தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம் – நாலடியார் 68

நேரிசை வெண்பா

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம். 68

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

நீண்ட காலம் சென்றாலும் கீழ்மக்கள் கோபம் தணியுங்காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும்; ஆனால், காய்ச்சுங் காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப்போல பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்..

கருத்து:

கோபம் விரைவில் தணிந்துவிட வேண்டும்.

விளக்கம்:

கெடுங்காலம் - கோபம் தணிகின்ற காலம்.

இயல்பாகத் தண்மையாயிருக்கும் நீர், காய்ச்சும்போது சூடேறிப் பின்பு தானே தணிந்து முன்போல் தண்ணீராய் விடுகின்றது; அதுபோலச் சான்றோரும் இயல்பாகவே குளிர்ந்த மனமுடையவராயிருப்பர்; பிறர் துன்புறுத்தும் போது மனவருத்தத்தால் சினம் எழுந்தாலும், விரைவில் அது தானே தணிந்துவிடும். அவரும் முன்போற் குளிர்ச்சியுடையவராகவே யிருப்பர்;

ஆற்றலுள்ளவர்க்குச் சினம் எழுவது இயல்பு; அவ்வாற்றலோடு சான்றாண்மையும் உள்ளவரானால் அவர் அதனைப் பரக்கவிடாமல் தணித்துக் கொள்வர்.

காய்ச்சும் வரையில் நீர் வெப்பமாயிருந்து பின் தணிந்து விடுவது போலப் பிறர் துன்புறுத்தும் வரையில், சான்றோருள்ளம் கொதிப்பாயிருந்தாலும் பின் அறவே தணிந்துவிடும்; இது, ‘நீர் கொண்ட வெப்பம்' என்னும் உவமையாற் பெறப்படும்.

‘தானே தணியும்' என்றமையால், துன்பஞ் செய்தவர்களைத் திரும்ப ஒறுப்பதில்லாமல் தானே தணிந்துவிடும் என்பது கொள்ளப்படும்.

"நீரிற் கிழித்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம்', என்னும் வாக்கை ஈண்டு நினைவு கூர்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-19, 12:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே