தேசபக்தி - குடியரசு தின வாழ்த்து கவிதை

நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..

கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..

பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....

தியாகிகள் பெருமை நினைந்து
தினம்பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ் உயர்த்துவதே தேசபக்தி !.....

இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே
இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்
இனஒற்றுமை,இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !..

குடியரசு தின வாழ்த்துகள்

-

எழுதியவர் : கரிசல் துள.கவிஅன்பு (26-Jan-19, 7:57 pm)
சேர்த்தது : கரிசல் கவிஅன்பு
பார்வை : 15351

மேலே