அகலையரசன் அவர்களின், “ A Comparison of Developmental Outcomes in Gujarat and Tamilnadu” Economical and Political weekly, April, 2014” கட்டுரை- --- தமிழாக்கம்
2013 ஆம் ஆண்டில், ஜக்திஷ் பகவதி/அர்விந்த் பனகாரியா, வளர்ச்சி ஏன் முக்கியம்? (Why Growth Matters?) என்னும் புத்தகத்தை வெளியிட்டார்கள். அதே ஆண்டில், அமர்த்தியா சென்னும், ஜீன் ட்ரீஸூம் – “நிச்சயமற்ற பெருமிதம் – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” (An Uncertain Glory: India and its Contradictions) என்னும் புத்தகத்தை வெளியிட்டார்கள். இரண்டுமே, 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்களின் வெற்றியின் பிண்ணணியில் எழுதப்பட்டவை.
பகவதியும் பனகாரியாவும், பொருளாதார வளர்ச்சிதான் முக்கியம். அதுதான், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வறுமையை மிக வேகமாகக் குறைக்க வல்லது. அந்த வளர்ச்சியில் மூலம் வரும் அதிக வருவாய்தான், அரசுகள் சமூக முன்னேற்றக் கட்டமைப்புகளை உருவாக்க உதவும் என்னும் ஒரு கருதுகோளை முன்வைத்தார்கள். அதாவது வளர்ச்சி முதலில் நிகழ வேண்டும், அது மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி என்பது அவர்கள் கருதுகோளின் முதல் படி. இதற்கான உதாரணமாக, இவர்கள் குஜராத் மாநிலத்தை முன்வைத்தார்கள்
அமர்த்தியா சென்னும், ஜீன் ட்ரீஸும், பொருளாதார வளர்ச்சி என்பது தன்னளவில் ஒரு முடிவு பெற்ற கொள்கையல்ல. அது சமூக முன்னேற்றத்துக்கான வழிமுறை மட்டுமே என்னும் கருதுகோளை முன்வைத்து, சமூக முன்னேற்றக் கட்டமைப்பில், அரசு மிகப் பெரும் பங்கைச் செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் நிகழ்ந்த தொடர் பொருளாதார வளர்ச்சி, குஜராத்தில் சமூக முன்னேற்றத்தை உருவாக்கவில்லை. சமூக முன்னேற்றத்தில் குறிப்பாக கல்வி, சுகாதாரம் போன்ற கட்டமைப்புகளில் அரசின் பங்களிப்பே சமூக முன்னேற்றத்தை மேம்பட்ட வகையில் உருவாக்கியது எனச் சொல்லி, உதாரணமாக கேரளத்தை முன்வைத்தார்கள். (தமிழகத்தின் சமூக முன்னேற்றமும் புத்தகத்தில் நேர்மறையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது).
இந்த விவாதங்களின் பிண்ணனியில், கலையரசன், குஜராத்தையும், தமிழகத்தையும் ஒப்பிடுகிறார். கல்வி, சுகாதாரம், வறுமை குறைப்பு என்னும் மூன்று சமூகத் தளங்களில், இரு மாநிலங்களும், பொருளாதாரச் சீர்திருத்தம் துவங்கிய 20 ஆண்டுகளில் எவ்வாறு மேம்பட்டிருக்கின்றன என்னும் ஒப்பீடு.
இந்தக் கட்டுரை தரும் தரவுகள், தமிழகத்தின் நிலை பற்றிய மேட்டிமை நோக்குகளை உடைத்தெறிகின்றன என்பது, கட்டுரை பேசும் பொருளைத் தாண்டிய ஒரு விஷயம்.
தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலம் என்னும் வாதம் வரும்போதெல்லாம், அதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுபவை இவை:
ஆங்கிலேயர் காலத்திலேயே சென்னை மாகாணம், கல்வியில் முன்னேறிய மாநிலம்.
மதிய உணவைக் காமராஜர்கொண்டு வந்தார்.
தமிழக முன்னேற்றத்துக்கான தொழில் மற்றும் வேளாண் கட்டமைப்பை காங்கிரஸ் உருவாக்கியது
காங்கிரஸ் ஆட்சியில் செயல்திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது
இவை சொல்லாமல் சொல்லும் விஷயம், 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை. அவை ஊழல் மலிந்த பரப்பியல் இயக்கங்கள் மட்டுமே என்பது. அப்படியே கொஞ்சம் பங்களிப்பு இருக்கின்றது என ஒத்துக் கொண்டாலும், அது எம்,ஜி.ஆர், நல்ல நிர்வாகிகள் சொல்பேச்சுக் கேட்டு ஆட்சி நடத்தினார் என்பதாக இருக்கும். அப்படியே ஒத்துக் கொண்டாலும், அது பிற்படுத்தப்பட்டவர்களின் நலனை மட்டுமே மேம்படுத்தியது என்பார்கள்.
சமீபத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.நாரயண், “Dravidian Years – Politics and Welfare in Tamilnadu” என்னும் புத்தகத்தில், பல மேட்டிமை மோவாயிச நோக்குகளை உடைத்தெறிகிறார். இவர் 1965 முதல் 1997 வரை தமிழக அரசின் பல்வேறு நிர்வாகப்பதவிகளில் இருந்தவர். பின்னர், மத்திய அரசுப்பணிக்குச் சென்றார். இந்தப் புத்தகத்தை மதிப்பீடு செய்த பேராசிரியர் கலையரசன், புத்தகத்தின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிடுகிறார்:
1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் இரண்டு முக்கியக் கருதுகோள்களைக் கொண்டிருந்தது. ஒன்று சமூக நீதிஇன்னொன்று, தமிழ் அடையாளம். 1967 முதல் 1977 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் அரசு திட்டங்களும், கொள்கைகளும், சுயமரியாதைஇயக்கத்தின் லட்சியங்களை ஒத்திருந்தன என்கிறார் ஆசிரியர். இந்தக் காலகட்டத்தில், அரசு நிர்வாகத்தின் மொத்த அமைப்பையே மாற்றியமைக்கும்அடிப்படை வேலையை திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியது என்கிறார் நாராயண். இந்த மாற்றம், அரசுக் கொள்கைகளின் உருவாக்கம் மற்றும்நிறைவேற்றத்தில், அனைத்து மக்களையும் அணைத்துக் கொள்ளும் ஒரு வழிமுறையை உருவாக்கியது; தமிழர் என்னும் அடையாளத்தை கட்டியெழுப்பியது,மக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வை ஊட்டியது என்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம், 1975 ஆம் ஆண்டு, பரம்பரையாக வந்த, கிராம முன்சீஃப் அல்லது கர்ணம் என்னும் நிதித் துறைப் அமைப்பை ஒழித்தது. இதுஊரகச் சமூக அமைப்பின் அடிப்படையையே மாற்றியது. பதிலாக, கிராம நிர்வாக அலுவலர்கள், தமிழக அரசு குடிமைப்பணிக் குழு (Tamilnadu Public Service Commission) மூலம் நியமிக்கப்பட்டது, பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்ட சமூகத்தின் மீதிருந்த ஒடுக்குமுறையை அழித்தது. அவர்களை உயர் ஜாதி பெரும்நிலச்சுவாந்தார்களின் அடக்குமுறையில் இருந்து விடுவித்தது. இந்தக் கொள்கை மாற்றம், சமூகத்தின் எல்லா சாதியிலிருந்தும், குறிப்பாக, தாழ்த்தப்பட்டமற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து கிராம நிர்வாக அதிகாரிகள் உருவாகி வரும் நிலையை ஏற்படுத்தியது. இது பரம்பரையாக கிராமங்களில் இருந்தஉயர் சாதி மேலாதிக்கத்தை உடைத்தது.
இந்தப் புத்தகம், 1960 முதல் 1980 வரையிலான தமிழகஅரசு குடிமைப்பணி குழு (Tamilnadu Public Service Commission) வின் தரவுகளை முன்வைக்கிறது.இந்தக் காலகட்டத்தில், தமிழக அதிகார வர்க்கத்தின் சாதியக் கட்டமைப்பு அடியோடு மாறி, புதிய அதிகாரிகள் பெரும்பாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும்தாழ்த்தப்பட்ட சாதிகளில் அதிலும் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் இருந்து வந்ததையும், கிராமச் சூழ்நிலையை நன்கு அறிந்தவர்களாக இருந்ததையும்குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் இயங்கிவரும் பொது விநியோகக் கட்டமைப்பின் வரலாறு, 1967 ஆம் ஆண்டு தி.மு.க அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்வினோடு மிக நெருங்கியதொடர்புடையது என்பதற்கு ஆதாரங்களை இந்தப் புத்தகம் தருகிறது. ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் வாக்குறுதியோடு பதவிக்கு வந்த தி.மு.க,அதை நிறைவேற்ற, பொது விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்தியது. 1976 ஆம் ஆண்டுக்குள், மொத்த தமிழகத்தையும், கிராமத்துக்கு ஒரு ரேஷன் கடைஎன்னும் அளவில், மிக வெற்றிகரமான பொது விநியோகக் கட்டமைப்பை நிறுவியது. தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும், ரேஷன் கார்டுகள்கொடுத்தது. அவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படைப் பொருட்களின் அளவை அதிகரித்தது, விலையைக் குறைத்தது. (பக்கம்:187).
இந்தக் கட்டமைப்பை, தி.மு.க, தமிழ்நாடு பொது விநியோகக் கழகம் (Tamilnadu Civil Supplies Corporation) என்னும் அமைப்பின் கீழ், கூட்டுறவுநிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தியது. இடதுசாரிகள் ஆண்ட, மேற்கு வங்க / கேரள மாநிலங்களில் கூட அவை, தனியார் முகவர்கள் மூலம் தான் இயங்கின. இதனால், இந்தக் கட்டமைப்பில் இருந்து, பொருட்கள், வெளியே செல்வது (leakage) மிகக் குறைவாக இருக்கிறது. இதை ஆசிரியர், தமிழக பொது விநியோகமுறை, பொதுச் சேவைகளுக்கான தேவை, அரசு மற்றும் அரசியல் கொள்கை, நிர்வாகக் குறிக்கோள் மற்றும் திறன் ஆகியவற்றின் ஒன்றிணைந்த மாதிரிஎன்கிறார். இந்தப் பொது வினியோக முறையின் வெற்றி, “சமூகத்தின் தேவை, அரசியல் கொள்கை உறுதி, மற்றும் நிர்வாகத் திறன்” ஆகியவற்றின்வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிர்வாக அமைப்பு மற்றும் அரசியல் நிலையை தி.மு.க நிறுவியது என்றால், பின் வந்த அ.தி.மு.க,அதை மேலும், மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வலுப்படுத்தியது.”
சுருக்கமாகச் சொன்னால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிர்வாகக்கட்டமைப்பின், மரபணுக்களை திராவிட இயக்கம் முற்றிலுமாக மாற்றியது எனச் சொல்லலாம்
அடுத்து, மதிய உணவுத் திட்டம். காமராஜர் திட்டம் என்பது ஊரக ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம். அதன் நிதி ஒதுக்கீடு 1981 ஆம் ஆண்டு 2 கோடி. ஆனால், 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் கொண்டு வந்த அனைத்துக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு 120 கோடி ரூபாய் எனில், காமராஜர் திட்டத்துக்கும் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், இவர்கூட, 2000த்துக்குப் பின் வந்த இலவசத் திட்டங்களில், திராவிட சித்தாந்தமோ, அடித்தட்டு மக்கள் முன்னேற்றமோ இல்லை. வெறும் பரப்பியல் திட்டங்கள் என்னும் பார்வையை முன்வைக்கிறார்.
இங்குதான், பேராசிரியர் கலையரசனின் கட்டுரையின் தரவுகள், மிக முக்கியமான திறப்பை அளிக்கின்றன.
1993-94 ஆம் ஆண்டில் கூட, தமிழகத்தின் வறுமை நிலை, குஜராத்தோடு ஒப்பிடுகையில், மோசமாக இருந்திருக்கிறது. மொத்தத் தமிழகத்தில் 51.2% (குஜராத்: 43.3%) வறுமை. தாழ்த்தப்பட்ட மக்களிடையே 65.8% (குஜராத் 54.4%). ஆனால், 2012 ல், தமிழகத்தின் மொத்த வறுமை நிலை 15.8% (குஜராத்: 21.5%) ஆகவும், தாழ்த்தப்பட்ட மக்களிடையே 24% (குஜராத்: 33.8%) ஆகவும் குறைந்திருக்கிறது.
1993-94 ல் கல்வியில், மொத்த தமிழகம் (67%) குஜராத்தை (64.6%) விட மேம்பட்டிருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களிடையே குறைவாக (தமிழகம் 51.5%, குஜராத் 52.7%) இருந்திருக்கிறது. ஆனால், 2011 ல், எட்டே ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியறிவு, 23% உயர்ந்து, 74.8% (குஜராத்: 67.6%) ஆகியிருக்கிறது.
மக்கள் நலக் குறியீடுகளிலும், தாழ்த்தப்பட்ட மக்களிடையேயான, குழந்தை இறப்பு சதவீதம் போன்றவை, தமிழகத்தில் குஜராத்தை விட அதிகமாக, 1993-94 ல் இருந்திருக்கின்றன. ஆனால், 8 ஆண்டுகளில் இது, 90 (குஜராத்: 70) என்னும் குறியீட்டிலிருந்து 37 (குஜராத்: 65) ஆகக் குறைந்திருக்கிறது. இன்று, குஜராத்தின் முன்னேறிய சாதிகளில் குழந்தை இறப்பு சதவீதம், தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருப்பதை விட அதிகம்.
மேல் சொன்ன மூன்று பத்திகளின் புள்ளிவிவரங்கள், திராவிட அரசியல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்பவர்களுக்கு சமர்ப்பணம்.
மொத்தத்தில், 1990 களுக்குப் பின், தமிழகத்தின் மக்கள் நலத் திட்டங்கள் ஒப்பீட்டளவில் பெரும் வெற்றிகளைப் பெற்று, மக்கள் நலக் குறியீடுகளை, மற்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெருமளவில் முன்னேற்றியுள்ளன. கலையரசனின் இந்தக் கட்டுரை, அதைத் தரவுகள் மூலம் தெளிவாகச் சொல்கிறது.
உலகின் மிகப் பெரும் பொருளியல் அறிஞர்களான ஜக்தீஷ் பகவதி மற்றும் அமர்த்தியா சென் போன்றவர்களுடன் இந்த விவாதத்தில், ஒரு ஆராய்ச்சி மாணவராக இருந்த காலத்திலேயே துணிவாக இறங்கி, ஒரு புதுப் பார்வையை வைத்திருக்கிறார் கலையரசன். மெச்சத் தக்கது.
பணி நிமித்தம் நான் இயங்கிய தொழில் முறை நிபுணர்கள், உடன் பணிபுரிபவர்கள், பொருளியல் அறிஞர்கள் அனைவரும் வயிரெறியும் விஷயம் ஒன்று. அது, “தமிழகத்தில் சும்மா சோறு போடுகிறார்கள்” என்பது தான். அவர்களுக்கு, நான் அமைதியாக, “தமிழகம், பொருளாதார அளவீட்டில், இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம்” என நினைவூட்டுவேன்.
’இலவசம், இலவசம்” என இழிவாகப் பேசும் திட்டக் கமிஷன் கமிசார்களை, மாவோ அனுப்பியது போல, தமிழக பால்வாடிகளில், சத்துணவு உதவியாளர்களுக்கு அடிப்பொடிகளாக ஒரு ஆறு மாதம் கட்டாயப் பணி செய்ய அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். சோ, ஜெயா டி.வியில் பேசியது போல, கலைஞர் கருணாநிதி, உளியின் ஓசைக்கு வசனம் மட்டும் எழுதிக் கொண்டிருக்கவில்லை; வெற்றி கொண்டான்கள் ஏளனம் செய்தது போல புரட்சித் தலைவி ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு மட்டும் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செய்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, இலவசங்கள் என்பது மோசமான பொருளாதாரக் கொள்கை என்னும் தில்லிப் பொருளியல் மூட நம்பிக்கையை, ”வச்சி” செய்திருக்கிறார்கள்.
பொருளாதார அடித்தட்டில் வாழும் 70% தமிழ் மக்களுக்கு அவர்கள் உண்மையிலேயே தமிழினக் காவலர்கள்; புரட்சித்தலைவர்கள்; புரட்சித்தலைவிகள் தாம்!
பாலா