நாடு == வெண்பாத் துணர்
===========================
நாடு சுதந்திரத்தை நல்வழியிற் பெற்றதனைப்
பாடு மனமுருகிப் பாடு.
*
நாடு நலம்பெற நம்மவர் முன்னாளில்
காடுவெட்டிச் செய்தக் கமத்தாலே – வீடும்
செழித்தகதை தன்னைநீ பாடு.
**
நாடு நமதென்று நம்பி நிதந்தோரும்
காடு வயல்நேசி கட்டாயம் – ஓடும்
நதியில் மணலகழும் நாசத்தை மாற்றும்
விதியெழுதி ஊரெல்லாம் பாடு.
**
நாடு மழைகண்டு நற்பயிர் செய்தோங்க
நாடும் மனங்கள் நடுமென்றால் கன்றொன்று
தேடும் வசந்தம் தெருவெங்கும் பூக்குமென்றே
பாடு படுவோரைப் பாடு.
**
நாடு சனத்தொகையால் நாளும் பெருகிநிற்கக்
கூடுவார் கொஞ்சிக் குலவுவதை – மூடும்
மனதுவைத்து ஓரிரண்டு மக்களைப் பெற்று
தினமவர்க்காய் நன்குழைக்குந் தேற்றக் கனவுகண்டு
தீங்கின்றி பாடுபட்டால் தேக்கின் உறுதியுடன்
ஓங்குமவர் வாழ்வென்றே பாடு
**
நாடு நிகழ்காலம் நல்லாட்சி கொள்ளாமல்
கேடுகெட்டுச் சீரழியும் கேவலத்தால் – ஆடும்
நிலைமைதனை ஆராய்ந்து நற்றீர்வு கண்டே
சிலையான மக்கள் செழிக்கும் - நிலைக்கு
தலைமைகளை ஒன்றிணைத்து தாய்நாட்டைக் காக்க
அலைபோல ஆர்ப்பரித்துப் பாடு
**
நாடு சுடுகாடா நாங்கள் சவங்களா
கூடு எரித்திடக் கூடியே – ஆடுமுங்கள்
நாடகந் தன்னையே நாளெல்லாம் நாட்டிலுள்ள
ஊடகங்கள் மூலம் உடன்கண்டு ஆடலுடன்
பாடலென ஆசையுடன் பார்த்திருந்து துன்பத்தால்
வாடவோ என்றேநீ பாடு
**
*மெய்யன் நடராஜ்