இயற்கை தந்த விருந்து

காதலன் உதய சூரியன்
ஸ்பரிசம் பட்டு ஆங்கு
தடாகத்தில் கமலமது
மொட்டவிழ மலர்ந்து
வடிவான கொடியையும்
நீருக்குமேல் உயர்த்த
அக்கமலம், என் கண்ணில்
கமலமென்ற பெண்ணொருத்தி
தடாகத்தில் குளித்தெழுந்தால் போல்
காட்சி தந்ததே

அதைக்கண்டபின் வயல்வெளிக்கு வந்த நான்
ஆங்கு வரிசை வரிசையாய்
பெரிய பெரிய சூரிய காந்தி
ஆதவன் கிரணம் தீண்ட அகமகிழ்ந்து மலர
என் கண்களுக்கு அந்த காட்சி
ஆதவனை வணங்கும் சிரிக்கும்
பாவை விளக்குகள்போல் காட்சி தந்தனவே

அந்தி மயங்க, ஆதவனும் மறைய
நீல வானில் பவனி வந்தான் வெள்ளிநிலவு
நிலவின் வரவிற்கு காத்துநின்ற அல்லி மொட்டுக்கள்
அவன் கதிர்கள் பட்டவுடன் சிலு சிலுத்து
அழகாய் அலர்ந்தனவே நிலவோடு காதல் கொள்ள
வந்த குமுதக் கன்னியாய் அவள் தோழிகள் புடை சூழ .

என்னென்பேன் இந்த விந்தைதரும் இயற்கை விருந்தை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Nov-18, 6:15 pm)
பார்வை : 459

மேலே