‘குகை’ -------------------சிறுகதை - ----------------------கடிதங்கள்

குகை [சிறுகதை]-1
குகை [சிறுகதை] -2
‘குகை’ [சிறுகதை]-3
‘குகை’ -சிறுகதை -4


அன்புள்ள ஜெ,



நான் எட்டு ஆண்டுகளாக டிராங்குலைசர்களை பயன்படுத்தியவன். அப்போது பல பிரச்சினைகள். சின்ன அளவில் ஸ்கிஸோப்ர்னியா. அதன்பின் இப்போது சரியாகிவிட்டது. அல்லது கட்டுக்குள் இருக்கிறது.



உண்மையாகவே இந்த மாத்திரைகளில் ஒரு குகை எஃபக்ட் உண்டு. குகைக்குள் சென்றுகொண்டே இருப்போம். குகை கிளைபிரிந்துகொண்டே இருக்கும். அந்தக்குகை ஏன் வருகிறது என்று கேட்டிருக்கிறேன். அப்போது சொன்னார்கள் மனிதன் கருவறையிலிருந்து குகைப்பாதை வழியாக வந்த ஞாபகம் அவனிடம் இருக்கிறது. இடுங்கிய அறைக்குள் மூச்சுத்திணறுவதும் குகைவழியாகச் செல்வதும் மனிதனின் ஆதி இமேஜ்கள் என்றார்கள். என்னால் அந்தக்குகைகளை இப்போதுகூட ஒரு மனநடுக்கத்துடன்தான் நினைத்துப்பார்க்கமுடிகிறது.



குகை கதையை அந்த அடிப்படையிலேதான் வாசித்தேன். இந்தக்கதையில் வருவதுபோல அந்தக்குகைக்குள் உலகமே இருக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு அடிப்பக்கம் மாதிரி. எல்லாமே தெரியும் அங்கே. அதற்குமேல் சொல்லமுடியவில்லை. இரண்டுமுறை வாசித்தேன்.



சங்கர்







அன்புள்ள ஜெயமோகன் சார்,



“குகை” சிறுகதைக்கும்[ கொஞ்சம் பெரிய கதையாய் இருக்கிறது] “வெற்றி” சிறுகதைக்கும் எதோ சம்பந்தம் இருப்பதுபோலவே தோன்றியது. எனக்கும் எனது மனதுக்கும் இந்த குகைக்கும் சம்பந்தம் இருப்பது போலவும் எனக்காகவே எழுதபட்ட கதை போலவும் இருக்கிறது. மனம் என்னும் நீண்ட இருளான பார்க்ககூடாததை பார்த்து தொலைப்பதினால் முட்டிமோதி அலையும் குகை. ஆனால் இந்த நகரத்தில் வெள்ளைக்காரர்களின் காலத்தில் இருந்து தான் குகைக்குள் நடப்பவர்களை கதை சொல்லி சந்திப்பதுதான் நெருடுகிறது. ஒருவேளை அவர்களால் தோண்டபட்ட டனல் என்பதினால் அதிலுருந்து கதையை தொடங்கி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.விஸ்கி வெள்ளைகாரர்கள் கொண்டு வந்ததாக இருக்கலாம் ஆனால் உடம்பு ஆதி மிருகம் என்பது எவ்வளவு சத்தியம். கதையை வாசிக்க மூன்று இரவுகள் பனிரெண்டு மணிவரை காத்திருந்தது அப்படி ஒரு த்ரில்லான அனுபவம் சார்.





இரவு நாவலில் ஒரு விசித்திரமான உலகம் என்றால் இது இன்னொரு விசித்திர உலகம். நிகழ்காலத்தில் யாருக்கும் பெயர் இல்லை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றை,நாம் வாழ்ந்த வீடுகளை உறங்கிய புழங்கிய வாழ்க்கையை பின்னோக்கி திரும்பி பூமிக்குள் இருந்து பார்ப்பது.துரோகத்தினால், பயத்தினால் தோல்வியடைந்த ஆன்மாக்களின் உலகம்.முதல்நாள் இந்தக்கதையை வாசித்த உடன் இரவு வேலியம் வாங்க அப்போல்லோ போகலாமா? இல்லை மெட்பிளஸ் போகலாமா? என யோசித்தபடியே தூங்கியது இன்று பெரிய அதிர்வாக இருக்கிறது. இப்போதும் மெல்லிதாக “நீயே நிரந்தரம்” என்று ஸ்வர்ணலதா கிறிஸ்துவிடும் மன்றாடும் சாங்கை கேட்டபடிதான் எழுதிகொண்டிருக்கிறேன்.ஒரு கதைக்குள் நீங்கள் கொண்டுவரும் வரலாறு [அல்லது புனைவு வரலாறு,ஏனென்றால் நிக்கல் ஓடியாவில் மட்டுமே கிடைப்பதாய் விக்கிபிடியா கூறுகிறது. ஒருவேளை ஓடியாவில் தான் கதை நடக்கிறதா? ஆந்திர தொழிலாளர்கள் என்றெல்லாம் வருகிறது.ஆனால் சிப்பாய்கலகம் முதன் முதலில் வேலூர் கோட்டையில் நடந்ததாக எழுதி இருக்கிறது. ஒருகோடி ஜனத்தொகை என்பதுதான் சென்னையாய் இருக்குமோ என எண்ணவைக்கிறது ] வியப்பாய் இருக்கிறது. தர்க்கங்கள் அந்த அந்த நேரத்திற்கு வந்தாலும் கதை முழுதும் அதே போல் வருவதினால் அதும் ஒரு அழகியல் என எடுத்துகொள்ள வேண்டுமா சார்?





“மெல்லிய அச்சத்தைபோல் துணை யாரும் இல்லை” முதல் பகுதில் வரும் வரி,கதை சொல்லியின் மனநிலையை குறிக்கிறது.ஒட்டு மொத்த மானிடருக்கும் இந்த மெல்லிய அச்சம் இல்லை என்றால் எதை மீறி மீறி வாழ்வது?. ஆனால் ஏன்? விடை: கடந்த காலத்தின்,வரலாற்றின்,நமது தொடர்ச்சியின் அடியில் உள்ளது. வரலாற்றின் புத்தகங்களிலும், வாய் வழி கதைகளிலும் இந்த பூமியின் மேற்பரப்பில் நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாய் வாழ்பவர்களுக்கு கண்ணீர் சிந்த டீ.வி.சீரியலும், அலைபேசி உரையாடலும் போதும். அதே வரலாறு, நிகழ்வுகள் நடக்கும் போது பூமிக்கு அடியில் இருந்து பார்ப்பவனின் நிலைமை பைத்தியம் தான். ஏனென்றால் மேற்பரப்பில் வீடு, உறவு, தெரு, என கட்டம் போட்ட எல்லைகள் உள்ளது. பூமிக்கு அடியில் இருந்து பார்ப்பவனுக்கு ஏது எல்லை? ஆனால் அந்த பைத்தியங்கள் இல்லை என்றால் இந்த உலகில் எந்த வரலாறும் உருவாவதில்லை. மீறுதல் மட்டுமே கொண்டு கடப்பது. அம்மாவின் பேச்சை, மாத்திரையை, வழியில் சொல்லப்படும் புத்திமதியை அனைத்தையும். ஆனால் வழி தவறி திக்குதெரியாமல் தவிக்கவும் ரெடியாக இருக்கவேண்டும். அப்படி எத்தன பேருக்கு வாழமுடியும் மேற்மர தளத்தை, காரையை ,செங்கல்லை, கற்பாளத்தை சுரண்டி சுரண்டி குகையின் சேற்றில் நடக்க.முதலில் இத்தனை லேயர் உள்ளது எனவும் அதை தாண்டினால்தான் குகைக்குள் இறங்க முடியும் என தெரிய வேண்டுமே.





வாழ்வில் கண்டு அதிர்ந்து புத்திபேதலிக்க செய்த இரண்டு காட்சிகள் அல்லது சம்பவங்களில் ஒன்றை நேருக்கு நேர் சந்திக்கிறான், ஒன்றில் இருத்து தெறித்து ஓடுகிறான் “நான்”. ஆனால் அது அவனுக்குள் ஒரு வரலாறையே கொண்டு வருகிறது. அதிரும் சம்பவங்களின் தொகுப்புதான் மனமும் வரலாறும் என நினைக்கிறேன். அதிராதவனுக்கு எதுவும் இல்லை.





ஸ்டீஃபன்ராஜ் குலசேகரன்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்



உங்களின் எழுத்துக்களில் முதன்முறையாக இத்தனை மாறுபட்ட , யாராலுமே கற்பனை செய்ய முடியாத ஒரு கதைக்களம் இந்த குகை சிறுகதையில் தான் இருந்ததென்று நினைக்கிறேன். 4 நாட்களாகவே இக்கதையினின்றும் வெளியேற முடியாமல் மனம் குகைக்குள்ளிருக்கும் சுரங்கத்துக்குளேயே சுற்றிக்கொண்டிருந்தது. இறுதியில் அவன் வழியைத்தொலைத்துவிட்டு ஓடிவருகையில் இனி பலகாலம் என் மனமும் அங்கேயே உழன்று கொண்டும் எதிரில் வருபவர்களிடம் வழிவிசாரித்துக்கொண்டுமிருக்கும் என்று தோன்றியது



எனக்கும் மிகத்தாழ்வான மற்றும் குறுகலான இடங்களில் செல்லவும் கொஞ்சநேரம் இருக்கவும் பயமாக இருக்கும். பெரிய ஷாப்பிங்மால்களில் தரைத்தளத்திற்க்கு கீழிருக்கும் கார் பார்க்கிங்கிலிருர்ந்து மேலே செல்லும் வழிகளில் போவதை கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். செல்ல நேர்ந்தால், காரணமில்லாமல் பயந்தபடியே வருவேன் மண்ணைத் தோண்டி ஏற்படுத்தப்பட்டிருக்கும் அந்தப்பகுதியும் அங்கிருக்கும் ராட்சஷக்குழாய்கள்பதிந்து இருக்கும் மேற்கூரையும் குளிரூட்டும் இயந்திரங்களின் உறுமலும் மிகுந்த பயமேற்படுத்தும் அதைப்போலவே ரயில் பயணங்களில் குகைக்குள் ரயில் செல்லும் கொஞ்சநேரமும் திகிலுடன் தான்இருப்பேன். வீட்டிற்கு அடியில் ஏதோ இருக்கும் என்னும் சந்தேகத்துடன் துவங்கிய இந்தக்கதை ஆரம்பத்திலேயே எனக்கு அச்சமும் ஆர்வமுமாய் கலவையான உணர்வை தோற்றுவித்தது.



முதல் நாளிலேயே மனசு சரியில்லாத அவனுக்கு அந்த வீட்டின் அசாதாரணம் எப்படியோ தெரிந்திருக்கிறது. இப்படி சிலரை நானும் சந்த்தித்திருக்கிறேன். தலைக்குக்கொஞ்சம் சுகமில்லாத ஒருவருடன் அழைப்பிதழ் கொடுக்கச்சென்றிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குள் மட்டும அவர் வர மறுத்துவிட்டார் . அவரை தெருவிலேயேவிட்டுவிட்டு நாங்கள் உள்ளே சென்றதும் அங்கிருந்த ஒரு நாய் எதிர்பாராமல் உடன் வந்த ஒருவரை பாய்ந்து கடித்துவிட்டது



நானிருக்கும் இந்த கிராமத்தில் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு வீட்டில் 7வயதில் ஒரு மூளைவளர்ச்சியின்றி, மனம் சரியில்லாத பேச்சும் வராத சிறுவன் இருக்கிறான் தெருவில் போவோர் வருவோரை கடித்தும் வைத்து விடுவானாகையால் எப்போதும் கண்காணித்தபடியே இருப்பார்கள்



சில மாதங்களுக்கு முன்னால் அவன் ஒரு நாள் மதியத்திலிருந்து வீட்டுக்குள்ளே வர மறுத்து பெரிய அடம் என்ன சொல்லியும அவன் வரவே இல்லை. வாசலிலேயே ஒரு நாடாக்கட்டில் போட்டு அவனுடன் அனறு இரவு அவன் அம்மா தூங்கினாள் அன்று அதிகாலை அந்த குடும்பத்தலைவர் மாரடைப்பில் இறந்துபோனார். இவர்களெல்லாம் எப்படியோ ஒரு வகையில் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள் என்று நினைப்பேன்.



பிளாஸ்டிக் உறை காற்றில் அலைக்கழிந்து பின்னர் மூலையில் சென்று பதுங்கிக்கொள்வது சாதாரணமாக நடக்கும் ஒன்றுதானென்றாலும் அன்று அந்த புது வீட்டில் முதல் நாளில் நடந்ததை வாசிக்கையில் அமானுஷ்யமாக இருந்தது



’’தம்பி’’யைப்போல அமானுஷ்யக்கதையாயிருக்கும் என்றே நினைத்தேன். கதையை வாசித்துசொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த மகனும் அதையே யூகித்தான். ஆனால் முற்றிலும் வேறுபட்டிருந்தது அடுத்தடுத்த விவரணைகள்

அவன் ஏன் ஒருவேலையும் செய்யாமலிருக்கிறான் என்று ஒருசந்தேகமிருந்தது. கேஸ் சிலிண்டரைப்பிடிக்கக்கூட அம்மா சென்றதும் தெரிந்துவிடது இவனுக்கு என்னவோ சரியில்லையென்று. காடும் வானமுமாக இருக்கும் ’வெளி’யில் தொலைந்துபோய்விடுவோமென்று நினைக்கும் அவன் அவை எதுவுமில்லாத ஒரு குகைப்பாதையில் தொலைகிறான்



வெளியுலகின் அத்தனை பிடுங்கல்களும்,சுமைகளும் எரிச்சல்களும் வீட்டிற்கு உள்ளே வந்து கதவை அடைத்ததும் விலகிக்காணாமல் போவதை நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.



இதைப்போன்றே ரகசியமான, பல கிளைகளாகப்பிரியும் சுரங்கங்களுடன், கிளர்ச்சியும் அச்சமும், குற்ற உணர்வும் ஒருங்கே ஏற்படுத்தும் ரகசிய குகைகள் பெரும்பாலானவர்களின் மனதிலும் இருக்கின்றது



அப்படியான ஒரு ரகசியம் இல்லாத வாழ்வே வெற்று வாழ்வென்று எனக்குத்தோன்றும். அவன் சொல்லுவதைப்போலவே ஒரு ரகசிய வாழ்விற்குள் முழுக்க ஈடுபட்டு நம்மைத்தொலைக்க வேண்டியதுகூட இல்லை அப்படிப்போகலாம் அல்லது போகப்போகிறோமென்னும் கற்பனையே கூட பெரும் மகிழ்வையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும். விதிக்கப்பட்டிருக்கும் வாழ்வில் எந்த அங்கீகாரமும் பாரட்டும் இல்லாமல் வறண்டுபோயிருக்கும் மனது இப்படி பல அசாதாரணங்களையும், சாத்தியமற்றவைகளையும் கற்பனை செய்துகொண்டு அதிலேயே வாழவும் துவங்கிவிடும்



நம்மைப்பறிய ஒரு மிகச்சாதாரணமான அல்லது மிகத்தாழ்வான அபிப்பிராயத்திற்கு நேர் எதிரான ஒரு அதிசய அசாதாரண ஆளுமையாக நம்மைகற்பனை செய்துகொள்வதும் அந்த மெல்லிய அச்சமுட்டும் ரகசிய நினைவின் கிளர்ச்சியில் மனதிற்குள் மகிழ்ந்துகொண்டுமிருப்பது , தொடர்ந்து இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளுக்கும் கைவிடப்படுதல்களுக்குமான பிழையீட்டை போலாகிவிடுகின்றது



அவனுக்கும் அந்த மருத்துவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது. இப்படி கீழிருந்துகொண்டு, வெறும் ஒலிகளைக்கொண்டே நடப்பதை யூகித்துச் சொல்வதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாதென்பதால் அந்த உரையாடல் மிகவும் வேறுபட்டதாக இருந்தது



மனைவியால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டவன், அம்மாவால் மனநோயாளியாக பச்சாதாபத்துடன் மட்டுமே பார்க்கப்படுபவன், பலஹீனன் என்னும் அவனைப்பற்றிய பொதுவான் பிம்பத்திற்கு நேர்மாறாக இப்படி ஒரு காரியத்தை செய்வதும் அதில் அவனுக்கு ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளுமான இக்கதை மனதில் பல கலவையான எண்னங்களை வாசிக்கையிலும் வாசித்து முடித்தபின்னரும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது.



இறுதியில் அவன் வரைபடம் மனதிலிருந்து அழிந்துபோய், வழியைத்தொலைத்தபின்னர், எனக்கு அவன் அங்கேயே , அப்பாவும் அவனுமாய் பார்த்த ஹிந்தித்திரைப்படங்களின் பாடல்களைக்கேட்டுக்கொண்டு இருப்பான் அல்லது இருக்கட்டும் மகிழ்வுடன் என்று தோன்றியது. அந்த ரகசிய குகையும் அதன் வழிகளும், அவன் மனதைப்போலவெ ஆழமானது, யாரலும் அறிந்துகொள்ள முடியாதது, கிளைகளாக பிரியும் ரகசியப்பாதைகளாலானது, அங்கிருந்துகொண்டே அவனால் எந்தக்கணமும் வெளிஉலகைக்காண வரமுடியுமென்னும் சாத்தியங்களைக்கொண்டது, வெளியிலிருந்து யாராலும் உள்ளே வர முடியாதது, ஆனால் அங்கிருந்துகொண்டே அவனால் பிறரின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வசதியுடன் இருப்பது, அங்கேயே இருக்கட்டும் அவன்



’’நீ கிறுக்கு, உன் மருமக கிறுக்கு இந்த உலகமே கிறுக்கு’’ என்று அவன் கத்தும்போது என்னவோ நிறைவாக இருந்தது



அன்புடன்

லோகமாதேவி



.

எழுதியவர் : (24-Dec-18, 4:38 am)
பார்வை : 96

மேலே