இதோ ஒரு புத்தாண்டு
இதோ ஒரு புத்தாண்டு
=====================================================ருத்ரா
இன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணியில்
வானம் பிளக்கப்பொகிறது.
புதிய எண்ணால் வர்ணம் பூசப்பட்ட
காலப்பிழம்பு
காவடி ஆடப்போகிறது.
பொங்கும் உற்சாகம்
இளைய தலைமுறையின்
பிடரியை
சிலிர்க்கச்செய்கிறது.
இசைக்கருவிகள்
தோல் கிழிந்து நரம்பு அறுந்து
ஒலிப்பிரளயத்தை பிய்த்துப்போடும்..
சென்ற ஆண்டை கணக்குத்தீர்க்கும்
ஊடகங்கள்
நிகழ்வுகளை
பழைய பேப்பர்களைப்போல்
நிறுத்துப்போடும்.
மனம் பிழிந்த மரணங்கள்
மிச்சம் இருக்கிற கண்ணீரையும்
வழித்துப்போடும்.
சினிமாப்படங்கள்
வசூல் சரித்திரங்களை முன்னே பிதுக்கும்.
மானிடம் மலர்ச்சியை வெளிப்படுத்தும்
வரலாற்று மைல்கற்கள் எல்லாம்
கவனிப்பாரற்று
பறவைகள் எச்சம் இட்டதில்
அபிஷேகம் நடந்திருக்கும்.
அட!
புத்தாண்டு பிறக்கட்டும்!
பலூன்களும் பட்டாசுகளும்
கொண்டாடி விட்டுப்போகட்டும்.
உன் சிந்தனைப்படிவங்களில்
ஏன் இந்த பாழ் நிலை?
மூளையை செதுக்கி
முற்றிய தொழில் நுட்பத்தில்
நம்
முகமே மாறிப்போனது.
நம் பல் நரம்பின்
துளிர் முனைகள் கூட
"டேட்டா"வாய் மாறி
எங்கோ ஆவணப்படுத்தப்படுகிறது.
மனித அந்தரங்கங்கள்
பாப் அப் மசாலாக்களாய்
விளம்பர எச்சில் இலைகளால்
அசிங்கப்படுத்தப்படுகின்றன.
புத்தாண்டு குத்தாட்டத்திற்கு
இந்த எச்சில் இலைகள் கூட
எழுச்சி கொண்டு
ஆடுகின்றன.பாடுகின்றன.
மனிதமை கழன்று போன
மனிதனே
இந்த காலண்டர் தாள்களா
காலப்பேரலைகளின் அடையாளங்கள்?
ஆலய மணியின் நாக்குகள்
எழுப்பும் ஓசையில்
ஒரு புனிதம் பூசியிருக்கிறோம்.
நம்பிக்கை
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
அவலம்
நம்பிக்கையின்மைகள்
எல்லாம் கலந்த
காக்டெயில் கிண்ணத்திலிருந்து
ஒரு விழுங்கல் பெற
அதோ
அந்த தருணங்கள் அழைக்கின்றன.
காளைகள் சீறுகின்றன.
இந்த தடவையாவது
அவற்றின் கொம்புகளைப் பிடித்து
அடக்கி விடு.
ஆம்.
அந்த போர்வைகளையெல்லாம்
உதறி எறி!
"ஹேப்பி நியூ இயர்
டு ஆல் தி நூக்ஸ் அன்ட் கார்னர்ஸ்
ஆஃப் தி வர்ல்ட்"
=====================================================