புந்திக் கணிநூற் பொருளாய்வே – அணியறுபது 38

நேரிசை வெண்பா

புந்திக் கணிநூற் பொருளாய்வே; போயமருஞ்
சந்திக் கணிசார் தருநிழலே; - மந்திரிக்குச்
சொல்வன்மை கல்வி துணிவன்(பு) எதிர்சூழும்
நல்வன்மை தூய்மை அணி. 38

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

மேலான நூலின் பொருள்களை ஆராய்தலே அறிவுக்கு அழகு. போய் அமரும் சோலைக்கழகு இனிய குளிர் மர நிழலே; சொல் வன்மை, கல்வி, துணிவு, அன்பு, எதிர் வரும் செயல்களைச் சமாளிக்கும் திறம் மற்றும் தூய்மை மந்திரிக்கு அழகு ஆகும்.

பொறிநுகர்வு உடல் நிலையில் சிறிது சுகமாய்த் தோன்றி விரைந்து கழிந்து ஒழிவது: அறிவின் நுகர்வு உயிர் நிலையில் உயர்வாய் நின்று எவ்வழியும் அதிசய இன்பங்களை என்றும் அருளி வரும்.

சந்தி = பொது நிலையமான பூங்கா. அந்திப் போதில் பலரும் போய்த் தங்கி அமைதியாயிருக்க வுரிய அந்த இடம் மலர் மணம் கமழ்ந்து குளிர் நிழல் அமைந்து எழில் நலம் நிறைந்து இனிது விளங்கிவரின் மாந்தர் மனம் மகிழ்ந்து வருவர்.

அரசனுக்கு உரிமைத் துணையாய் அமர்ந்து ஆலோசனைகள் கூறி வருகிற மதிமான் மந்திரி என நேர்ந்தான். மந்திரம் - இரகசியம். மருமமான கருமங்களைத் தெளிவாக ஆய்ந்து செய்பவன் என்பது அந்தப் பெயருள் தோய்ந்துள்ளது. அரசுக்கு உரியதை ஆய்ந்து வரிசையுடன் ஓர்ந்து முடிப்பவன் அமைச்சன் என நேர்ந்து வந்தான்.

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கு மன்னர் நிலையுணர்தல் இம்மூன்றும்
வீறுசால் பேரமைச்சர் கோள். 61 திரிகடுகம்

குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்ற லுடமை - முடிஓம்பி
நாற்றம் சுவைகேள்வி நல்லார் இனம்சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு. 17 ஏலாதி

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

நல்லவும் தீயவும் நாடி நாயகற்(கு)
எல்லையில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்;
ஒல்லைவந் துறுவன உற்ற பெற்றியின்
தொல்லைநல் வினைஎன உதவும் சூழ்ச்சியார்: 1408

- மந்திரப் படலம் 9, அயோத்தியா காண்டம், இராமாயணம்

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

உற்றது கொண்டு மேல்வந்(து)
.உறுபொருள் உணரும் கோளார்;
மற்றது வினையின் வந்த(து)
..ஆயினும் மாற்றல் ஆற்றும்
பெற்றியர்; பிறப்பின் மேன்மைப்
..பெரியவர்:அரிய நூலும்
கற்றவர்; மானம் நோக்கின்
..கவரிமா அனைய நீரார். – 1405

- மந்திரப் படலம் 6, அயோத்தியா காண்டம், இராமாயணம்

மந்திரிகளுடைய மாட்சிமைகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே நன்கு சிந்திக்க வுரியன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-18, 11:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே