காற்சிலம்பு அணியலாமே

பெண்கள் எவ்வளவு ஆபரணங்கள் அணிந்தாலும் காற்சிலம்பு அணிந்த
பெண்ணே அழகு தான். ஒவ்வொரு ஆபரணங்களும் ஒவ்வொரு விதமாக அவளின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலுக்கு அழகு சேர்ப்பது என்றால் அது காற்சிலம்பு தான் என்று சொன்னால் அது மிகையாகாது. மெல்லிய காற்சிலம்பு ஓசை பிடிக்காதவரே இல்லை என்று சொல்லலாம். அதே போல் குட்டிக் குழந்தை காலில் காற்சிலம்புடன் தத்தக்கா பித்தக்கா என்ற நடந்து வரும்போது அந்த காற்சிலம்பு சத்தமும் அந்த நடையும் அப்பப்பா… அதனை வர்ணிக்க வார்த்தைகளும் இல்லை, அதற்கு ஈடு எதுவும் இல்லை எனலாம்..!
சிலம்பு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் சிலம்பு
பயன்படுகிறது.
இந்த காற்சிலம்பு வந்த கதை தெரியுமா..?. சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள்தான் முதலில் காற்சிலம்பை பயன்படுத்தியதாக தெரிகிறது.

பழங்காலத்தில் இதனை எகிப்தியர்கள் அணிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசதி படைத்தவர்கள் இந்த காற்சிலம்பை ஜாதிக்கற்களைப் பதித்து அணிந்தார்களாம். “தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று கூறி தனது காலில் கிடந்த தண்டையை எடுத்து வீசி காலத்தால் அழியாமல் காவியம் தந்த கண்ணகி கூறிய தண்டைக்கு மறுபெயர் காற்சிலம்புதான்.கண்ணகியின் காற்சிலம்பில் இருந்தது மாணிக்கப் பரல்கள் பாண்டியன் மாதேவியின் காற்சிலம்பில் இருந்தது முத்து. கண்ணகியின் காற்சிலம்பே ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் முக்கிய கருப்பொருளாகும். பல
காலம் முன்பு மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெண்கள் தங்கள் கால்களில் இதனை அணிந்திருந்தார்களாம். இந்திய நடனமங்கையர்க்ள அங்க அசைவுகளுக்கேற்ப இனிய ஒலி எழுப்பும் கால் சலங்கை என்ற அணிகலனை அணிந்திருந்தார்கள். அமெரிக்காவில் காற்சிலம்பு அணியும் வழக்கம் 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.

காற்சிலம்புக்கு இந்தியாவில் ஒரு பெரிய வரலாற்று பாரம்பரியமும், பின்னணியும் உண்டு. இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைகளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதி மக்கள் அதிக எடையுள்ள காப்பு போல் தடிமனான வெள்ளி தண்டை அணிகின்றனர்.

குழந்தைகளுக்கு காற்சிலம்பு அணிவிப்பது இந்தியாவில் நடைமுறையிலுள்ள பழக்கம். சிலம்பு ஒலி குழந்தையின் அசைவுகளை உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் தாய்க்கு அறிவிக்கும். சிலம்புடன் தளர் நடைபோட்டு நடக்கும் குழந்தைகளைக் காணக் கண் கோடி வேண்டும். எல்லாவற்றையும் மீறி காற்சிலம்பு அணிவதால் குழந்தையின் பாதத்திறகு நல்ல பலத்தையும் கொடுக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
சின்னச் சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைபாடுகள் ஆகிய எல்லாம் கூடிய காற்சிலம்புகள் பழைய பாணியாவிட்டன. தற்போது பெண்கள் தங்கம், வெள்ளி மட்டுமின்றி பிளாஸ்டிக், சாதாரண நூல் என பலதரப்பட்ட பொருட்களைக்கொண்டு நவீன பாணியில் மெலிய சங்கிலிபோல வடிவமைக்கப்படும் சிலம்புகளை அணிகிறார்கள்.இப்பொழுது நவநாகரீக பெண்களும் இடது காலில் மட்டும் கருப்பு மணியோ அல்லது கருப்பு கிரிஸ்டல் மணிகொண்ட சிலம்பை அணிகிறார்கள்

பெண்கள் ஒரே காலில் இரண்டு விதமான சிலம்புகளைக் கூட அணிகிறார்கள். சில சிலம்புகள் முழுவதுமாக முத்துகளை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்களை இணைத்தோ தயாரிக்கப்படுகின்றன. இன்னும் சில செயற்கைக் கற்கள் அதாவது குந்தன் கற்கள், மணிகற்கள், கிரிஸ்டல்களை இணைத்தும், வெள்ளி மணிபோன்ற வடிவத்திலும் செய்யப்படுகின்றன. இந்த காற்சிலம்புகள் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகம் உற்பத்தியாகிறது. இங்கு தயாரிக்கப்படும் காற்சிலம்புகள் ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், குஜராத், பீகார், கேரளா போன்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றமதி செய்யப்படுகின்றன.

எப்படி தங்கம் விலை நாளுக்கு நாள் விலை ஏறுகிறதோ. அதே போல் வெள்ளியின் விலையும் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இருப்பினும் தங்கத்தில்தான் எல்லோராலும் சிலம்பு வாங்கிப் போட்டுக் கொள்ள முடியாது. ஆனால் வெள்ளி அப்படியில்லையே. இன்னமும் எல்லோரும் வாங்கி போட்டுக் கொள்ளும் நிலையில் தானே உள்ளது வெள்ளி. வாங்கினாதான் என்ன..! போட்டாதான் என்ன....!
காற்சிலம்பு
காற்றை உள்வாங்கி
மொழியாக உதிர்க்கும்!!!

எழுதியவர் : உமாபாரதி (29-Dec-18, 5:26 pm)
பார்வை : 349

சிறந்த கட்டுரைகள்

மேலே