தூங்கும்போது எழுதியது
நீ என்
சூன்யங்களை நிரப்பினாய்.
நான் உன்
உலகத்தை திணறடித்தேன்.
*****
பூக்களை
தேடும் பட்டாம்பூச்சிகள்
இலைகளோடு மட்டும்
பேசுவதும் பாடுவதும் இல்லை
*****
எப்பொழுதும் போல
பேச்சு மூச்சற்ற வானம்
தந்தவண்ணம் இருந்தது.
*****
அக்கனவை வரைவதற்கு
வந்த ஓவியன்
திரும்பவே இல்லை
அக்கனவுக்குள் இருந்து.
******
கிளையதிர படபடத்த கொக்கு
மனமதிர நம்பியது
தானொரு மரமென்று.
தானொரு கொக்கென்று
நினைத்த அம்மரம் போல...
****
அப்பாவுக்கு
கதர் ஜிப்பாவும்
கருப்பு கூலிங் கிளாஸும்
பாட்டா ஷூவும் வாங்க
சேமித்தபடியே இருந்தாள்
அனாதை சிறுமி.
*****
கவிதை கவிதை
என அலறும்போதே
செத்து மூழ்கின சொற்கள்
மனதுக்குள்...
*****