மாசகன்று நின்றால் மனிதனே ஈசன் எனமேல் எழுவான் - மனிதன் நிலை, தருமதீபிகை 3

நேரிசை வெண்பா

ஈசன் இடமிருந்தே எல்லாரும் வந்துள்ளோம்
மாசகன்று நின்றால் மனிதனே - ஈசன்
எனமேல் எழுவான் இழிவுறினோ நீசன்
எனவே விழுவான் இழிந்து. 3

- மனிதன் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நாம் எல்லோரும் ஈசனிடத்திலிருந்து பிரிந்தே இவ்வாறு வந்திருக்கிறோம்; அந்த உறவுரிமையை உணர்ந்து உள மாசு தீர்ந்து உயர்ந்து போகவேண்டும் என்றும், அம்மாசு அகலாமல் இழிவடைந்தால் நீசன் எனப் பழிக்கப்பட்டு வீழ்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஏன் பிறந்தோம்! எப்பொழுது வந்தோம்? எதற்காக இப்படி வேறு வேறு உருவாய் மாறுபாடு மண்டிச் சீரழிகின்றோம்? என்றால் அப்பேரிழவு பேசும் தரமன்று; கூரிய சீரிய தத்துவக் காட்சியால் ஒருவாறு உய்த்துணரலாமன்றி எத்துணையும் உரைக்க இயலாது; உணர்வு தூய்மையான பொழுது அவ்வாய்மை தானே புலனாம். உண்மை தெரிய நன்மை வருகிறது.

சீவனெனச் சிவனென்ன வேறில்லை;
சீவனார் சிவனாரை யறிகிலர்;
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட் டிருப்பரே. 2017 திருமந்திரம் என்னும் இம் மந்திரம் ஈண்டு நன்கு சிந்திக்கவேண்டும்.

பாவத்தீமைகளை மாசு – மனக்குற்றம் என்றது.

இந்த ஈனத் தீமையால் மனிதன் ஈனன் ஆகின்றான்; ஆகவே புண்ணிய மூர்த்தியிடம் போக முடியாமல் புலைப்பட்டு உழலாயினான்.

ஈசன், தரும உருவன்; சத்தியசீலன்; தயாநிதி. இப்பண்புகளை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் அடைகின்றானோ.அவ்வளவுக்கு அவ்வளவு அவன் ஈசனை அணுகுகின்றான், எவ்வளவு இழந்துள்ளானோ அவ்வளவு தூரம் அவனை அகன்று போய் இழிந்து ஒழிகின்றான். நிலைமை குலையத் தலைமை குலைந்தது.

மனிதன், ஒருபடி மேல் ஏறினால் மகாத்துமா; இன்னும் ஒரு படி மேலே போனால் பரமாத்துமா ஆகின்றான்.

அவன், ஒரு படி கீழ் இறங்கினால் துராத்துமா: மீண்டும் ஒருபடி கீழே சென்றால் அதமாத்துமாவாய் அதோ கதியில் வீழ்ந்து யாண்டும் அவலமாய் அலமந்து உழல்கின்றான்.

தன்னை உயர்த்தவும். தாழ்த்தவும் தானே காரணனாய் மனிதன் பூரண உரிமை பெற்றுள்ளமை இதனால் இனிது புலனாம்.

பாவ எண்ணங்கள் மனிதனை நீசனாக்கி நாசப்படுத்துமாதலால் அவற்றை அறவே ஒழித்து உய்ய வேண்டும் என்பது கருத்து. நீசன் ஆகாது ஈசன் ஆகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jan-19, 9:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே