ராமசுப்புவிற்கு பாராட்டு விழாவாம்

ராம சுப்புவுக்கு பாராட்டு விழாவாம்

ராமசுப்புவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பாராட்டு விழா நடக்க போகிறதாம். உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? வரவில்லை என்றால் எதற்கு பாராட்டு விழா என்று தெரிந்திருக்காது.
அவன் மிகப்பெரிய குழந்தை கடத்தல் கூட்டத்தை பிடித்து கொடுத்திருக்கிறான். அதற்காகத்தான் இந்த பாராட்டு விழா, என்ன நம்ப மாட்டீர்களா? நம்புங்கள் சார், ஏனென்றால் அவனுமே இதுவரை இதை நம்பவில்லை. நமக்குத்தான் பாராட்டு விழாவா, அல்லது சினிமாவில் வருவது மாதிரி யாராவது நம்மைப் போல் இரட்டை வேடம் போட்டு அவனுக்கு பாராட்டு விழா என குதித்து வந்து விடுவானா? அவனுடைய கவலையே வேறு, அதற்கு இன்னும் தீர்வு காணவில்லை.
போலீஸ் ஆபிசர் அவனிடம் கையை குலுக்கி இந்த தகவலை தெரிவித்து சென்றுவிட்டார். அவனும் தேமே என்று கேட்டுக்கொண்டான். நீங்கள் கொஞ்சம் தள்ளி வாருங்கள், அவன் கவலை என்னவென்று பார்ப்போம்.
காலையில் ராமசுப்பு மெதுவாக கண் விழித்து பார்க்கும் போது காலை 7.30. அவன் மனைவி அவன் விழித்து விட்டான் என்பதையும் இவ்வளவு நேரம் தூங்குகிறவனை திட்ட வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு கதவை படாரென சாத்தி தன் கோபத்தை காட்டினாள். அதற்கும் நம் ராமசுப்பு அசராமல் மீண்டும் கண்களை மூடப்போனான். கையில் இருந்த பாத்திரத்தை வேண்டுமென்றே கீழே போட்டாள் அவன் பத்தினி.”:டமால்” என்ற சத்தம் அவனை இந்த உலகத்துக்கு அழைத்து வந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பதை இந்தனை வருடங்கள் அவளுடன் குடும்பம் நடத்திய அவனுக்கா தெரியாது.
விரு விரு வென எழுந்தவன் அவன் வாரிசுகளில் ஒன்று பாத்ரூமை விட்டு வெளியே வருவதை பார்த்து ஓடிப்போய் பாத்ரூமுக்குள் நுழைந்து கதாவை தாளிட்டுக்கொண்டான். அடுத்து பாத்ரூம் செல்வதற்கு காத்திருந்த அவனுடைய அடுத்த வாரிசு “அம்மா அம்மா” ஊருக்கே கேட்கும்படி சத்தம் போட, வெளியே வந்த அவன் மனைவி சத்தம் போட்டவனையும், உள்ளே சென்று தாழிட்டுக்கொண்ட தன் கணவனையும் சிறிது நேரம் அர்ச்சனை செய்து பின் அவளே களைப்புற்று உள்ளே சென்றாள்.
தன்னுடைய வாரிசிடமிருந்து பாத்ரூமை கைப்பற்றி உள்ளே சென்ற பத்து நிமிடத்தில் வெளியே வந்து வாசலில் காத்திருந்த தன் மகனை பெருமையுடன் பார்க்க அவன் இவனை அற்ப பிராணியை போல் பார்த்து உள்ளே போய் பாரு சொல்லிவிட்டு வேகமாக பாத்ரூமுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான். அவன் மிரட்டலை சீரியசாக நினைக்காத ராமசுப்பு தன் மனைவி கொடுக்கும் காப்பிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
ஆயிரம்தான் இருந்தாலும் அவள் அவனிடம் சண்டையிட்டாலும் அவள் தரும் காப்பியே தனி ருசிதான். நாக்கை சப்பு கொட்டி குடித்து முடித்த சுப்பு உள்ளறைக்கு வந்து பார்த்த பொழுது பாத்ரூம் போராட்டத்தில் தன்னிடம் தோற்ற அவன் மகன் இவன் வைத்திருந்த காகிதகட்டுக்களை பிரித்து எறிந்திருக்கிறான். அத்தனை காகிதங்களும் பறந்து…பறந்து… கொண்டிருந்தன.
எல்லாவற்றையும் பொறுக்கி அடுக்கி வைத்த ராம சுப்பு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள் ஒரு டி.டி யை மட்டும் காணாமல் அங்கும் இங்கும் தேடி பின் தன் கண் பார்வையை வாசல் புறம் ஓட விட டி.டி. வாசல் தாண்டி காற்றில் பயணித்து கொண்டிருந்தது. ஓடி வந்து அதனை எடுக்க முயல அது அவனுக்கு போக்கு காட்டி வாசல் தாண்டி ரோட்டில் பறந்து வந்து விழுந்தது. அவனும் சளைக்காமல் ரோட்டில் இறங்கி அதனை எடுக்க முயல, ஒரு மாருதி ஜிப்சி வேன் ஒன்று சர்ரென அங்கு வந்து நின்று, அதிலிருந்து தடியான இரு ஆட்கள் இறங்கினர்.
“கபாலி” தன் ஆட்களுக்கு கட்டளையிட்டுக்கொண்டிருந்தான்.”இந்தா பிளேடு, நீ பாட்டுக்கு அசால்ட்டா உட்டுகின்னாதா, நம்ம பிளான் பக்காவாயிருக்கணும், காலையில அந்த புள்ளாண்டான் டியூசனுக்கு போயிக்குனு திரும்பி வருவான் நீ கபால்னு வண்டிய எடுத்துக்கினி போய் அவனை தூக்கிக்குனு சர்ன்னு இங்க இட்டாந்துருங்க உங்க கூட நம்மாளுங்க, ரப்பரான், கடப்பாரே, மண்வெட்டி, இவனுங்க மூணு பேரும் வருவானுங்க. வேலைய சுருக்கனா முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க. அவன் கட்டளையை மேற்கொண்ட பிளேடு டீம் அந்த பையனுக்காக நம்ம சுப்பு குடியிருந்த தெரு முனையில் மாருதி ஜிப்சி வேனில் காத்திருந்தது. பையன் மெதுவாக ராமசுப்புவின் வீட்டு வாசலுக்கு எதிரே நடந்து செல்ல அதை எதிர்பார்த்திருந்த மாருதி ஜிப்சி வேன் வேகமாக வந்து ராமசுப்புவுன் வீட்டு வாசலின் எதிர் புறம் நின்று அதன் கதவுகள் சர்ரென திறக்கப்பட்டு இருவர் இறங்கி, நடந்து வந்து கொண்டிருந்த பையனை சடாரென வாயை பொத்தி வேனில் ஏற்ற முயற்சி செய்தனர்.
அப்பொழுது குனிந்து கொண்டே ரோட்டில் கிடந்த டி.டி.யை எடுக்க வந்த ராம சுப்பு டி.டி. மீண்டும் போக்கு காட்டி திறந்திருந்த ஜிப்சி வேனுக்குள் பறந்து விழுந்தது. உடனே ராமசுப்பு தன் இரு கால்களையும் ரோட்டில் ஊன்றி தன் உடலை மட்டும் ஜிப்சி வேனுக்குள் நுழைத்து அந்த டி.டி யை எடுக்க முயற்சிக்க திடீரென்று முளைத்த இடைஞ்சலை எதிர் பார்க்காத வேனுக்குள் இருந்த இருவர் வேன் கதவை மூடவும் முடியாமல், திறக்கவும் முடியாமல் விழித்துக் கொண்டிருக்க, அதற்குள் பிளேடு கையில் சிக்கியிருந்த பையன் அவன் கையை கடிக்க அவன் வலி பொறுக்க முடியாமல் கையை உதற சுதாரித்துக் கொண்ட பையன் “திருடன் திருடன்” என கூக்குரலிட்டு ஓட அதற்குள் கூட்டம் சேர்ந்து விட இருவரையும் ஓட விடாமல் பிடித்துக்கொண்டனர்.
இதை எதுவும் அறியாத சுப்பு எப்படியோ பறந்து உள் விழுந்த டி.டி யை எடுத்து பார்க்க அது சாதாரண பேப்பராக இருந்ததை கண்டு உதட்டை பிதுக்கி தலையை வெளியே எடுத்தான். தலையை வெளியே எடுத்தவுடன் சுற்றி நின்றவர்கள் இவன் உள்ளிருந்தவர்களுடன் இவ்வளவு நேரம் சண்டையிட்டிருக்கிறான என (தவறாக) கருதி, நீங்க விடுங்க சார் நாங்க பார்த்துக்கறோம் என சொல்லி உள்ளிருந்த அனைவரையும் வெளியே இழுத்து சிறை பிடித்தனர்.
திடீரென்று வெளியே சத்தம் கேட்டு ராம சுப்புவின் மனைவியும், அவன் வாரிசுகளும் வெளியே எட்டி பார்க்க வெளியே கூட்டமாக இருப்பதையும் நடுவில் ராமசுப்பு நிற்பதை பார்த்தவுடன் வேகமாக வெளியே வந்தனர்.
கூட்டத்தில் இருந்த ஒருவர் “மேடம் உங்க வீட்டுக்காரர் தனியாளா ஒரு பையனை கடத்த வந்த இந்த குமப்லை மடக்கி பிடிச்சிருக்காரு “வெரி கிரேட்” என புகழ்ந்தார்.
சுப்புவின் குடும்பம் இதனை நம்பாமல் இவனை பார்க்க இவன் “ஞே” என விழித்து என்னோட டி.டி யை யை காணோம்
நல்ல வேளை இவன் தன் மனைவியிடம் சொன்னது கூட்டத்தின் சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை. போலீஸ் வந்து அனைவரையும் பிடித்துக்கொண்டு, இவனையும் பாராட்டி விட்டு சென்றனர்.
எப்படியோ அந்த தெருவுக்கு ஹீரோவாகி விட்ட ராம சுப்புவுக்கு அடுத்த வாரம் பாராட்டு விழா நடத்தலாம் என்று போலீஸ் மட்டுமல்ல, அந்த தெருவாசிகளும் முடிவு செய்து விட்டனர்.
ராம சுப்பு மட்டும் கவலையிலேயே உள்ளான். அவனுடய டி.டி. யை காணவில்லை என்பதுதான். யாராவது அவனிடம் சொல்லுங்கள் டி.டி.,எங்கும் செல்லவில்லை அவன் டேபிள் அடியிலேயே உள்ளது.
ஏனென்றால் அந்த கடுவன் பூனை மேனேஜருக்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Nov-18, 2:59 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 318

மேலே