அறுவடை

ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறும்போது
நெற்கதிர்கள்
நெஞ்சினை
நெறிஞ்சு முள்ளாய்க் குத்தியது

மதியகாலச் சூரியனின் முகம்
உடல் கறுத்து
வியர்வையில் குளித்த
அப்பனின் தினம் அது

மஞ்சள் பூத்த மங்கலம்
பன்னருவாளில்
பதம் பார்த்து
பரபரப்பாக இயங்கிய நேரம்

காசெல்லாம் உரமாக
வயல்காட்டில்
வளைபோல் வீசியெறிந்து
மூச்சுவிட்டப் பயிர்

இன்று
அறுவடை நேரம்

கருவிகள்
கதிர்களைக் கணக்கச்சிதமாக
கொலைசெய்து வருகின்றன

வயல்காட்டில்
மூலையில் பல சாக்குகள்
நிரம்பியிருக்கிறது
மஞ்சள் போர்த்திய உடல்களால்

வார்த்தைகளில் ஓர் பதற்றம்
எல்லாம் முடிந்ததால்
பணம்
கையடைப்பு நேரம்

அறுக்கும் கருவியிடம் கொடுத்தது
வியாபாரியிடம்
நெல் வாங்கியது - என
வியர்வைக் காய்ந்து
அந்தி வானம் சிரிக்கிறது

அறுத்த வாடை
இன்னும் மணக்கிறது
அக்காகிதத்தில்

முடியும் தருவாயில் படிக்கட்டுக்கள்
இளமையானத் தலைகள்
முந்திக் கொண்டும்
சிதறிக் கொண்டும்
இருந்தன முற்பகலில்

"தம்பி கல்லூரி அட்மிசன் பணம் கட்ட
அந்த பிளாக்குக்கு போ"

கேட்காத வினாவிற்கு பதில் வந்ததுபோல்
விரைந்து சென்றனக் கால்கள்...........................

எழுதியவர் : மு.கவியரசன் (20-Jan-19, 7:39 pm)
சேர்த்தது : முகவியரசன்
Tanglish : aruvatai
பார்வை : 48

மேலே