பகல் கனவு

எவருமற்ற சாலையோரக் கண்மாய்க் கரையில்
ஓங்கிய மரங்களின் நிழலில் நித்திரை கொண்ட நேரமிதில்...

அதனினூடே ஊடுருவி உள்ளிறங்கிய கதிரொளியின் தாக்கத்தில்
ஒளியிழந்த கனவுகளோடு நின்றதொரு ஒற்றைக் கவிதை...

எண்ணற்ற பாதச்சுவடுகளை கொள்கலன் உட்புகுத்தி
திருமந்திரம் முழங்கி இறைவணக்கத்தோடு அதன் அத்தியாயத்தை துவங்கியது...

புழுதிக் காற்றில் சுழலும் சொற்களெல்லாம்
தாள்களில் பதியும் வரை தன்நிலை மறந்துத் திரிகின்றது...

கொட்டித் தீர்க்கிறது அதன் கோபங்கள் அனைத்தையும்
முட்டித் தள்ளுகிறது முரண் கொண்டு மூடிக்கிடந்த கொள்கலனை...

வழிந்தோடும் துளிநீராய் வயோதிகம் அடைந்த இலக்கணங்கள்
பழிசுமந்தே பருவமடைந்தது, பாதைமாறிய மழலைகள் ஐந்தும்...

இரட்டைவால் குருவியின் கீச்சு மொழியில் பிரசவித்த
இரட்டை கிழவியின் வார்த்தைகளைத் தொகுத்து
வரி வரியாக அடுக்கத் தொடங்கியது அவ்வழியே தவழும் தென்றல்...

ஓசைகளில் ஒளிரும் அளபெடைகள் அணிவகுத்து
தனக்குத்தானே தளவாடங்களை அமைக்கத் தொடங்கியது...

நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும்
ஒருசேர பயணிக்கும் போதெல்லாம் பற்றிக்கொண்டது மோகத் தீ...

அலாவிப் பார்த்ததில் அலாதி இன்பம், யாதெனில்
பொருளிலக்கனப்படி அவை சொற்களின் புனர்ச்சியல்லவா...!

யாமறிந்த இலக்கணத்தோடு கொஞ்சம் அதிகமாக
இங்கீதமும் தெரியுமென்று சொல்லிய வண்ணம் கண்களை மூடிக்கொண்டது...

அணியின் அசுரப் பிடியில் சிக்கித் தவித்த சிலைடைகளை நெய்து
தான் குடிகொள்வதற்காக குடிலொன்றை அமைக்கத் தயாரானது கவிதை...

வல்லினங்களைக் கொண்டு வாசல் படி,
மரபுத்தொடரை மடக்கி மடக்கி மாடிப்படியெனவும்,
ஐகார குறுக்கத்தில் தூண்கள் செய்து
ஈறுகெட்ட எதிர்மறை சொற்களை சுவர்களாக்கியும்...

அடர்ந்த மரமொற்றில் உயரத்தில் ஏறிக்கொண்டு
அடுக்குத் தொடரில் அமர்ந்து கொண்டு.....???

ஏதோ சொல்ல வருமுன்...!!
எங்கோ தொலைந்தது என் பகல் கனவு...!!!

ஈற்றடியில் எனைக்கொய்த பழமைக் கவிதையே...!
ஆற்றங்கரை நோக்கித் தேடுகின்றேன் உன்னை...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (29-Jan-19, 10:08 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : pagal kanavu
பார்வை : 34

மேலே