காதல் கொண்டேன்

தினம் தினம் மலர்களும்
பனித்துளிகளை
சுமந்து கொண்டு தான்
இருக்கின்றன
என்றுமே அழுதிடாத
என் கண்களும்
தினம் தினம்
கண்ணீர் துளிகளை
சுமந்து கொண்டு தான்
இருக்கின்றன....
அன்பே!
உன்னோடு மெய் காதலும்
உன் காதலோடு மெய்
உணர்வும் அவ்வுணர்வோடு
மெய் உறவும் இவ்வுறவே
என் உயிர் எனவும்
எண்ணித் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
நான் அழும்போது அன்னையாகிறாய்
விழும்போது தந்தையாகிறாய்
எவை தடுத்தும்
எனை மறந்தும்
உனை நேசிக்க
தெரிந்த எனக்கு
உனை தவிர்த்து
என்னை கூட நேசிக்க
தெரியவில்லை.....
சாதி என்ன சாதி
சமூகம் என்ன சமூகம்
உன் கை பிடித்து
இமயம் தாண்டி
நடக்கத் துணிந்தேன்
ஆனால் இன்னும்
வீதியை கூட
கடக்க முடியவில்லை
சாதி கொடியில்
பூத்த மலர்களும்
உதிர்வதாய் இல்லை...
அ என்றது முதல்
அம்மா என்றது வரை
நீயே யாவும் புகட்டினாய்
என் நெஞ்சில் காதல்
காற்றை புகுத்தினாய்...
உன் விருப்பம் யாவுமே
என்னிலே தொடங்குகிறது
என் விருப்பம் யாவும்
உன்னிலே முடிகிறது
வேர் விட்டது காதல்
விதை போட்டது யாரோ...
விழுதுகள் விழுங்கப் பார்க்கும்
ஆலமரமாய் ஆனோம் இன்று
நீயும் நானும்......
பேதைக்கு வேதம் இல்லை
காதலும் ஓர் பிள்ளை
ஈன்றெடுத்த ஜீவனே
இன்று சாவென்று
சொல்லுவதா.......
மாண்டு வீழ்ந்தாலும்
என் மண்ணுடலில்
தொண்டிப் புதைப்பேன்
உன் நினைவை....
இன்றுவரை
உனக்காக மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் இதயம் எனும்
நுண்ணுயிரி...
உன் வாழ்வில்
நானில்லை
உன் வாழ்வாகவே
நான் இருக்கிறேன்
எனும் போது தான்
நான் இன்னும்
வாழ துடிக்கிறேன்
உனக்காக மட்டும்
உன்னோடு மட்டும்......
விண்ணையே
நூலாடையாக்கி
என்னையும்
உன் பிள்ளையாக்கி
என் தாயாகி தாலாட்டி
வளர்த்த உன்னை நான்
காதலன் என்பேனோ
என் காதலே நீ என்பேனோ...
மனிதனாய் பிறந்த பிறகு
ஏற்றமும் இல்லை இறக்கமும்
இல்லை....இது புரியா புவியில்
தான் காதலும் பிறக்கிறது
வேதமும் இல்லை
யாரும் ஓதவும் இல்லை....
வருடங்கள் பல
வாழ்கிறேன் மெல்ல
உலகறிய உன் பெயர் சொல்ல
ஒரு வழியில்லை
எங்கே நான் செல்ல.....
என் மௌனங்களும்
சலசலக்கிறது அன்பே
உன்னை மட்டும் காதல் செய்ய....
என் சாரல் மழையும்
குடை கேட்கிறது
உன்னை மட்டும்
நனைக்கச் சொல்லி....
இனிஎன் வாழ்க்கை
பயணமும் விரியக் கூடாதோ
உன் கூடே நடக்க.....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (21-Jan-19, 9:30 pm)
Tanglish : kaadhal konden
பார்வை : 66

மேலே