நிகழ்வாண்டே நித்திரை கொள்

புத்தாண்டை வரவேற்க
எத்தனையோ ஏற்பாடு!
வழியனுப்ப எவருமின்றி
வருத்தத்தில் நிகழ்வாண்டு!

வரும்போதுனை வரவேற்றோம்
வாஞ்சையோடு எதிர்கொண்டு!
பிரியும் நேரம் வந்ததின்று
நிரந்தரமாய் விழிமூடு!

எத்தனையோ இன்ப துன்பம்
எமக்களித்தாய் இவ்வாண்டு!
எல்லாமே முடிகிறது
இனிதாய் இன்றிரவோடு!

கனவுகள் பல கொண்டிருந்தோம்
நீ பிறக்கையிலே நெஞ்சோடு!
இன்று வரை நிறைவேறா
கனவுகளும் அதிலுண்டு!

இரண்டறவே கலந்திருந்தோம்
இதுவரையில் உன்னோடு!
வரலாற்றில் உனக்கெனவே
வலுவாய் ஓர் இடமுண்டு!

பன்னிரெண்டு மாதங்கள்
பயணித்தாய் எம்மோடு!
பயணங்கள் முடியட்டும்
போய்வா நீ நலமோடு!

பன்னிரெண்டு மணிக்குப்பின்பு
பளபளப்பாய் புத்தாண்டு!
பழையதாகிப்போனாலும்
மறப்பதுனை எளிதன்று!

- நிலவை.பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (31-Dec-18, 7:32 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 65

மேலே