கடவுளுடன் மதிப்பீடு Appraisal - கவிதை உரையாடல்

அதிகாலை நேரத்தின்
ஆழ்ந்த உறக்கம்
திரும்பி படுக்கையில்
தசாவதாரக் கண்ணண்!

காண்பது கனவென
கண்கள் அயர்ந்தேன்
கனவொன்றும் இல்லை
திரும்பென்றான் கபடதாரி!

கண்ணா
குழலும் இல்லை
தசபுஜபராக்கிரமும் இல்லை
இக்கோலம் எதற்கென்றேன்!

இவ்வுருவமே எனதுருவம்
மற்றது மக்களுருவம்
உனக்கென என்னுருவம்
தரித்து அவதரித்தேன்!

கண்ணா
பார்கடலிலும் சீற்றமா
ஆதிஷேஷனும் ஆளில்லையா
இங்கே எதற்கென்றேன்!

உன் ஆயுளில்
அரைக் கட்டம்
கடந்தாய் இதுவரை
வாழ்ந்த வாழ்க்கையின்
வகையினை வரையறு
என்றான்!

கண்ணா
உனக்கும் அரை ஆயுள்
மதிப்பீடு எங்கனம்?
சமர்ப்பிக்க முயல்கிறேன்!

உன்னதம் மட்டுமே
நிறைவாய் இருந்ததால்
உஷ்ணமான கருவரையில்
பத்துமாதம் பகலும்
இருட்டும் கழித்து
பகல் வேலையில்
உந்தித் தள்ளி
வெளியே வந்தேன்!

நடைப் பயின்றேன்
நாடகம் ஆடினேன்
கூப்பிடும் குரலுக்கு
சட்டென சகலமும்
வரவைத்தேன்
பாடம் பயின்றேன்
பாலகம் கடந்தேன்
இளம்பருவம் எய்தினேன்
காதல் கடந்தேன்
பணியில் அமர்ந்தேன்
கன்னியின் கண்களில்
கடமை அறிந்தேன்!

குடும்பம் கொண்டேன்
குழந்தைகள் பெற்றேன்
பேணிக்காப்பது கடைமையென்றேன்
சுமைதனை சிரித்து
கையாண்டேன்!
திரும்பி பார்த்தால்
அகவை கடந்தது
இனிக்கூற ஒன்றுமில்லை
மதிப்பீடு என்ன கண்ணா?

கண்ணனின் கண்கள்
மெல்லவே திறந்தது
செங்கமலவாயும் திறந்து
கடந்த காலத்தின்
தற்பெருமைகளை உறைத்தாய்
அதிசயம் என்னவென்றால்
கொண்டேன் கடந்தேன்
பெற்றேன் கையாண்டேன்!
அத்துனையும் உன்சாதனையாய்
இருக்கட்டும் இருமாப்பாய்!

மதிப்பீடு வழங்குமுன்
மீதமிருக்கும் ஆயுளை
உனக்கென சின்னதாய்
முன்னோட்டம் வெள்ளோட்டமாய்!
மூச்சை கவனி
மனதை நிறுத்து
இதயத் திரையில்
இனிவரும் காலம் காண்பாய்!

தன் குடும்பத்தை பேணிவளர்க்க
பதவியின் மோகம் ஆட்டிப்படைக்க
அரியணை ஏற
அறிவினை இழந்து
பகைமைப் பலக்கொண்டு
அகங்கார நாயகனாய்
அன்பினை மதியா அரக்கனாய்
தன்னலம் மட்டும் சிந்தித்து
ஓர் நாள் இதயமும் அதை
உணர்த்திட உதரித்தள்ளி
வேகமாய் பொருளும்
புகழும் சேர்த்திட
தலைக்கணம் கால்வரை
மொத்தமும் படர்ந்திட
மகனும் மகளும்
அவரவர் வாழ்க்கையில் கரைந்திட
முந்தைய எச்சரிக்கையை
இதயமும் பலப்படுத்த
உடலும் பலவீனப்பட
மொத்தமும் இழந்து
கடைசி நாட்களை நோக்கி
நகரும் காட்சிக்கண்டு
இதயமும் பதறி
கண்ணா இது நானா?

மீண்டும் கபடதாரியின்
கள்ளச்சிரிப்பு
உனதில்லை இது
அகவை 40ஐ கடந்த
மக்களின் வாழ்க்கை

கண்ணா
எனக்கிது நேரா வண்ணம்
எங்கனம் நடப்பது?

அன்புக் கொள்
பாசம் மிகு
பிறர் நலம் பேணு
இயற்க்கையில் இணை
நிகழ்காலம் வாழ்
இதயக் கழிவை அகற்று
இறுதியாய் உன்னில்
உள்ள என்னை கண்டறி
என்னில் உன்னை கரை
காண்பதெல்லாம் இறை
என உணர்!
ரகுஸ்ரீ

எழுதியவர் : ரகுஸ்ரீ (11-Jan-19, 10:18 am)
சேர்த்தது : ரகுஸ்ரீ
பார்வை : 156

மேலே