பாடமைந்த இன்பசியே நீயொருவன் இல்லையெனில் இவ்வுலகம் என்படுமோ - பசி, தருமதீபிகை 22

நேரிசை வெண்பா

ஆடும் பொறிகளைநன்(கு) ஆட்டுபவன் போலமைந்து
கூடும் உயிர்களைமுன் கூட்டுகின்றாய் - பாடமைந்த
இன்பசியே! நீயொருவன் இல்லையெனில் இவ்வுலகம்
என்படுமோ எண்ணுவார் இல். 22

- பசி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பாவைகளை ஆட்டும் கூத்தன் போலப் பசியே! நீ உள்ளுறைந்து உடலுயிர்களை வெளியே ஆட்டி வருகிறாய்; நீ இல்லையாயின் இவ்வுலகம் என்னாகும்? இவ்வுண்மையை ஊன்றி உணர்வார் இல்லையே என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொறி - சூத்திரப்பாவை.

கண்ணுக்குக் தெரியாமல் உள்ளே இரகசியமாய் உறைந்திருந்து, உடலுயிர்களைப் புறத்தே இனிதாக ஊக்கி நடத்தி வருதலால் பசி ‘சூத்திரதாரி’ எனப்பட்டது.

ஆன்ம கோடிகளை அது ஆட்டியருள்கின்ற விந்தை அதிசயமுடையது; உள்ளே அது.ஊட்டி வருவதால் உயிர்கள் உலாவி வருகின்றன. .

உயிரை உடலில் இனிது வாழச்செய்யும் இயல்பு நோக்கி பாடு பெருமை இன்பசியே என்றது; பசியே உயிரினங்களை உலகில் இயக்கி ஒளிசெய்து வருகின்றது; அவ்வரவு நிலை தெரிந்து அதன் உறவுரிமையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-19, 12:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே