கொலையா தற்கொலையா
தென்றல் காற்று வயல்வெளிகளுடன் பேசிக்கொள்ளும் அதிகாலை நேரம், தன் பசி மறந்து மற்றவர்களின் பசிபோக்க வேக வேகமாக தோட்டத்திற்கு சென்று தன் வேலையை தொடங்கும் மக்கள் தான் நமது விவசாயிகள். என் பாட்டனும், உங்கள் பாட்டனும் விவசாயம் தான் செய்தான். அவன் சாப்பிட்ட பழைய சோறை தான் நம் பெற்றோர் சாப்பிட்டு வளர்ந்தார்கள், நாமும் அதை தான் சாப்பிட்டு வளர்ந்தோம். இன்றைய நாகரிகமற்ற உலகம் நம்மை மாற்றிவிட்டதா அல்லது மாற முயற்சி செய்கிறோமா என தெரியவில்லை.
அப்படிப்பட்ட விவசாய குடும்பங்களில் இருந்து வந்துவிட்டு தற்போது விவசாயத்திற்கும், தனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதது போல பலரும் இந்த நாட்டில் நடக்கும் கொலைகளை கண்டுகொள்ளாமல் அவர்களும் சேர்ந்து தற்கொலை என சொல்வது தான் கொடுமையான விஷயம். தற்போது நடைபெறும் விவசாய (தற்)கொலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிடபட்ட ஒரு விஷயம். ஆனால் இதை யாரும் நம்ப தயாராக இல்லை.
தொழிற்சாலைகள் கட்ட ஆசைபட்ட வெளிநாட்டு முதலாளிகள் தேர்வு செய்த இடம் தான் நம்மை வாழ வைக்கும் விவசாய நிலங்கள். நேரடியாக நமது மக்களிடமிருந்து நிலங்களை வாங்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு. எப்போதும் போல தனது சூழ்ச்சி வலையை விரிக்க ஆரம்பித்தார்கள். நமது நாட்டில் நம்மிடம் ஓட்டு பிச்சை வாங்கி கொண்டு நம்மை ஆளும் அரசியல்வாதிகள் துணைக்கொண்டும், நமது உள்ளூர் முதலாளிகள் உதவியோடும் நாம் உயிர் வாழ உதவி செய்யும் விவசாயிகளுக்கு இடஞ்சல் தர ஆரம்பித்தார்கள். அப்போதும் நமது மக்கள் மண்ணை பொன்னாக மாற்றும் தங்கள் உயிரைவிட மேலாக மதிக்கும் நிலங்களை விற்க முன்வரவில்லை.
அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற வெளிநாட்டு முதலாளிகளுக்கு நமது அரசியல்வாதிகள் ஓர் உதவி செய்தார்கள் அந்த உதவிக்கு பெயர் தான் “மானியம்”. பண்டமாற்று முறையில் வாழ்ந்து கொண்டிருந்த நமது மக்களுக்கு பணம் என்னும் ஓர் போதையை நமது மக்களின் மனதில் விதைக்க ஆரம்பித்தார்கள். நமது மக்களுக்கான பணத்தேவைகளை அதிகரிக்கும் விதத்தில் நம் விவசாயிகள் கொண்டு வரும் விளைப்பொருட்களின் விலையினை குறைத்து, அவர்களுக்கு நஷ்டத்தை உருவாக்கி நம்மை வாழ வைக்கும் விவசாயிகள் வாழ முடியாத நிலையை உருவாக்கி அவர்களை வங்கி என்ற கொள்ளையர்களிடம் அழைத்து சென்ற பெருமை நமது அரசியல்வாதிகளையே சாரும். அங்கு தான் மானியம் என்ற ஓர் மாபெரும் கொள்ளை அடிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். தான் வாங்கும் கடனில் எவ்வளவு மானியம் என்பது முழுமையாக எந்த ஒரு விவசாயிக்கும் தெரியாது. கடனை கட்ட முடியாத விவசாயிகளிடம் இருக்கும் விளை நிலங்களை பறித்து ஏலம் என்ற முறையின் மூலமாக நிலங்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு கொடுத்தார்கள்.
தற்போது அந்த நிலங்கள் அனைத்தும் வான் உயர் கட்டிடங்களால் நிரம்பி காணப்படுகிறது. கட்டிடங்களுக்கு சொந்தக்காரன் வெளிநாட்டில் விளையும் உணவினை சாப்பிட்டப்படி உல்லாச வாழ்க்கை வாழ்கிறான், கட்டிடம் கட்ட உதவிய பொறியாளர் கடையில் அரிசி வாங்கி சாப்பிட்டு உயிர் வாழ்கிறார், அதே போன்று கட்டிடம் கட்ட உதவி செய்த வேலையாட்கள் அரசு தரும் இலவச அரிசியினை வாங்கிய படி உயிர் வாழ்கிறார்கள். ஆனால் அந்த நிலத்தை தன் உயிராக நினைத்து வாழ்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டு தன் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்கிறான். உங்கள் மனதிடம் கேட்டுப்பாருங்கள் அந்த விவசாயி தற்கொலை செய்தாறா அல்லது கொலை செய்யப்பட்டாறா என்பது உங்களுக்கே தெரியும். இன்று விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக சொல்லும் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் நமது பாட்டனும், அவனது பாட்டனும் விவசாயம் தான் செய்தார்கள் அவர்கள் கடனாளியாக இல்லை ஆனால் இன்றைய விவசாயிகள் கடனாளியாக இருக்கிறார்கள் அது எப்படி என்று?.
ஒரு திரைப்படத்தில் கூறியபடி “ஒரு விவசாயி சாப்பிட வழியில்லாமல் தற்கொலை செய்யவில்லை, நாலுபேருக்கு சாப்பாடு போட முடியவில்லை என்று நினைத்து தான் தற்கொலை செய்து கொள்கிறான்”.