நாற்றுகள்
நாற்றுகள்
இவர்கள்
சேற்றில்
கால் வைக்காவிட்டால்
நாம்
சோற்றில்
கை வைக்கமுடியாது.
ஒவ்வொரு
நெல்மணியின் மீது
எழுதப்பட்டிருக்கிறது
உழவன் சிந்திய
வியர்வையின் வரலாறு.
வருணம்
வர்க்கப்
போராட்டங்களோடு
கைக் கோர்த்து
உலகமயமும்
இன்னபிற இயங்களும்
உழவனை
உலுக்கி
உருக்கின.
பொத்தல் வானமும்
பொய்த்துப் போய்
நதிநீர் போராட்டத்தில்
தேசமும்
தேசியமும்
கைவிட்டன.
வணிக வலைகளில்
விலை கிடைக்காமல்
வங்கிக்கடனில்
மூழ்கி
உயிர் நீத்தனர்.
பரம்பரையையும் பாரம்பரியத்தையும்
காத்திட
ஆங்காங்கே
தென்படும்
மெத்த படித்த
இளைஞர்கள் மட்டுமே
சற்று ஆறுதல்.
இன்றளவில்
அறநெறி தாழாமல்
உழல்பவன்
உழவன் மட்டுமே.
அதனால் தான்
விதையோடு
விதைக்கிறான்
நம்பிக்கை நாற்றுகளை
தான் பெற்ற
மழலைக்கு.
இந்
நன்னாளில்
உயிர் வளர்க்கும்
உழவரைத் தொழுது
மகிழ்வோம்.
- சாமி எழிலன்
16 01 2019

