நிலையாமை தேர்ந்து தலைநேரல் தக்கார்க்கு அணி – அணியறுபது 59
நேரிசை வெண்பா
உயிர்க்கணி தன்னை உயர்பரனுக் கீந்தே
அயிர்ப்பில் அவனை அடைதல் – உயிர்ப்பில்
நிலைநேரு முன்னே நிலையாமை தேர்ந்து
தலைநேரல் தக்கார்க் கணி. 59
- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
தன்னை முழுதும் சிவனுக்குக் கொடுத்துத் தான் சிவமயம் ஆவதே சீவனுக்கு அழகு; சாவு நேருமுன் நிலையாமை நிலையைத் தெளிந்து தலையாய நிலைமையை அடைவதே தக்கவர்க்கு அழகு எனப்படுகிறது. உறுதியான உய்திநிலை உணர வந்தது.
உயிர், ஆன்மா, சீவன் என்பன ஒரு பொருளன. ஆயினும் வேறு வேறு காரணங்களை மருவியுள்ளன. செயல் இயல்களால் பெயர்கள் நேரினும் உயர் பரமே மூல நிலையமாயுளது.
அரிய பெரிய அந்தப் பரஞ்சோதியிலிருந்து: பிரிந்து வந்துள்ள ஒரு சிறு சோதியே சீவன். மாய மருள்கள் நீங்கிய பொழுது இந்த ஆன்ம ஒளி பரமான்மாவோடு வெளியில் கலந்து கொள்கிறது. அவ்வாறு கலந்து மகிழ்ந்து கொள்வதையே சீவன் முத்தி என்றும் விதேக முத்தி என்றும் தத்துவ நூல்கள் சாற்றி வருகின்றன.
பேரானந்தப் பிழம்பிலிருந்து நழுவி விழுந்த உயிர் மீளவும் அதனைத் தழுவிக் கொண்டாலன்றி யாண்டும் துன்பங்களே மூண்டு தொல்லைகளே நீண்டு என்றும் தொடர்ந்து படர்ந்து அடர்ந்து வரும்.
துயரங்களுக்கு மூலகாரணங்களை உயிர் உணர நேர்ந்த போதுதான் அஃது உய்ய நேர்கிறது. மெய்யறிவு தெய்வ ஒளியை அருளுகிறது. சித்த பரிபாகம் உற்ற பருவத்தே தத்துவ ஞானம் உதயமாகிறது. ஆகவே மோக மையல்கள் அடியோடு ஒழிந்து, ஏக பராபர ஒளியில் உயிர் இயல்பாய்க் கலந்து கொள்கிறது. அந்தக் கலப்பில் உலப்பில்லா ஆனந்தம் ஓங்கி எழுகின்றது.
எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே!
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே!
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே!
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே!
இறைவனே! நீஎன் உடலிடம் கொண்டாய்
இனியுன்னை என்இரக் கேனே? - திருவாசகம்
மாணிக்க வாசகர் சிவபெருமானேடு கலந்துள்ள காட்சியை இது காட்டியுள்ளது, "சிவனே! நீ என் உடல் இடம் கொண்டாய்! இனி யான் உன்னிடம் வேண்ட வேண்டியது யாதொன்றும் இல்லை' என்று குறித்திருத்தலால் சீவபோதம் முற்றும் அற்றுச் சிவமயமாயுள்ளமை தெரிய வந்தது.
மரணத்தை உயிர்ப்பு இல் நிலை, மூச்சு இல்லாத நிலைமை என்றது. முடிவு நேருமுன் முடிவான உண்மையை உணர்ந்து உயிர்க்கு உய்தியைச் செய்து கொள்வோரே உயர்ந்த உத்தமராய் ஒளி மிகப் பெறுகின்றார்.
மெய்யுணர்வே தெய்வ ஒளியாய் உய்தியருளுகிறது. அந்த ஒளியே அந்தமில்லாத இன்பம்.
உலகப் புலைகள் யாவும் நிலையில்லாதன. நிலையான உண்மைப் பொருள் ஒன்றே. அது கடவுள், இறைவன், ஈசன், சிவன், பரமன், பிரமம் எனப் பல பேர்களால் பலவாறு பேசப்படுகிறது. பரஞ்சோதியான அந்தப் பேரொளியிலிருந்து சிதறிய சிறிய ஒளித்துளியே உயிர் என உடம்புள் உறைந்துள்ளது. இந்த உறவுரிமையை உணர்ந்து தெளிந்தால் பிறவித் துயரங்கள் பெயர்ந்து போம். பேரானந்த நிலை நேரே விரைந்து பெருகி வரும்.
உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின்று இலங்கும் கருத்தவன் தானே. 1
நீரும் நிலனும் விசும்பங்கி மாருதம்
துாரும் உடம்புறு சோதியு மாயுளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்மிறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே. 2 திருமந்திரம்
என்றும் நிலையாய் எங்கும் பரந்துள்ள பரப்பிரமமே சீவசோதியாய் உடம்புள்ளும் மருவியுளது எனத் திருமூலர் இவ்வாறு உணர்த்தியுள்ளார்.
உடலுள்ளே ஒளி செய்துள்ள உயிரை உரிமையாகப் பெற்றவனே உயர் பேரின்பம் பெற்றவனாகின்றான்.
உண்மை தெளிக; உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.