படைப்பும் கல்வியும்--------------------------முத்துச்சிதறல் -----வாசிப்பே எழுத்திற்கான ஊற்று

இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாளையொட்டி, MOP வைஷ்ணவா பெண்கள் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்வின் காணொளிப்பதிவிது.

எந்த அசல் கலைஞனுமே தனக்கு தெரியாதவற்றைத்தான் செய்கிறான். ‘அது’ செய்யப்படும் வரை அவன் அறிதலில் ‘அது’ இல்லை. திருக்குறளை திருவள்ளுவர் தெரிந்து கொண்டா எழுதினார்? அதுபோலத்தான் என் இசையும் என்று படைப்பாளி என்பவன் யார் என்று இக்கல்லூரி மாணவிகளுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார் இசையின் ராஜா.

வெற்றிடத்தில் இருந்துதான் எதுவுமே உருவாக முடியும்; அறியாமையில் இருந்துதான் அறிதலை உணரமுடியும் என்ற இந்த இசைஞானியின் வார்த்தைகள், படைப்பூக்கமற்ற கல்வியில் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு மிகப்பெரிய திறப்பு.

என்னுள் எப்போதும் என் தாய் இருப்பதால் தான் என் பாடல்களால் உங்களை இரவில் தாலாட்ட முடிகிறது என்கிறார், ஒரு மாணவியின் கேள்விக்குப் பதிலாக.

மனிதர்களின் ஆழ்மனம் அனைவருக்கும் ஒன்றுதான். நானறியாத என் (நம்) ஆழ்மனத்தை என் படைப்பூக்கத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும்போது, அதன் வெளிப்பாடாக வரும் இசை அனைவருக்கும் நெருக்கமானதாகி விடுகிறது. இதுதான் என் இசைப்படைப்பையும் உங்களுக்கு நெருக்கமானதாக ஆக்கிவிடுகிறது என்கிறார் இன்னொரு மாணவியின் கேள்விக்குப் பதிலாக.

“இளமை எல்லாம் வெறும் கனவு மயம்

இதில் மறைந்தது சில காலம்

தெளிவும் அடையாது முடிவும்
தெரியாது

மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம்….

ம்ம்ம்….மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்….”

என்று எம்.எஸ்.வி இசையமைத்த கண்ணதாசனின் வரிகள்தான் தனக்காக உந்து சக்தி என்று அங்கிருந்த இளைஞிகளின் மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்து விடைபெற்றார்.

தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் இக்கல்லூரி மாணவிகள். நிகழ்வு முடியும்வரை ஒரு படபடப்பான கம்பீரத்துடனேதான் இருந்தார், இசைஞானிக்கு அருகிலேயே அமர்ந்திருந்த அக்கல்லூரியின் முதல்வர்.

இளையராஜா போன்ற படைப்பாளிகள் இதுபோல சிலமணி நேரங்களாவது கல்லூரிகளில் ஆசிரியர்களாக கலந்துரையாடுவது இளைய சமுதாயத்தின் படைப்பாற்றலை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் என்றே தோன்றுகிறது.

எழுதியவர் : (24-Nov-18, 5:47 am)
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே