திகிலும் ருசிக்கும் 12

திகிலும் ருசிக்கும் 12
"என்ன மோகினி,மறுபடியும் என்ன ஆச்சி, ஏன் இந்த சோகம்..."
"அப்பா ஆகிட்டீங்க,இனி என்ன மறந்துருவிங்க தானே"
"என்ன மோகினி இப்படி சொல்லிட்ட,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ எப்பவுமே நீ தான் என் முதல் குழந்தை..."உணர்ச்சிவசப்பட்டு மோகினியை சமாதானம் செய்துவிடும் நோக்கில் பேசிக்கொண்டிருந்தேன்...
"இது போதும் அப்பா,ஆனா.."
"ஆனா என்ன"
"நீங்க என்னோட அப்பாவா எப்பவும் இருக்க முடியாதே, நான் தான் ரெண்டு நாள்ல போய்டுவேனே"
இதற்கு என்ன பதில் சொல்வது, ஓன்று மட்டும் புரிந்தது, இனிவரும் காலத்தில் மோகினிக்கு நான் என்ன செய்வேன் என்பது முக்கியமல்ல, அவள் வேண்டுவதெல்லாம் என் மனதில் இருந்து அவளுக்காக நான் பேசும் வார்த்தைகள் மட்டும்தான்...அந்த அன்பான வார்த்தைகளே அவளை திருப்திபடுத்திவிடும் என்று உணர்ந்ததால் எந்த அளவுக்கு அவளை மனநிறைவாக்க முடியுமோ அந்த வார்த்தைகளை கொண்டு பேச யோசித்துக்கொண்டிருந்தேன்...
"நீ ரெண்டு நாள்ல போனாலும் சரி மோகினி, என் மனசுல நீ தான் முதல் பொண்ணுன்ற நினைப்பு எப்பவும் இருந்துட்டே தான் இருக்கும்"
"ஆனா அப்பா..."
"என்ன மோகினி நீ என்ன நம்பலையா, சரி நீ என்னை நம்பணும்னா நான் என்ன செய்யணும் சொல்லு"
"வேண்டாம்ப்பா, நீங்க எதுவும் செய்ய வேண்டாம், உங்களால எதுவும் செய்ய முடியாது"
என்னால் முடியாது என்று மோகினி சொன்னதும் என் ஈகோ முழித்துக்கொண்டது, அதெப்படி என்னால் முடியாமல் போகும், அவள் அப்பாவால் எதுவும் செய்ய முடியும் என்று என் அருமை மகளுக்கு புரியவைத்தே ஆகவேண்டும் என்று மனதுக்குள் ஆக்ரோஷம் எழுந்தது...
"மோகினி, அப்படி மட்டும் நினைக்காதே,என்னோட முதல் பொண்ணுக்காக நான் எதையும் செய்வேன், நீ என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு...அப்போ தெரியும் உன் அப்பா எவ்ளோ திறமைசாலின்னு..."
“யோசிச்சி சொல்லுங்கப்பா..”
“அதெல்லாம் யோசிச்சாச்சு, நீ சொல்லு, உனக்காக இந்த அப்பா செய்றேன்...”
“என்ன சொன்னாலும் செய்விங்களா?”
“இதென்ன கேள்வி, என்னனு சொல்லு, செய்ய தயாரா இருக்கேன்...”
“சத்தியம் செய்ங்க, அப்புறம் சொல்றேன்...”
“ஒஹோ...சத்தியம் செய்தா தான் நம்புவியா, சரிம்மா, சத்தியமா செய்வேன், இப்போவாது சொல்லு...”
“வெறும் சத்தியம் வேண்டாம், பிறக்க போகற பாப்பா மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க...”
“பாப்பா தான் பிறக்கும்னு முடிவே பண்ணிட்டயா, சரி பாப்பா மேல சத்தியமா என் முதல் பொண்ணு எதை கேட்டாலும் செய்வேன்..”
“எதை கேட்டாலுமா?”
“எதை கேட்டாலும்..”
“தாலாட்டு பாட சொன்னா?”
“பாடுவேன்...”
“ஊர் சுத்தி காட்ட சொன்னா?”
“காட்டுவேன்...”
“24 மணி நேரமும் கூடவே இருக்க சொன்னா?”
“இருப்பேன்...”
“கொலை செய்ய சொன்னா??”
“செய்வேன்....”
“அப்போ நான் சொல்ற ஆளை கொல்லுங்கப்பா... “
மோகினி எதை கேட்டாலும் செய்து சந்தோஷப்படுத்திவிட வேண்டும் என்கிற மனநிலையில் கடைசியாக மோகினி கேட்ட விருப்பத்தின் விபரீதத்தை மனம் புரிந்து கொள்வதற்கு முன்பு அதையும் செய்வதாக சம்மதித்துவிட்டது, அந்த அபத்தம் புரிந்து சுதாரிப்பதற்குள் மோகினி என் சம்மதத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டது..
“என்ன மோகினி சொல்ற?”
“ஆம்மாப்பா, ஒருத்தரை கொலை செய்யணும்....”
“கொலையா?”
“கொலை தான், ஆனா அது கொலை மாதிரி தெரிய கூடாது..”
“மோகினி உன்ன குழந்தை மாதிரின்னு சொன்னதுக்காக, நீ குழந்தைத்தனமா என்கிட்ட விளையாடறயா?”
“இது விளையாட்டு இல்லப்பா,நீங்க எனக்காக எதையும் செய்வேன்னு சத்தியம் செய்துருக்கிங்க, அதுவும் பிறக்க போற பாப்பா மேல, அப்படி இருக்க நான் எதுக்குப்பா உங்ககிட்ட விளையாட போறேன் ...”
“இப்போ கூட நீ பேசறதை என்னால சீரியசா எடுத்துக்க முடியலை, உன் விளையாட்டு போதும் மோகினி..இதோட நிறுத்து...”

“அப்பா என் விளையாட்டு இனி தான் ஆரம்பிக்க போகுது...நான் என் கடந்த காலமா உங்ககிட்ட சொன்ன அத்தனையும் பொய்..நான் எதுக்காக உங்க வீட்டுக்கு வந்தேன்னு காரணம் கேட்டுட்டே இருந்திங்களே, அதுக்கான காரணத்தை சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சுப்பா...”
தலை சுற்றி கொண்டு வந்தது, இந்த மோகினி என்னிடம் பொய் சொல்லிருக்கிறதா, மனிதர்கள் பொய் சொன்னது போய் செத்து பேயாக வந்த மோகினியும் பொய் சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறது...
என் மகளாக தலையில் தூக்கி கொண்டாட நினைத்த மோகினியை இனி எப்படி எதிர்கொள்வேன், மோகினியின் பொய்யிற்க்கு பின் சூழ்ச்சி இருந்தால்...அட ராமா...நான் என்ன செய்ய போகிறேனோ..ஒன்றும் புரியாமல் மோகினியின் நிஜ கதையை கேட்க காத்திருந்தேன்...

எழுதியவர் : ராணிகோவிந் (30-Nov-18, 5:32 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 748

மேலே