ஒரே வார்த்தையிலே

"முதல் வரியிலேயே பிடிச்சி நிறுத்தணும், அப்படி ஒண்ணு எழுதி கொண்டு வா...போ..."
அப்படி ஒண்ணு எழுத தெரிஞ்சா நான் ஏன் இங்க குப்பை கொட்ட போறேன்..
என்ன முணுமுணுப்பு , போய் சொன்னதை செய்டா ...
போயாச்சு, போயாச்சு...
அடச்சே, எத்தனை முறை யோசிச்சாலும் எதுவும் தோணலையே, இந்தாளு வேற முதல் வரியிலேயே பிடிச்சி நிறுத்தணும்னு கழுத்தறுக்கறான், ஏன் ரெண்டாவது வரியிலே பிடிச்சி நிறுத்தினா கழுத்தை பிடிச்சி வெளில தள்ளிடுவானோ, நொய்யு நொய்யுன்னுட்டு...எங்கப்பன் அப்பவே சொன்னான், ஒழுங்கா கூட இருந்து பொட்டலம் கட்ட கத்துக்கோ, மளிகை சாமானம் வித்தே மாளிகை கட்டிடலாம்னு கேட்டா தானே, இவன்கிட்ட மாட்டிகிட்டு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டு இருக்கேன்...
த்தா, வந்துட்டான், அஞ்சு நிமிஷம் ஹப்பாடான்னு உட்கார விடமாட்டானே...
“என்ன ரவி சொன்ன மாதிரி எழுதிட்டியா?”
“சார், எழுதிட்டே இருக்கேன், கொஞ்சம் டைம் குடுங்க...”
“இன்னும் டென் மினுட்ஸ்ல எழுதிட்டு வரல ஐ வில் ஷூட் யு...”
கடவுளே, காப்பாத்து...இந்த வேலையை நம்பி தான் இஎம்ல எக்கச்சக்கமா வாங்கி போட்ருக்கேன், இதுல அடுத்த வாரம் பொண்டாட்டி பொறந்த நாளுக்கு வேற சர்ப்ரைஸ் கிப்ட்னு எதையாவது வாங்கணும், காஸ்ட்லியா இல்லனா மூஞ்சு மேலயே தூக்கி எரிவா, என்ன கொடுமை...ஹான்...ஐடியா கிடைச்சிடுச்சி, என் பொண்டாட்டி தான் புத்திசாலி ஆச்சே, அவகிட்டயே இதுக்கு சொலுயூஷன் கேட்டா...
சரி போன போட்டு பேசிட வேண்டியது தான்...
"ஹலோ டார்லிங் மாமா பேசறேன்மா, இன்னைக்கு"
"மாமா, நானே கூப்பிடணும்னு நினச்சேன், நீங்களே கரெக்ட்டா கூப்டிங்க..இன்னைக்கு நான் உங்களுக்காக ஆசையா மீன் குழம்பு வைக்க போறேன், சீக்கிரம் சாப்பிட வந்துடுங்க, நம்ம பக்கத்து வீட்டு ரேகா இருக்காளே, அவ தான் மீன் குழம்பு வைக்க தெரியும்னு ரொம்ப அலம்பல் பண்றா ,நான் வைக்க போற மீன் குழம்புல இன்னைக்கு தெருவே மணக்க போகுது பாருங்களேன்"

"நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு"
"ஐயோ நீங்க சொன்னதும் தான் நியாபகத்துக்கு வருது, மீன் குழம்பு எப்படி வைக்கறதுனு அம்மாகிட்ட கேட்டுகிட்டு இருந்தேன் நீங்க கூப்பிட்டதும் ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு வந்தேன், உங்ககிட்டே பேசிட்டே மறந்துட்டேன்,செகண்ட் லைன்ல அம்மா இருக்காங்க, இருங்க அம்மாகிட்ட பேசிட்டு வரேன்..."
"இரும்மா, ஒரு நிமிஷம்"
வச்சிட்டா..இப்போ என்ன பண்றது, இன்னும் பத்து நிமிஷத்துல எதையாவது எழுதிட்டு போகலேன்னா காட்டு கத்து கத்துவான்...எதாவது மாஜிக் நடக்காதா...
ஆஹா என் அருமை பொண்டாட்டி தான் மறுபடியும் கால் பண்றா, இப்போ டக்கு டக்குனு பிரச்சனையை சொல்லி நல்ல ஐடியாவா வாங்கிட வேண்டியது தான்...
"என்னங்க, சொல்ல மறந்துட்டேன்,கொஞ்சம் மளிகை சாமானம் வாங்க வேண்டியது இருக்கு, லிஸ்ட் வாட்சப்ல அனுப்பறேன், நீங்க வரும்போது வாங்கிட்டு வந்துடுங்க"
"ஹே, முதல்ல நான் எதுக்கு போன் பன்னேனு கேளு"
"குறுக்க குறுக்க பேசாதீங்க,அப்புறம் சொல்ல வந்ததே மறந்துற போறேன்,வாங்கற சாமான்லாம் சரி பார்த்து, பில் செக் பண்ணிட்டு வாங்குங்க, போன முறையே பெரிய வெங்காயம் கேட்டா சின்ன வெங்காயம் வாங்கிட்டு வந்துருக்கீங்க, அதுக்கும் முந்தின முறை வாங்காத சோப்புக்கு பில் கட்டிட்டு வந்துருக்கீங்க, கொஞ்சம் கவனமா பார்த்து வாங்கிட்டு வாங்க, லிஸ்ட்ல எதுவும் விட்டு போய்ட போகுது"
"நான் என்ன சொல்ல வரேன்னு கேளு முதல்ல "
"முதல்ல இருந்துலாம் எதுவும் சொல்ல முடியாது, லிஸ்ட் பார்த்து பொறுமையா சீக்கிரமா வாங்கிட்டு வாங்க, எதாவது சொதப்பனிங்க ஐ வில் ஷூட் யு"
இந்த மேட்டர் இவளுக்கு எப்படி தெரிஞ்சது, ஐடியா குடுப்பானு பார்த்தா லிஸ்ட் குடுக்கறாளே..இவளை....
"அடியே முதல்ல என்ன பேச விடுடி...நானும் பொறுமையா போயிட்டு இருக்கேன், லூசுத்தனமா பேசிட்டே போற"
"என்னது நான் லூசா"
“நீதாண்டி, நீயே தான், ஒருத்தன் இந்நேரத்துக்கு போன் பன்றானே, எதுக்கு பன்றான், எதாவது பிரச்சன்னைய்யா, என்னவா இருக்கும்னு கேட்கணும்னு தோணல, அப்போ நீ லூசு தானே"
"என்னய்யா லூசுன்னு சொன்னிங்க"
"ஆமாடி ஆமா"
"லூசுன்னு தெரியுதுல்ல,அப்புறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணீங்க"
"அது தாண்டி நான் பண்ண பெரிய தப்பு,உன்ன கல்யாணம் பண்ணினத்துக்கு அவளை பண்ணிருந்தேனா இந்நேரம் என் வாழ்க்கையே சொர்க்கமா இருந்திருக்கும்"
"என்னது,அவளா..அப்போ நீங்க என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கிங்க, இனி உங்களோட ஒருநிமிஷம் கூட வாழமாட்டேன், இப்போவே என் அம்மா வீட்டுக்கு போறேன், போன வைங்க"
அய்யயோ ரவி உளறிட்டியே...
இப்போ போய் அவளை சமாதானம் பண்ணியே ஆகணும், இல்லாட்டி என் வாழ்க்கையே போய்டும்..
என்ன ரவி, எழுதிட்டியா..
ஐயோ சார் முதல் வார்த்தையிலேயே பிடிச்சி நிறுத்தணும்னு எழுத சொன்னிங்க... இப்போ ஒரே வார்த்தையில என் வாழ்க்கையே போய்டுச்சு சார்...
"வாவ் சூப்பரா இருக்கே ரவி... இதையே முதல் வரியா போட்ருங்க...
என்னது,இத முதல் வரியா போடணுமா?!!!

எழுதியவர் : ராணிகோவிந் (30-Nov-18, 5:18 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
Tanglish : ore vaarththaiyile
பார்வை : 1091

மேலே