வாசமான விளம்பரம் சிறு கதை - சொசாந்தி

#வாசமான விளம்பரம்.. #சிறுகதை

சோப்பு விளம்பர படப் பதிவிற்கான ஆயத்தங்களில் பரபரப்பாக இருந்தது அந்த படப்பிடிப்பு தளம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெண்ணிற பாத் டப் சோப்பு நுரையுடன் வழிந்து கொண்டிருந்தது.

"எங்கப்பா அந்த பொண்ணு இன்னும் வரலியா..? நேரம் ஆகுது. எனக்கு நிறைய வேலை இருக்கு. இத முடிச்சிட்டு வேற எடத்துல ஷூட்டிங் போகணும். இப்படி டிலே பண்ணா எப்பிடி..? விளம்பர பட இயக்குனர் வெங்கட் பரபரத்தான்.

"இதுக்குதான் பிசியா இருக்குற நடிகை எல்லாம் கூப்பிடக்கூடாதுன்னு சொல்றது. ஏன்யா நீதானே அவள ரெகமெண்ட் பண்ண. கால் போட்டு சீக்கிரமா வரச்சொல்லு " என்ற அந்த விளம்பர கம்பெனி ப்ரொடியூசர் முகம் கடுப்பில் கறுத்தது..

அவசர அவசரமாக தன்னுடைய மொபைலில் அந்த விசாலினி நம்பரை தேடிப் பிடித்தான். "விசாலினியாம்... விசாலினி... சனி.." வாய் முனுமுனுத்துக் கொண்டிருக்கும்போதே அவள் அலைபேசியில் வந்துவிட்டிருந்தாள்.

"சாரி.. சாரி... வெங்கட்… ஐ ஆம் ஆன் தி வே. வித் இன் பைவ் மினிட்ஸ் ஐ வில் பி தேர்." வெங்கட் பேசுவதற்கு முன்பாகவே பேசி முடித்து அலைபேசியை கட் செய்திருந்தாள் நடிகை விசாலினி.

கூறியது போலவே 5 நிமிடங்களில் ஷூட்டிங் தளத்தில் பிரவேசித்திருந்தாள் பேபி பிங்க் நிறத்தில் அவள் அணிந்திருந்த சல்வார் உடை அவளுக்கு அழகை கூட்டி இருந்தது. சரிந்து விழுந்த துப்பட்டாவை எடுக்க அவள் ஆர்வம் காட்டவில்லை. ஷூட்டிங் முடியும் வரை இனி அதன் அவசியம் இருக்கப்போவதில்லை.

உடை மாற்றிக்கொள்ளுங்கள் என்று மேக் அப் மேன் கொடுத்த டூ பீஸ் ஆடைகளை பெற்றுக்கொண்டு அந்த தளத்தில் வலது புறமாக இருந்த மேக் அப் அறையை நோக்கி விரைந்தாள். சிறிது நேரத்தில் அந்த அறையை விட்டு திரும்பி வரும்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அத்தனை கண்களும் அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

ம்ம். சீக்கிரம். டைம் ஆகுது என்று வெங்கட் விசாலினியை விரட்ட சோப்பு நுரையில் நிறைந்திருக்கும் தொட்டிக்குள் இறங்கினாள் விசாலினி

"ரெடி... கேமிரா ஆன்.. ஸ்டார்ட்... " வெங்கட் கூறிய அடுத்த கணத்தில் அங்கு மூன்று திசைகளில் நிறுவப்பட்ட காமிரா, குளிக்கும் காட்சியை பதிவு செய்ய ஆரம்பித்தது. குளிக்கும் தொட்டிக்கு இருபுறமும் இரண்டு காமிராக்கள் வலதுபுறமும் இடது புறமும் என்றிருக்க எதிர் திசையில் உள்ள காமிரா மட்டும் முன்னும் பின்னுமாக நகர ஆரம்பித்தது.

" என் பொன்னிற மேனிக்கு பொன்னிறம் சேர்க்கிறது மஞ்சள் சந்தனத்தின் கலவை. நறுமணம் கமழ்கிறது.. என் மனம் கவர்ந்த சோப் "சாண்ட்லிக்" சாண்ட்லிக் சோப் மட்டுமே". ஆடியோவில் ஒலித்துக்கொண்டிருக்க. வாயசைத்துக் கொண்டிருந்தாள் விசாலினி. உடல் முழுதும் அந்த சோப்பினை தடவிக்கொண்டே வந்து முகத்திற்கு கொண்டுவந்தவள்,

சீ... கர்மம். என்ன சோப் இது. வெரி பேட் ஸ்மெல். " கூறிக்கொண்டே அவள் அதனை தூக்கி எறிந்ததுதான் தாமதம்..

"கட்.. கட். கட்..". வெங்கட் கத்தவும் காமிராக்களின் இயக்கம் நின்று போனது.

வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த ப்ரொடியூசருக்கு
எரிச்சல் வர தலையிலடித்துக்கொண்டார். இதெல்லாம் விளம்பரத்துக்கு நடிக்க வருதுங்க பாரு... நம்ம பொழப்பில மண்ண போட்டுடும். அடுத்த "ஆடுக்கு" இவள ரெகமெண்ட் பண்ணாத வெங்கட். நம்மள கவுத்துடுவா.. வெங்கட்டை கடித்தார் அந்த புரொடியூசர்.

"என்ன வைசு இப்படி பிரச்சின பண்ற.."

அந்த தொட்டிக்கு அருகாமையில் சென்று கோபத்துடன் கத்த ஆரம்பித்தான் வெங்கட்.

"சூட்டிங் முடிஞ்சி குளிக்கிறதுக்கு நா என்னோட சோப் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன் வெங்கட். லுக் லைக் யுவர் ப்ரொடக்ட். . நா வேணா அத யூஸ் பண்ணிக்கிறேன் வெங்கட். க்ளோஸ் அப் ஷாட்ல மட்டும் உங்க சோப் யூஸ் பண்ணிக்கிறேன் இந்த சோப் என்னவோ மாதிரி இருக்கு. ஏதோ சரியில்ல. "

வந்த கோபத்தை அடக்கிக் கொண்டான். இப்போதைக்கு அவனுக்கு வந்த வேலை முடிய வேண்டும். .

லாங் ஷாட்ல வெச்சு சீன ஒகே பண்ணிக்குறேன்
"ஆனா ஒன்னு சோப் நல்லா இருக்கா மாதிரி ஒரு நல்ல எக்ஸ்பிரெஷன எதிர் பார்க்கிறேன் வைசு.. ஓகே.."

"ஓகே." ஒகே. பலமாய் தலையாட்டினாள் விசாலினி.

விசாலினியின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் காமிராக்கள் இயங்க ...
மிக அற்புதமாக வந்திருந்தது அந்த மட்டரக சோப்பிற்கான அழகான விளம்பர படம்,

பட பிடிப்பு முடிந்த அடுத்த நிமிடத்தில், தான் கொண்டு வந்த அந்த உயர் ரக சோப்பினை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி சென்று கொண்டிருந்தாள் நடிகை விசாலினி.

சோப்பு நீர் சொட்ட சொட்ட அவள் செல்வதை ஜொள்ளுவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த படப்பிடிப்புக்குழு..!

- நிறைவு -

-சொ. சாந்தி-

எழுதியவர் : சொ.சாந்தி (24-Dec-18, 7:18 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 228

மேலே