இலக்கிய நயங்கள்----------------- தமிழ் இணையக் கல்விக்கழகம் - தமிழ்

3.5 இலக்கிய நயங்கள்

ஓர் இலக்கியத்தைப் படிக்கும் போது சுவையூட்டிச் சிந்தை மகிழச் செய்வன கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை போன்ற இலக்கிய நயங்கள் ஆகும்.

இப்பகுதியில் மருதத் திணைப் பாடல்களில் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை போன்ற இலக்கிய நயங்கள் அமைந்து சுவையூட்டுவதைக் காணலாம்.

3.5.1 கற்பனை

தலைவனின் பரத்தமையால் ஊடல் கொண்டாள் தலைவி. தோழியிடம் வாயில் வேண்டுகிறான் தலைவன். அவனுக்குத் தோழி,

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய ! அற்றால் அன்பின் பாலே !
(குறுந்தொகை - 196 : மிளைக்கந்தன்)

(தேம்பூங்கட்டி = இனிய அழகிய கரும்புக்கட்டி; தண்ணிய = குளிர்ந்த; அற்று = அத்தன்மைத்து; பால் = பகுதி)

“தலைவனே ! முன்பு (திருமணத்துக்கு முந்திய களவுக் காதலின் போது) என் தலைவி வேம்பின் காயை உனக்குத் தந்தாள். அதனை அழகிய இனிக்கும் வெல்லக் கட்டி என்று சொன்னாய். இப்போதோ தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச் சுனையின் நீரை அவள் தருகிறாள். ‘அது வெம்மையாய் உள்ளது - உவர்ப்பாய் உள்ளது’ என்று கூறுகிறாய். நின் அன்பின் தன்மை இப்படிப்பட்டதாகி விட்டதே !”.

காதல் தளராத நிலையில் தலைவி விளையாட்டாக வாயில் இட்ட வேப்பங் காயும் தலைவனுக்கு வெல்லக் கட்டியாக இனித்தது. தலைவியிடம் சலிப்பு ஏற்பட்டுப் பரத்தையிடத்து மோகம் கொண்ட இந்நாளில் தலைவி தரும் குளிர்ந்த நீரும் வெப்பம் மிக்கதாக, உவர்ப்பாக இருக்கிறது. சுனைநீர் குளிர்ச்சியானது. பாரியின் பறம்பு மலைச் சுனைநீர் மிக மிகக் குளிர்ச்சியானது. பனிக்காலமாகிய தை மாதத்தில் அந்நீர் அதிகக் குளிர்ச்சி பெற்றிருக்கும். இதனையே தலைவன் வெப்பம் மிக்கது என்று கூறினால், தலைவியிடம் அவன் கொண்ட காதல் கசக்க ஆரம்பித்து விட்டது என்பதுதான் பொருள். வேம்பின் பழத்தில் கூடச் சிறிது இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் வேம்பின் பசிய காய் மிகவும் கசக்கும். அந்தக் காய் கூட ஒருநாள் அவனுக்கு இனித்தது. காரணம் தலைவியிடம் கொண்ட காதலின் இனிப்பு. இன்று அவன் மனநிலை மாறிடக் காரணம் பரத்தையிடம் அவன் கொண்ட காதல் அல்லவா?

அருமையான கற்பனைக்குச் சான்று குறுந்தொகையின் இப்பாடல்.

கலித்தொகைப் பாடலொன்று (எண்:92) தலைவன் கண்ட அழகுக் கனவைக் கற்பனையுடன் எடுத்துரைக்கிறது. தலைவன் - தலைவியின் உரையாடலாக அமையும் நயத்தையும் இப்பாடலில் காண முடிகிறது.


தலைவன் :
“ஆரவாரம் மிகுந்த மதுரையில் வையைக் கரைச் சோலையில் இருப்பதாகக் கனவு கண்டேன்”.

தலைவி : “அதைச் சொல்”
தலைவன் :
“இமயமலையின் ஒரு பக்கத்தில் மாலையில் அன்னங்கள் தங்கியது போல், வைகைக் கரை மணல்மேட்டில் அழகிய பெண்கள் தம் தோழியருடன் இருந்தனர்”.

தலைவி :
“பறை ஓசை நாம் விரும்பிய சொற்களாகவே ஒலிக்கும். அதுபோல் நீ விரும்பிய இன்பத்தையே கனாவாகக் கண்டாய். மேலே சொல்”.

தலைவன் :
“கொடிபோன்ற அழகுப் பெண்கள் ஒரு பூங்கொடியை வளைத்துக் கொத்துகளைப் பறித்தனர். கொத்துகள் உடைந்தன. கொத்துகளில் இருந்த வண்டுகள் அழகுப் பெண்களை மொய்த்துப் போரிட்டன. இந்தப் போரில் ஒருத்தியின் முத்து மாலையும் மலர்மாலையும் இன்னொருத்தியின் வளையலில் சிக்கின. ஒருத்தியின் நெற்றிமுத்து வடம் இன்னொருத்தியின் காதணியில் சிக்கியது. ஒருத்தியின் ஆடை வேறொருத்தியின் சிலம்பில் சிக்கியது. ஊடல் கொண்டு கணவனைத் தழுவாது இருந்த ஒருத்தி வண்டின் ஆரவாரத்திற்கு அஞ்சினாள்; கணவன் வணங்க அவன் மார்பில் பொருந்தினாள். மொய்க்கும் வண்டுக் கூட்டத்திற்குப் பயந்து ஒருத்தி குளத்தில் பாய்ந்தாள். ஒருத்தி ஓடத்தில் பாய்ந்தாள். விளையாட்டு மங்கையர் அவ்வண்டுகளுக்குத் தோற்றனர்”.

தலைவி : “உன் பெண்டிர் உன்னிடம் ஊடல் கொண்டதையும், அவர் முன் நீ வணங்கியதையும் கனவின் மேல் இட்டுக் கூறுகின்றாய்”.
தலைவன் : “நான் பொய் சொல்லவில்லை; ஊடலால் பிரிந்தோரே, கூடுங்கள் என்பதுபோல் குயில்கள் கூவின. நான் கண்ட கனவு உண்மைதான் என்பதை உணர்வாயாக”.

இங்கே தலைவியுடன் பேசும் தலைவன் பரத்தையிற் பிரிந்து திரும்பி வந்திருப்பவன்; தலைவியிடம் தூது அனுப்ப ஆள் இல்லாதவன்; தன் காதல் ஏக்கத்தையே தூது ஆகக் கொண்டு அவளுடைய ஊடல் நீக்க முயல்கிறான். இந்த முயற்சிதான் ஒரு கற்பனைக் கனவாக விரிந்துள்ளது.

3.5.2 சொல்லாட்சி


பரத்தை காரணமாகப் பிரிந்த தலைவன் வாயில் வேண்டுகிறான். தோழி மறுக்கின்றாள்.

“நீண்ட நேரம் நீராடினால் கண்கள் சிவக்கும். இனிப்பான தேனும் மிகுதியாக உண்டால் புளிப்பை உண்டாக்கும். நினக்கு முன்பு இனிப்பாயிருந்த தலைவி இன்று புளிப்பாகிப் போனாள்” என்று தோழி கூறுவதாக அமைகிறது குறுந்தொகைப் பாடல் ஒன்று.

நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
(குறுந்தொகை - 354 : 1-2, கயத்தூர் கிழான்)

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நினைவூட்டுவதுபோல் தேனும் புளிக்கும் என்ற தொடர் அமைகிறது. இனிய தேன் புளிக்கக் காரணம் என்ன? அளவை மீறி உண்பதால் அது புளிக்கிறது. நெடுநாள் பழகியதால் இனித்த தலைவி இன்று புளிக்கின்றாளோ? தலைவியிடம் உன் அன்பு என்ற இனிமை ஏன் குறைந்தது? என்று கேட்க நினைக்கும் தோழி பரத்தமை ஒழுக்கமே காரணம் என்பதையும் அவனுக்கு உணர்த்த விரும்புகிறாள். “எம் தந்தையின் ஊரில் எங்களை விட்டுவிட்டு நீ செல்” என்று தொடர்ந்து தோழி தலைவனை வலியுறுத்துகிறாள்.

எம்இல் உய்த்துக் கொடுமோ (அடி-3)

என்று அவள் கூறுவது உறுதியாகத் தலைவனின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். தலைவியின் தந்தை வீட்டில் அவளை மட்டும் விட்டுச் சென்றால் ஊர் மக்கள் பழிச் சொற்களை நஞ்சு போல் அள்ளி வீசுவர். களவுக் காலத்தில் நஞ்சைக் கக்கும் பாம்புகள் திரியும் தெருவில் அன்று உன் மிகுதியான துன்பத்தைப் போக்கியவள் தலைவி. இன்று பழியைக் கூறும் மக்களின் சொற்கள் தரும் துன்பத்திலிருந்து அவளை நீ காப்பது உன் கடமை அல்லவா? என்று இடித்து உரைப்பது போல் சொற்களைக் கொட்டுகிறாள் தோழி. சொல்லாட்சியில் இப்பாடல் சிறக்கிறது.

‘பரத்தையரை நான் அறியேன். வீணாக ஊடல் கொள்ளாதே’ என்றான் தலைவன். அவன் அன்பு கொண்டுள்ள பரத்தையைத் தான் கண்டதைச் சொல்லி ஊடுகின்றாள் அகநானூற்றுத் தலைவி ஒருத்தி.

தலைவனின் மகனது முகம் பார்த்து அவனைப் பாசத்தால் தழுவுகிறாள் பரத்தை. ‘வருக என் உயிரே!’ என்கிறாள். இதைக் கண்ணுற்ற தலைவி பரத்தையிடம்,

மாசுஇல் குறுமகள் ! எவன்பேது உற்றனை
நீயும் தாயை இவற்கு
(அகநானூறு-16 : 12-13,சாகலாசனார்)

என்கிறாள். “குற்றமற்ற இளம் பெண்ணே ! நீ எதற்கு மயங்கினாய்? நீயும் இச்சிறுவனுக்குத் தாய் ஆவாய்” என்பது இதன் பொருள்.

இப்பாடலில் பரத்தையிடம், “நீயும் என் மகனின் தாயே!” என்பதில் ‘தாய்’ என்ற சொல், உண்மையான பொருளிலா வருகிறது? பரத்தையை எள்ளுவதாகவும், தலைவனைக் கடிவதாகவும் அமைகிறது.

3.5.3 உவமை

முல்லைத் திணை, குறிஞ்சித் திணைப் பாடல்களில் அமைந்துள்ளது போல் மருதத் திணையிலும் பல பாடல்களில் உவமை சிறப்பாக அமைகின்றது.

பரத்தையுடன் நீராடிய தலைவன் திரும்புகிறான்; தலைவியைப் பாராட்டுகிறான். ஊடல் கொண்ட அவள் தன் இளமை தொலைந்ததை அவனுக்கு நினைவூட்டுகிறாள்.

பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
இளமை சென்று தவத்தொல் லஃதே
(அகநானூறு - 6 : 20-21, பரணர்)

(தவ = மிகுதியாக; தொல்லஃதே = பழையதாயிற்றே)
“பலவாகிய வேற்படையை உடையவன் மத்தி. அவனது கழாஅர் என்ற ஊரைப் போன்று என் இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று” என்கிறாள். ஊர் பழைமை அடைய அடையப் பெருமை பெறும். அதுபோலத் தன் இளமை கழிந்தாலும் பெருமைக்கு உரியவளே என்பதை இந்த உவமை மூலம் புலப்படுத்துகிறாள் தலைவி.

நண்டின் கண்களை அழகான உவமை கொண்டு மருதப் பாடல் வருணிக்கின்றது.

வேப்புநனை அன்ன நெடுங்கண் கள்வன்
(ஐங்குறுநூறு - 30 : 1)

(வேப்பு நனை = வேப்பம் பூவின் அரும்பு; அன்ன = போன்ற; கள்வன் = நண்டு)

வேப்பம் பூவின் அரும்பு போன்ற நீண்ட கண்களையுடைய நண்டு என்பது இதன் பொருள்.

தலைவனையும் தலைவியையும் பழித்து உரைக்கின்றாள் பரத்தை.

கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
(குறுந்தொகை - 8 : 4-5, ஆலங்குடி வங்கனார்)

கண்ணாடியில் தோன்றும் உருவம் எதிரில் நிற்பவர் கையை, காலைத் தூக்கும் போது தானும் தூக்கும். அதைப்போலத் தலைவி சொன்னபடி எல்லாம் ஆடுகிறான் தலைவன் என்பதை இவ்வுவமை மூலம் பரத்தை உணர்த்துகிறாள்.

3.5.4 உள்ளுறை

மருதத்திணைப் பாடல்களில் அமைந்துள்ள உள்ளுறை படித்துச் சுவைத்தற்கு உரியது.

தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய் !
(ஐங்குறுநூறு - 24)

(சாப்பிறக்கும் = சாகப் பிறக்கும்; புள்ளிக் கள்வன் = புள்ளிகளையுடைய நண்டு; பிள்ளை = குஞ்சு; முதலைத்து = முதலையை உடையது; ஆகின்று கொல்= ஆகின்றமைதானோ; பொலந்தொடி= பொன்வளையல்; தெளிர்ப்ப = ஒலிக்க; முயங்கியவர் = புணர்ந்தவர்; துறப்பது = நீங்குதல்)

பரத்தை ஒழுக்கத்திலும் கூட, தலைவன் ஒரு பரத்தையை விட்டு வேறொரு பரத்தையிடம் கூடி இன்புற்றான். அதனை அறிந்தாள் தோழி. வாயிலாக வந்தவர் கேட்கும்படி தலைவியிடம் கூறுவதாக வரும் பாடல் இது.

“தலைவியே ! மகிழ்நனுடைய ஊர் தாய் சாவப் பிறக்கும் புள்ளி பொருந்திய நண்டுகளை உடையது; தன் குட்டியையே உண்ணும் முதலையையும் உடையது. சேரியில் உள்ளவர் கூறுவதனால்தான் இங்கு வந்தானோ? அங்ஙனம் வந்தவன் பொன் வளையல்களை அணிந்த மகளிரின் அழகை அனுபவித்தும், அவர் நலம் கெடும்படி துறப்பது ஏன்? சொல்” - என்கிறாள்.

இப்பாடலில் அமைந்துள்ள உள்ளுறையை இனி அறியலாம்.

தாய் சாகப் பிறக்கும் நண்டை உடைய ஊரினன் என்பது, கலந்த மகளிரின் நலத்தைக் கெடுக்கும் அன்பு இல்லாதவன் என்ற உள்ளுறையைத் தருகிறது. பிள்ளை தின்னும் முதலையை உடைய ஊரினன் என்பது இனித் தழுவ இருக்கும் மகளிர் நலத்தை அனுபவித்துப் பிரியும் அருள் இல்லாதவன் என்ற உள்ளுறையைத் தருகின்றது.

ஆலங்குடி வங்கனாரின் அகநானூற்றுப் பாடலொன்று (106) சுட்டும் உள்ளுறையைக் காண்போம்.

முதுமையால் பறக்க முடியாத சிரல் பறவை, மீனுக்கு அருகில் இலையில் அமர்ந்துள்ளது. மீனை அதனால் கவர முடியவில்லை. பிற சிரல் பறவைகள் மீனைக் கவர்வதைப் பொறுக்க முடியவில்லை - இச்செய்தி பாடலில் காணப்படுகிறது.

முதுமையால் எழுச்சி குன்றித் தன் இல்லத்தில் இருக்கின்றாள் தலைவி. தலைவன் அருகில் இருந்தும் அவனை வளைத்துக் கொள்ள முடியவில்லை. இளம் பருவமுடைய பெண்டிர் அவனைத் தழுவுவதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பரத்தைகுறிப்பாக எள்ளுவதை உள்ளுறையாக இப்பாடல் செய்தி உணர்த்துகிறது.

இவ்வாறு இன்னும் பல பாடல்களில் உள்ளுறை அமைகின்றது.

எழுதியவர் : (29-Jan-19, 7:26 pm)
பார்வை : 653

மேலே