடு இருவரின் சரிதம்
இனிமேல் எதற்கு ?
கொள் புரிதல் நோக்கி
புறப்படு இலக்கு.
- நிஷான் சுந்தரராஜா -