கஜா புயல்

நோய் தீர்க்கும் மருந்தென கொண்டாடும்
இளநீர் குழந்தைகளை சுமந்த
தென்னை அன்னையை
மொத்தமாக அழித்து
இன்பம் கண்ட இயற்கை அன்னையே...
மங்கள நிகழ்ச்சி முதல்
அமங்கல நிகழ்ச்சி வரை
அனைத்திலும் பங்கெடுக்கும்
வாழையும் அழிந்ததே...
நான் வளர்த்த மரங்கள் மட்டுமா??
அன்போடு தலை கோதி,
மடி சாய்த்து வளர்த்த
பசுக்களும், ஆடுகளும் அழிந்து
வாழ்வில் வெறுமை கொண்டேனே...
நான் தினமும்
விருந்துணவாக உண்ணவில்லை.........
பட்டாடை உடுத்தவில்லை...
ஊர் சுற்றி உலா வரவில்லை...
ஆனால்
என் குடிசை வீட்டில்
என் விவசாயத்தோடு, குடும்பத்தோடு
கஞ்சிக்குப் பஞ்சமில்லாமல்
நிம்மதி கொண்டேனே...
இன்றோ,
மானம் காக்கும் உடையிழந்து
உயிர் காக்கும் உணவிழந்து,
குழந்தைகளின் பாட புத்தகம் இழந்து,
இத்தனைக்கும் மேலான
என் குழந்தை செல்வத்தையும் இழந்து
வீதியில் நிற்கிறேனே...
மனிதன் செய்யும் அநியாயம்...
இயற்கைத்தாய் ஆடும் கோரத் தாண்டவம்...
எங்கள் வாக்களிப்பில்
சந்தோஷம் கொண்டாடும் அரசியல்வாதிகள்
எங்களுக்கு அளித்திருப்பது
மண்சோறு கூட இல்லை...
விழிகளில் கொட்டுவது
கண்ணீர் அருவி அல்ல...
ரத்த வெள்ளம்...