மூன்றாம் பாலின் கண்ணீர்
மழைச் சாலை தவளை போல
வாழ்வு நசுங்கிக் கிடக்கே
மனசாட்சி இல்லாமத்தான்
சமுதாயமும் இருக்கே
இப்படித்தான் பிறந்ததென்ன
எங்க குத்தமா
இது புரியாம ஒதுக்குறீங்க
ஒட்டுமொத்தமா
மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைய
ஒதுக்கவில்லையே
மனவளர்ச்சி குறைஞ்ச பிள்ளையக்கூட
ஒதுக்கவில்லையே
எங்கள பெத்தவங்களே பிள்ளையாக
ஏத்துக்கவில்லையே
என்னென்னவோ கெஞ்சிப் பார்த்தோம்
சேத்துக்கவில்லையே
குடும்பத்தில் சேத்துக்கவில்லையே
பள்ளிக்கூடம் படிக்கப் போனா
பகடி பண்ணுறாங்க
கல்லூரிக்குள்ள நுழையப் போனா
கதவச் சாத்துறாங்க
கைகழுவி அழுத ரத்த சொந்தங்களும்
கைகொட்டி சிரித்த மத்த சொந்தங்களும்
கைதட்டி உதவி கேட்க வைச்சது எங்களைத்தான்
கடைசியில் நம்பி வந்தோம் நாங்க உங்களைதான்
நல்லவங்க ஒதுங்கி ஒதுங்கிப் போறதாலதான்
கேடு கெட்டவங்க கிட்ட வந்து கிண்டல் பண்ணுறான்
எட்டும் ஒன்னும் எதனையின்னு சீண்டிப் பாக்குறான்
எகத்தாளம் பிடிச்ச பய இடுப்பக் கிள்ளுறான்
இயலாமையின் உச்சத்தோட கை நீட்டுறோம்
ஏதாவது உதவி செஞ்சா கை கூப்புறோம்
உங்கள கை கூப்புறோம்
ஏதாவது வேலைக்குத்தான் போகச் சொன்னீங்க
எதார்த்தத்த புதைசுப்புட்டு நல்லாச் சொன்னீங்க
எங்களுக்கு வேலை இங்க தருவதாருங்க
முடிஞ்சாக்க வேலை வாங்கி தந்து பாருங்க
நீங்க கொடுத்த பணத்தில் கோட்டை கட்ட
ஆசை இல்லைங்க
வங்கியில் சேர்த்து வைக்க
கணக்கும் இல்லைங்க
போக்கு வழி எல்லாமே அடைச்சதாலதான்
வீதி நிறைஞ்சு வீடு நுழைஞ்ச வெள்ளம் நாங்கதான்
சபிப்பதையும் சகிப்பதையும் விட்டுத்தள்ளிட்டு
சக உயிராக எங்களையும் பார்த்துப் பழகுங்க
இனிமேலும் எங்களைத்தான் வெறுக்காதீங்க
ஏதாவது உதவி செய்ய மறக்காதீங்க
இப்படித்தான் பிறந்ததென்ன
எங்க குத்தமா
இது புரியாம ஒதுக்காதீங்க
ஒட்டுமொத்தமா