சட்டநாதன் சிறுகதைகள்-ஈழத்து இலக்கிய ஆளுமைகள்-

சட்டநாதன் சிறுகதைகள்: பணிய மறுப்பவர்களின் குரல்கள்

ஈழத்தில் எழுபதுகளில் உருவான எழுத்தாளர் சட்டநாதன். ஈழ இலக்கியத்தில் முற்போக்கு இலக்கியத்தின் தீவிர அலை ஓரளவு தணிந்து தேசிய இனப்பிரச்சினை சார்ந்த பதட்டங்கள் இலக்கியத்தினுள் ஊடுருவத் தொடங்கிய காலகட்டத்தின் பிரதிநிதி அவர். முற்போக்கு இலக்கியத்தில் முன்னிறுத்தப்பட்ட மார்க்ஸிய சித்தாந்தக் கருத்துகள் அவரது கதைகளில் ஆங்காங்கே போகிற போக்கில் உதிர்க்கப்பட்டிருப்பதைக் காண முடியும். உதாரணமாக உறவுகள் கதையில் ”சதா முக்கோணக் காதல்கதைகளையே எழுதி வந்த அவள் இப்போதெல்லாம் மனிதன் பால் அதீத நேயம் பூண்டு வர்க்கநலன் பேணும் எழுத்தை வடிப்பதென்றால்..”

என்ற வரிகளிலும், தரிசனம் கதையில் வேறுவழியின்றி பூர்ஷ்வா அரசாங்கம் என அரசாங்கத்தை திட்டுவது போன்றவை மூலமே முற்போக்கு குரல் இக்கதைகளுக்குள் ஒலிக்க விடப்படுகிறது. அந்த சித்தாந்தத்தின் மீதான ஆழ்ந்த பற்றுடன் கூடிய குரலை அவரது படைப்புகளுக்குள் கேட்கமுடிவதில்லை. அது அவரது கதைகளினுள் மைய அம்சமாகவோ, அல்லது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அம்சமாகவோ திரட்சியுறாமல் பட்டும்படாமலும் காட்சி தந்துகொண்டிருக்கிறது.

அவர் வாசிக்கத் தொடங்கிய காலம் முற்போக்கு இலக்கியப் படைப்புகளும், விமர்சனங்களும் கொடிகட்டிப் பறந்த காலம். அதனால் அந்தப் பாதிப்பு இலக்கியத்தின் வழி அவருக்குள் ஊடுறுவியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதுவே அவரது முழுமையான சித்தாந்தமாக மையம்கொள்வதில்லை.

அவரது காலம் தேசிய இனப்பிரச்சினை எழுச்சியடைந்த காலம். இலக்கியம் அதன் பிரதிநிதியாக மாறிய காலம். இதனால் சட்டநாதன் அதன் பிரதிநிதியாக மாறினார். ஆனால் முழுமையாக அவர் அந்தத் தளத்திலேயே இயங்கிக்கொண்டு போகவுமில்லை. மானுட உறவுகள், ஆண்-பெண் உறவுகளில் காணப்படும் அசமநிலை மற்றும் அதற்கெதிரான குரல், போரினுள் அகப்பட்டு மடியும் மானுடத் துயர் என பல நிலைகளில் வெளிப்படும் கதைகளை அவர் எழுதினார்.

ஒரு விதத்தில் சட்டநாதனின் கதைகள் மொத்தமும் மனித உறவுகளைக் கூர்ந்து நோக்க முனைபவைதான். அதிலும் குறிப்பாக, ஆண்-பெண் உறவு குறித்த விசாரணகளை நோக்கி நகர்பவை. இவரது தரிசனம் எனும் கதையில் வரும் பெண் அவரது காலகட்டத்தில் ஒரு புரட்சிகரமான குரல்தான். ஆனால் மிகை யதார்த்தம் கதையின் இயல்பான நகர்வுக்கு சற்று இடையூறாகத் தெரிகிறது. ஒரு பெண்ணின் வாழ்வும் அனுபவமும் ஆண்களின் (கணவனின்) உலகத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டு மட்டுமே தீர்மானிக்கும் மனநிலை உடையவராகத் தான் சட்டநாதன் இருக்கிறார். ஆண்களின் (கணவனின்) உலகத்தோடு இயைந்து செல்ல முடியாத பெண்களின் வாழ்க்கையை அவர் தன் கதைகளில் கூர்ந்து நோக்குமளவுக்கு ஆண்களுக்கு வெளியே உள்ள பெண்களின் பிரச்சினைகள், வாழ்வியல் அனுபவங்கள் மீது அவர் கவனம் எடுப்பதாக எனது வாசிப்பு எல்லைக்குள் தெரியவில்லை.

சட்டநாதனின் அநேக கதைகளின் முற்பகுதி மனித உறவுகள், ஊடாட்டங்கள் பற்றியதாகத் தொடங்கி பின் யுத்தத்தில் முடிவுறுகின்றன. அதற்கு தளம்பல், நகர்வு போன்ற கதைகள் நல்ல எடுத்துக்காட்டுகள். தளம்பல் கதையில் ஈழப்போரில் மலையகப் பரிமாணம் குறித்த சித்தரிப்புகள் வருகின்றன. சட்டநாதன் இக்கதையில் 83 July கலவரங்கள் எப்படி மலையகத் தமிழர்களையும் பாதித்தது என்பதை பதிவுசெய்கிறார். இக்கதையில் சிங்கள இனவாதிகளால் சதாசிவம் கொல்லப்பட்ட போது அவன் மனைவியான தமிழ்ப் பெண்ணான தவத்திற்கு பியசிறீ எனும் சிங்கள இளைஞனிடமிருந்து கிடைத்த ஆதரவு குறித்து கதைக்குள் விபரிக்கிறார். பியசிறி போன்றவர்கள் மூலம் சிங்கள மக்களின் மனச்சாட்சியைப் பதிவு செய்கிறார் சட்டநாதன்.

இக்கதையில் வரும் “அவன்“ எனும் மையப்பாத்திரம் அவளிடம் (தவம்) “பியசிறி உன்னைக் கெடுக்கவில்லையா? சிங்களவர்கள் பெண்களைக் கெடுப்பார்கள்” என்று சொல்லும் போது அவள் அடையும் தீவிரம் இந்தக் கதைக்கு முக்கியமான ஒன்று. இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வின்மையின் குறிகாட்டி இந்தக் கதை.

தளம்பல் எனும் இக்கதையில் தன் கணவன் சதாசிவம் இனக்கலவரத்தில் பலியாகிவிட்ட பின் கோயிலில் குழந்தையுடன் நிர்க்கதியுற்று, அங்கலாய்ப்பில் இருந்த “அவள்“, அவளைப் போல் வீட்டைவிட்டு வெளியேறி வந்து கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த இளைஞனான “அவன்“ உடன் கிளிநொச்சி போக முடிவு செய்கிறாள். “ஒரு ஆணின் நிழல் எப்போதும் பாதுகாப்பான ஒன்றுதான்” என அவள் நினைக்கிறாள். ஆண்களோடு முரண்படும் பெண்களே அதிகம் உள்ள சட்டநாதனின் படைப்புலகில் ஆணின் துணையை பாதுகாப்பாக கருதும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சட்டநாதனின் பெண்கள் தன்னொழுக்கம் மற்றும் கற்பை பெரிதும் பூஜிப்பவர்கள். இங்கு தவம் அவனுடன் தற்செயலாக சபலத்தால் உறவுகொண்டு வருந்துவதும் அவனை மனமுவந்து கணவனாக ஏற்றுக்கொள்வதும் தமிழர் பண்பாட்டின் வேர்கள் அவளில் ஊடுறுவியுள்ளதைக் காட்டுகிறார். சட்டநாதனின் அநேக பெண்கள் இப்படித் தமிழர் பண்பாட்டுக்கு மிகவும் விசுவாசமானவர்களாக இருக்கின்றனர்.

உறவுகள் கதையில் வரும் மையக் கதாபாத்திரமான பெண்ணும் இந்த வகையைச் சேர்ந்தவள்தான். ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றில் கூட முழுவாழ்வையும் வெளிச்சப்படுத்திக்கொள்ளவும், அர்த்தப்படுத்திக்கொள்ளவும் முனையும் ஒரு பெண்ணாக அவளை சட்டநாதன் சித்தரிக்கிறார்.

பெண்ணின் சோரம்போன வாழ்வும் வாழ்வை அவள் எதிர்கொள்ளும் விதமும் தளம்பல், உறவுகள், தரிசனம் கதைகளில் வெவ்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன.

சட்டநாதனின் தரிசனம் கதை எந்தப் புள்ளியிலாவது இணைய மறுக்கும் வெவ்வேறு மனப்போக்குகள் கொண்ட, விருப்புவெறுப்புகள் கொண்ட கணவன்-மனைவியின் அகவுலகச் சிடுக்குகளை மிக மேலோட்டமாகப் பேசும் கதை. மனைவியின் இரசனைகளைப் புரிந்துகொள்ள முடியாத கணவனுக்கு அவளது இரசனைகள் அசாதரணமானவையாகத் தோன்றுகின்றன. அவள் புத்தகங்களை நேசிப்பவளாக, அதிகம் வாசிப்புள்ளவளாக, நல்ல சினிமா பற்றிய தெளிவுள்ளவளாக சித்தரிக்கப்படுகிறாள். அப்போதைய சமூக சூழலில் ஒரு மத்தியதர குடும்பப் பின்னணிகொண்ட அவளுக்கு அப்படியான ஒரு ஆளுமை மிகையான சித்தரிப்பாகக்கூடத் தோன்றலாம். ஆனால் கணவன் பற்றிய சித்தரிப்புகள் அப்போதைய சமூக, பண்பாட்டுச் சூழலுக்கும் ஆண்களின் மனோநிலைக்கும் மிகவும் நெருக்கமான சித்தரிப்பாகவே தோன்றுகிறது. ஆயினும் இந்த தளம் ஒரு கதைக்கான கற்பனையான சூழலையும், மனிதர்களையும் உருவாக்கிக் கொள்வது போன்றே தென்படுகிறது. அது ஒரு யதார்த்தமான சூழலுக்குப் பொருந்தி வருவதாக இல்லை.

“பெரிய இவ… அவவின்ர ரசனையும்…மண்ணாங்கட்டியும்..” என மனைவியின் திரைப்படம் ஒன்று குறித்த இரசனைக் குறிப்பை வன்முறையாக எதிர்கொள்கிறான் கணவன். இது அவளுக்கு ஏற்படுத்தும் மனக்காயம் அவர்களின் வாழ்க்கையின் முடிவுக்கு அவர்களைக் கொண்டு வந்து சேர்க்க கூடியது. அது பணிய மறுக்கும் ஈகோ.

ஒரு தர்க்கரீதியற்ற கதை ஒழுங்கு இங்குள்ளது. கணவனால் புரிந்து கொள்ளப்படாத அவளை கணவனின் நண்பனான நகுலேஸ் அவளைப் புரிந்துகொண்டவளாக நடித்து அவளுடன் வாழ்ந்து பின் ஏமாற்றிச் செல்வது அனைத்தும் படைப்பாளியின் குரலிலேயே ஒலிக்கிறது. அது கதைக்குள் விரியும் ஒரு உபகதை. ஆக, இந்தக் கதைக்குள் ஒரு பெண் இருவேறுபட்ட ஆண்களோடு வாழந்தவள். ஒருவன் தன் கனவுகளுக்கும், இரசனைகளுக்கும் முற்றிலும் முரணானவன். மற்றையவன் அவளது கனவுகளுக்கும், இரசனைகளுக்கும் மிகவும் நெருக்கமானவன். எனினும் அது அவளை அடைவதற்காக அவன் போட்ட வேஷம் என்பதை அவள் அவனுடன் சேர்ந்து வாழும் போது கண்டுகொள்கிறாள். அவனைவிட்டும் பின் பிரிந்து சென்று ஆண்களின் உலகமே இப்படித்தான் என முடிவெடுத்து தன் பிள்ளையுடன் தனியாக வாழ முடிவுசெய்கிறாள். அவளுக்கு கிடைத்திருக்கும் ஆசிரிய உத்தியோகம் அவளுக்கான பொருளாதாராப் பாதுகாப்பை அளிக்கிறது.

ஆக, இக்கதை மூலம் சட்டநாதன் எதை சொல்ல வருகிறார்? சமூகத்தில் பெண்களின் பிரச்சினைகள் ஆண்களால் மட்டுமே உருவாக்கப்படுகிறதா? பெண்கள் தொழில் புரிவதன் மூலமே அவர்களது வாழ்வு சுதந்திரமானதாக இருக்குமா? இது ஒருவகையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆண்களின் வருமான உழைப்பு சார்ந்து தங்கி வாழ்வதன் நிலைமைகள் காரணமாகத் தோற்றம் பெறுபவை எனும் புரிதலை நோக்கி வாசகனைக் கொண்டு செல்கிறது.

--------------
நகரமயமாதல், உலகமயமாக்கத்தின் விளைவாக மனித உறவுகளில் ஏற்பட்ட நேரடி மாற்றங்கள் அதன் விளைவாக தனிமனிதர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், தடுமாற்றங்கள் போன்றன இக்காலப் பகுதியின் எழுத்தாளர்களைப் பாதித்த நிகழ்வுகளாக வடிவங்கொண்டன. இக்காலப் பகுதியில் எழுதிய ஈழத்து எழுத்தாளர்களின் பலரது கதைகளில் ஒத்த இயல்புடைய மனிதர்களைக் காணலாம். எடுத்துக்காட்டாக குப்பிளான் ஐ. சண்முகத்தின் “எல்லைகள்” அ.யேசுராசாவின் “ஒரு இதயம் வறுமைகொண்டிருக்கிறது”, வை. அஹ்மத்தின் “உப்புக்கரித்தது” எம்.எல்.எம். மன்சூரின் “முரண்பாடுகள்” போன்ற கதைகள் பொதுவான மனிதர்களாலும் உணர்வுகளாலும் ஆன கதைகள்.

வறுமையில் உழலும் ஏழைகள், தொழிலாளர்கள் தான் சட்டநாதனின் படைப்புலக மக்கள். பல்வேறு வழிகளிலும் சுரண்டப்பட்டு, கைவிடப்பட்ட தொழிலாளர்களை நினைவூட்டும் படைப்பாளியாக அவர் தன்னை முன்னிறுத்த முனைந்தார். அதனால்தான் அவரது எல்லாக் கதைகளிலும் கதாபாத்திரங்களை வறியவர்களாக ஏதோ ஒருவிதத்தில் சுரண்டப்பட்டவர்களாக இன்னொருவரின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்பவராக காட்டுகிறார். ஒருவகையில் அதனை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.

இவரது உலா கதை நகரமயமாக்கலுக்கும் கிராமிய வாழ்க்கைக்குமிடையிலான முரண்களைப் பேசுகிறது. சிறிக்கும் மதுவுக்குமிடையிலான உரையாடலில் இந்த இருவகை உறவும் முரணும் வருகிறது. “நான் வேட்டிதான் கட்டுவன்“ என சிறி சொல்ல,

“முளைச்சு மூணு இழைவிடல்ல வேட்டியே வேணும்..கழிசன்தான் போட வேணும்“ என தயா சொல்கிறான். ஆடை கலாசார மாற்றத்திற்குள்ளாகும் விதம் சித்தரிக்கப்படும் புள்ளி இதுதான். திருவிழாவில் மது “எனக்கு துவக்கு வேணும்“ என்கிறான். இது புதிய தலைமுறையினரின் மனநிலையில் உலகமயமாக்கம் ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கத்திலிருந்து எழுந்து வரும் குரலாகவே தெரிகிறது. சமூகம் மாறத் தொடங்கும் ஒரு காலகட்டத்தின் பதிவாக இதனை பார்க்கலாம்.

உலகமயமாக்கலின் தாக்கங்களால் இங்கு மனித வாழ்வு இழந்து நிற்கும் தருணங்களை தனிமனிதர்களின் அனுபவத் தொகுப்புகளுக்கூடாக பேசும் கதை நகர்வு. முதலாளித்துவம் கிராம மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வை எப்படிச் சிதைத்திருக்கிறது என்பதை நகர்வு கிளர்த்திவிடுகிறது. “நகர்வு” கதையில் வரும் மனிதர்கள் இயற்கையோடு விவசாயத்தோடு கலந்து வாழ்பவர்கள். நகர்வு கதையில் “தாய்வாய்க்கால் பக்கம் முளை கொள்ளும் புற்தளிரைக் கிள்ளுவது, தலை காட்டும் புகையிலைக் கணுவை உடைப்பது, அடி எருப்பரப்புவது, இலை ஒடித்து தறைசாறுவது“ என ஐயாவின் வாழ்க்கை விவசாயத்துடன் இணைந்திருந்ததைச் சொல்கிறார்.

அம்மாவைப் பற்றிச் சொல்லும் போது “கத்தரிச் செடிகளில் ஆமை வண்டு பார்த்து இலை ஒடிப்பாள், சந்துப் புழுப்பார்த்து கொழுந்தெடுப்பாள், தக்காளி, மிளகாய் நட்டிருந்தால் பூச்சிகொல்லிவிசிறுவாள்“ என விபரிக்கிறார் இன்றைய தலைமுறையினர் இழந்துவிட்ட அருமையான வாழ்வியல் தருணங்கள் அவை.

இவரது “உலா“, “வித்தியாசமானவர்கள்“ போன்ற கதைகள் சட்டநாதனை ஒரு சிறுகதை எழுத்தாளனாக நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும் படைப்புகளாக உள்ளன. கதைமொழியும், சம்பவமும் ஒரு சிறுகதைக்கான முழுமையைக் கொண்டிருக்கின்றன. 70-80 கள் வரையான ஒரு பத்தாண்டுகால ஈழச்சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகள் என்றொரு பட்டியலைப் போட்டால் சட்டநாதனின் “உலா“ கதையை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சில கதைகள் போர் அரசியல் பற்றி மிக மேலோட்டமாகப் பேசிச் செல்பவை. “அவர்களது துயரம்” கதை போர் பற்றிப் பேசும் இந்தவகைக் கதைகளுள் ஒன்றுதான்.

சிலகதைகள் ஒரு மைய சம்பவத்தைச் சுற்றி சுழலாமல் அல்லது ஒரு மையக்கதையை மையக் கதாபாத்திரத்தைக் கொண்டு நகராமல் கதையில் வரும் கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்வை விபரிப்பதன் மூலம் அந்த விபரணைகளின் சேர்க்கையை “கதை“யாக மாற்றுகிறார். ஈழத்தமிழ் இலக்கியத்தில் அப்போது இப்படியான கதைகூறல் முறை பற்றிய வாதங்கள் எழுந்திருக்கவில்லை. எனவே இது ஒரு தற்செயலான போக்குத்தான். அவர் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்ட ஒரு போக்கல்ல. அவர் வாசகனுக்கு ஒரு பொதுவான கதையைச் சொல்லாமல் கதாபாத்திரங்களின் கதையைச் செல்வதன் மூலம் ஒரு படைப்பை வாசகனுக்கு அளிக்க முயன்றார். நகர்வு கதையில் மையக்கதாபாத்திரம், அவனது அப்பா, அம்மா, ஐயா, வத்சலா போன்றவர்களின் தனி வாழ்வின் தொகுப்பே இக்கதையாக திரட்சிபெற்றுள்ளது.

இவரது எல்லாக் கதைக்குள்ளும் ஒரு அரசியல் இருக்கிறது. தோமஸ் மன் சொன்னதைப் போல் “நவீன மனிதனின் தலைவிதி அரசியல் மொழியினாலேயே எழுதப்படுகிறது“ பெண்ணிய அரசியல், உலகமயமாக்கல் எனும் அரசியல், போர் அரசியல் என மனித வாழ்வின் அக புற பகக்கங்கள் அனைத்திலும் ஊடுருவிப் படர்ந்துள்ள அரசியல் அவர் கதைகளை நிறைத்துள்ளன. அத்தகையதொரு சமூகத்திற்குள்ளிருந்து எழுதப் புறப்பட்ட எந்தப் படைப்பாளிக்கும் அது தவிர்க்க முடியாதது.ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை

எழுதியவர் : (8-Nov-18, 10:37 am)
பார்வை : 36

மேலே