மாஸ்கோவும் கடலைச் செடியும்

சுவாசம் முட்டும் தனிமைச் சிறை. உயரத்தில் என்னை மட்டும் வினோதமாக வேடிக்கை பார்க்கும் ஒரே ஒரு ஜன்னல். காலையில் சிறிது நேரம் மட்டும் அந்த ஜன்னலில் இருக்கும் சிலந்தி வலையில் வெளிச்சம் பட்டு வெள்ளிக் கம்பி போல மினுமினுக்கும். இடது பக்க மூலையில் இருக்கும் அழுக்கேறிய கழிவறைப் பீங்கான் தரையைப் பார்க்கிலும் ஒரு இன்ச் கர்வமான உயரத்தில் எடுப்பாகத் தெரியும். காரை பெயர்ந்த ஈரமான சுவர்களின் குளிர்ச்சி அறை முழுவதும் நிரந்தரமாக பரவியிருக்கும். அறையின் கம்பிக் கதவின் வலது பக்க சுவற்றிற்குக் கீழ் இருக்கும் எலி வலையின் முன்பு குவியலான குரு மணலில் பாதி அழிந்த எலியின் கால் தடயங்கள் ஒன்றிரண்டு காணக் கிடைக்கும்.
“புனிதன், உன் ஜாமீன் மனுவை வழக்கம் போல தள்ளுபடிசெய்து விட்டார்கள்”. சிறை வார்டன் இயந்திர கதியில் ஒப்பித்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்த முடிவை நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றாலும் என் தைரியத்தை தளர்த்தும் எந்தவிதமான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்ற என் தீர்மானத்தில் பிடிவாதமாக இருந்தேன். இது ஒரு செய்தி. அவ்வளவுதான். நாளையோ அல்லது அதற்கடுத்த நாளோ இந்தச் செய்தி எனக்குகந்தபடி மாறலாம்.
“மாஸ்கோ விடிஞ்சிடுச்சு, வெளியே வாடா” என்று அழைத்தேன். சிறிது நேரத்தில் வழக்கமான தயக்கத்துடன் மாஸ்கோ எட்டிப்பார்த்தான். ஒரு கைதேர்ந்த துப்பறிவாளனைப் போல ஒரு முறை சுற்றும் முற்றும் சூழ்நிலையை நோட்டம் விட்ட பிறகு நேராக என்னை நோக்கி ஓடி வந்து உரிமையுடன் தோளில் ஏறி அமர்ந்து கொண்டான்.
காய்ந்த சப்பாத்தியை மிகச் சிறிய துண்டங்களாக பிய்த்து ஒவ்வொன்றாக மாஸ்கோவிடம் நீட்டினேன். அரை மனதுடன் சப்பாத்தித் துண்டை கொறிக்க ஆரம்பித்தான்.
ஒரு நாள் மாஸ்கோ வலையிலிருந்து எதையோ மிகுந்த போராட்டத்துடன் இழுப்பது போலத் தோன்றியது. நானும் மாஸ்கோவிற்கு உதவும் சாக்கில் மெதுவாக அவனுக்கு உதவினேன். அறுவடைக்குக் காத்திருந்த ஒரு சிறிய கடலைச் செடியை கொத்தோடு கொண்டு வந்திருந்தான். கடலையின் புது மணத்துடன் வேர்களில் அப்பியிருக்கும் மண்ணின் மனம் என் தனிமையை விரட்டி அடித்தது.
கொத்துக் கடலைகளை வாஞ்சையாகக் கைகளால் தடவிக்கொடுத்து என் கன்னத்தில் ஒற்றிக்கொண்டேன். ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தேன். மொத்தம் ஒன்பது கடலைகள் இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக படர்ந்திருக்கும் நரம்புகளின் தொடு உணர்வு, இழந்த ஏதோ ஒன்றை மீட்டுக் கொடுத்தது போல இருந்தது. ஒரு கடலையை எடுத்து பற்களால் செல்லமாக அழுத்த “கிளிக்” என்ற சப்தத்துடன் உள்ளிருக்கும் கருப்பைக் காற்று தொண்டைக் குழியில் குளிர் சாமரம் வீசியது. கடலைத் தோலில் விரவியிருந்த மண்ணின் வாசத்துடன் உப்பின் சுவையும் நாவில் ஒன்றேனக் கலக்க சிறைக் கம்பிகள் சிறிது சிறிதாக மறைந்து நெடுவயலும், கடலை அறுவடை செய்யும் பெண்களின் சிரிப்புச் சப்தமும் கேட்டது. என்னுள்ளில் நடப்பது எதுவும் தெரியாமல் மாஸ்கோ என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் உடனே சுதாரித்துக்கொண்டு மீண்டும் ஒரு கடலையை எடுத்து பற்களால் கடிக்க சிதறி மூலைக்கு ஒன்றாய் ஓடிய முத்துக்களை துரத்திக்கொண்டு ஓடினான் மாஸ்கோ.
முதலில் மாஸ்கோவைப் பார்த்து அருவருப்படைந்த நான் நாளடைவில் மிகவும் நெருக்கமாக அதனுடன் பழக ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் அவனிடம் பகிர்ந்து கொள்ள ஏதாவது ஒரு விஷயத்தை தயாராக வைத்திருப்பேன். நான் முழுவதையும் சொல்லி முடிக்கும் வரை என்னிடமே இருப்பான். என் தோளில், தலையில் சில சமயங்களில் ஒரு குழந்தையைப் போல என் மார்பை பற்றிக்கொண்டு அப்படியே உறங்கியும் விடுவான். அவனுடைய தூக்கம் கலையாமல் இருக்க நானும் அசையாமல் அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டே பல நாள் தூங்கி இருக்கிறேன்.
இந்த தனிமைச் சிறைக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும். சிறை காப்பாளர் மட்டும் அடிக்கடி வந்து என்னைப் பார்த்து தைரியமாக இருக்கச் சொல்லுவார். அனைத்து மனித முகங்களும் எனக்கு ஒரு புகை போல கலைந்து விட்டதாகத் தோன்றியது. அப்பா, சித்தப்பா, தாத்தா அனைவரும் சிறைக் காப்பாளரின் முகச் சாயலிலேயே வந்து போனார்கள். உடம்பு அளவிற்கு மீறியபடிக்கு வெளுத்துக்கொண்டே வந்தது. எப்படியும் இங்கிருந்து வெளியேறி வயல் வேளியில் அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்களின் வாசனையூடே வேர்களின் வாசத்தையும் நுகர என் மனம் ரகசியமாக ஏங்க ஆரம்பித்தது.
“புனிதன் உனக்கு இன்று ஜாமீன் நிச்ச்யம் கிடைத்து விடும். தாத்தா சொல்லச் சொன்னார்” சிறை பாதுகாவலரின் முகத்திலிருந்த தாத்தாவின் உருவச் சாயலை பெயர்த்தெடுத்தேன்
“அண்ணனுக்கு இன்னைக்கு ஜாமீன் கிடைச்சிடுமாம்டா” ஏதோ புரிந்தது போல என்னையே மாஸ்கோ பார்த்தான். தேளில் இருந்து மெதுவாக நகர்ந்து என் கழுத்திற்கு அருகில் ஆதரவாக அமர்ந்து கொண்டான். அவன் உடலில் இருந்து இன்று வித்தியாசமாக பவழ மல்லி வாசம் பரவியது.
மாஸ்கோ என்னையும் சிறைக் காவலரையும் மாறி மாறிப்பார்த்தான். ஏதோ புரிந்தது போல முகத்தை கவிழ்த்து வைத்துக்கொண்டான். “என்னோடவே கிராமத்துக்கு வரையா?” உள்ளங்கையில் அதை ஆதராவாகத் தாங்கி என் முகத்தருகே வைத்துக் கேட்டேன். ஏதோ புரிந்தது போல என்னையே உற்றுப் பார்த்தான். வழக்கமாக என் தேளில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு மெதுவாக நகர்ந்து மீண்டும் வலைக்கே திரும்பிவிட்டான்.
“வெளியே நிலைமை எப்படி சார் இருக்கு”
“நீ இங்கே வந்த பிறகு பெரிய அளவுக்கு போராட்டம் நடக்கலை. ஆனா, தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. கிராமத்திலே நாலு விவசாயி இறந்துட்டாங்க.”
அரை வெளிச்சத்துடனேயே ஆறு மாதங்கள் இருந்த எனக்கு கண்கள் கூசியது. கண்களை சுறுக்கிக்கொண்டு பார்த்தேன். தாத்தா சிறைக்கு எதிரே எனக்காக வண்டியுடன் காத்திருந்தார்.
அரை மணி நேரப் பயணத்தில் இருவருக்குமே எதிலிருந்து ஆரம்பிப்பது என்ற மனக் குழப்பத்தில் அமைதியாகவே இருந்தோம்.
தாத்தாதான் முதலில் மௌனத்தை உடைத்தார். “வயக்காட்டுக்கு நடுவே பெரிய ரோடு போடப் போறாங்களாம். பெரிய பெரிய வண்டியெல்லாம் வந்து போகுது. யார் யாரோவெல்லாம் வந்து போறாங்க.”
என் மனக்கண் முன்பு, செழிப்பான பசுமையின் முகத்தினைக் கீறிக்கொண்டு ரத்தக்கவிச்சையுடன் அருவருப்பான வடு போல தார் சாலை நீண்டு கொண்டே போனது.
“நீ போன பிறகு உனக்கு பதிலா போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தின நம்ம குமாரசாமி பையன் கிருஷ்ணனையும் தனி செல்லுக்குத்தான் நேத்து கூட்டிக்கிட்டு போனாங்களாம்” தாத்தா தன் ஒளியிழந்த பூஞ்சையான கண்களை எனக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டார்.
“நாம முன்னமே எதிர்பார்த்ததுதானே தாத்தா. இதுக்கு போயி ஏன் வருத்தப்படறீங்க. நீங்க பாக்காத போராட்டமா இல்லை தர்ணாவா? கடைசியிலே நாமதான் நிச்சயம் ஜெயிப்போம்”. தாத்தாவை ஆதரவாக அணைத்துக்கொண்டேன்.
வழித்துணையாக எங்களுடனேயே நீண்ட நேரம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது மாஸ்கோவின் பவழ மல்லி வாசம். திரும்பிப் பார்த்தேன். பின் இருக்கையில் இயக்க முழக்கங்கள் எழுத தாத்தா வைத்திருந்த சிகப்பு சாயத்தை வாலிலும் கால்களிலும் தீற்றிக்கொண்ட மாஸ்கோ என் தோளில் வழக்கம் போல வந்தமர்ந்தது.