பொல்லாப் பழக்கம் இருந்தேர் வடம்பின் இருப்புத் தொடராய்ப் பூண்டுநிற்கும் - பழக்கம், தருமதீபிகை 32

நேரிசை வெண்பா

பொல்லாப் பழக்கம் புகுந்தநாள் தாமரைநூல்
புல்லியது போன்மெலிதாய்ப் பூண்டுநிற்கும் - மெல்ல
இருநாள் கழியின் இருந்தேர் வடம்பின்
ஒருவா இருப்புத் தொடர். 32

- பழக்கம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொல்லாத பழக்கம் முதல் நாள் மெல்லிய தாமரை நூல் போல் மெலிந்திருக்கும்; மறுநாள் கயிறாய் வரும்; இருநாள் கழியின் தேர் வடமாய்ப் பெருகி யெழும்; அதன்பின் வலிய இரும்புச் சங்கிலி போல் நெடிதாய் நிமிர்ந்து அது நீண்டு நிற்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இரும்பு என்பது இருப்பு என வலிந்து வந்தது. தொடர் - சங்கிலி. ஒருவுதல் - நீங்குதல். நீக்கமின்றி வீக்கி நிற்கும் தொட ரின் தொடர்பு தெரிய இத் தொடர் மொழி வந்தது.

குடி, சூது, கோள் முதலிய தீய தொடர்புகளைப் பொல்லா என்றது.

ஒரு கெட்ட பழக்கம் முதலில் படிந்த பொழுது மிகவும் மெலிதாயிருக்கும்; அச்சமயம் அதனைத் துடைத்து விடுதல் எளிதாம்; துடையாது நின்றால் அது வலிதாய் வளர்ந்து உள்ளத்தையும் உணர்வையும் கவர்ந்து கொள்ளும்: அதனால், உயிர்கள் அதன் வசமாயிழிந்து பழி வழிகளில் உழந்து பாழாய் ஒழித்து போகும்.

நூல், கயிறு, வடம், சங்கிலி என்ற குறிப்பினால் பழக்கத்தை ஒருநாள் நிலைக்க விட்டாலும் மறுநாள் அதனை நீக்க முடியாமல் மனிதன் நிலை தளர்வான் என்பது புலனாம்.

பழக்கம் இரும்புச் சங்கிலிபோல் மனிதனை இறுகப் பிணித்து விடும்; அப்பிணிப்பிலிருந்து தப்ப இயலாது; இந்நுட்பத்தை உய்த்துணர்ந்து கெடுதலான பழக்கம் யாதும் படியாமல் அடிநாளே அடியோடு அதனை ஒழித்து விடவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-19, 12:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே