மழைக்கு ஒதுங்கிய வானம்
களிப்புட னாடுங் கருமுகிற் கண்ட கவின்மயிலாய்
உளத்தினிற் பொங்கு முவகை யிதமாய் உயிர்நனைக்கும்!
குளிர்வளி யோடு குலவிப் பெயலது கொஞ்சிவந்து
துளித்துளி யாயுடற் தொட்டு நனைக்கும் சுகம்சுகமே !!
சுகத்தினி லுள்ளஞ் சுரங்க ளிசைத்துத் துயில்மறந்து
மகிழ்வுட னன்பாய் வரவேற் பளித்திடும் வான்மழைக்கு
நெகிழ்வுடன் மின்னல் நெளிந்து வளைந்து நிமிர்ந்தொளிர
முகில்களின் கூடலில் முத்த மிடியாய் முழங்கிடுமே !!
முழங்கு மொலியோ முறையாய் வருவதை முன்மொழிய
மழையின் பயணம் வடிவாய்த் தொடங்கி மயங்கவைக்கும் !
கழனி செழிக்க கடைக்கண் திறக்கும் கவின்மழையால்
உழவர் நிலையும் உயர்ந்திட வாழ்வும் உயிர்த்திடுமே !!
உயிர்ப்பொடு நாளு முயிரினம் யாவு முலகினிலே
துயர்களும் நீங்கிச் சுகத்துடன் வாழத் துணையிருக்கும்
இயற்கையைப் பேணுத லென்றும் கடமை யெனநினைப்போம்
பெயல்பொழி வாலே பெரும்பய னுண்டு பிழைத்திடவே !!
பிழைத்திடும் வண்ணம் பெருமழை பெய்திடில் பேறெனவே
விழைந்ததைச் சேமித்தால் மேன்மை யுறலாம் மிகவெளிதாய்
மழையிலை யென்றால் வறுமையும் பஞ்சமும் வாட்டிடுமே
மழையினைப் போற்றி வரமெனப் பண்பாடி வாழ்த்துவமே !!
( கட்டளைக் கலித்துறை )