புத்தாண்டே பிறந்திடுக புதுயுகத்தைப் படைத்திடுக
புத்தாண்டே பிறந்திடுக ! புதுயுகத்தைப் படைத்திடுக !
பத்திரமாய் பூமியினைப் பாதுகாத்து நின்றிடுக !
எத்திசையும் துயரமழைப் பொழிந்திடாமல் பார்த்திடுக !
சத்தான எண்ணமதைச் சிந்தையிலே விதைத்திடுக.
புத்தாண்டே பிறந்திடுக ! புதுப்பொலிவைத் தந்திடுக !
தொத்திவரும் நோயதனை தூரத்தே விரட்டிடுக !
சொத்தாகும் சுகவாழ்வை துயரின்றித் தந்திடுக !
வித்தகராய் யாவரையும் விரைந்திங்கு மாற்றிடுக !
வன்முறைகள் வளர்ந்திங்கு வாழ்வதனை அழிக்காமல்
அன்புதனை உள்ளமதில் அன்றாடம் வளர்த்திடுக !
உண்ணுகின்ற உணவினுக்கும் ஊறென்றும் நேராமல்
என்றென்றும் உழைக்கின்ற உணர்வுதனைக் கொடுத்திடுக !
மதந்தன்னை முன்னிறுத்தி மதிமயங்கிக் கிடக்காமல்
பதம்பெற்று வாழ்ந்திடவே பண்புதனை ஊட்டிடுக !
அதர்மங்கள் வளர்ந்திங்கே அழிவுதனைத் தந்திடாமல்
இதமான இதயமதை இனியிங்கு வழங்கிடுக !
நீதியினை மதிக்காமல் நிம்மதியை கெடுத்திங்கு
வேதனையை விதைக்கின்ற வீணரையும் மாற்றிடுக !
சாதியெனும் வெறிகொண்டு சங்கடங்கள் தருவாரை
மோதியிங்கு அழித்திடவே தைரியத்தைத் தந்திடுக !
துப்பாக்கிக் கலாச்சாரம் தொலைந்திங்கு போயிடவே
தப்பாமல் மனிதநேயம் தவறாமல் விதைத்திடுக !
ஒப்புரவு உளம்கொண்டு உதவுகின்ற நிலைதன்னை
எப்போதும் பெற்றிங்கு ஏற்றமுற வைத்திடுக !