பத்தில் மூன்று பதவிகளே நேரடியாய்
அன்று தான் பதவி பெற்று அலுவலகம் வந்தேன்
ஆரும் என்னை அனுசரணையாய் பார்க்கவில்லை
அதற்கான காரணம் தான் என்ன? நான் கருதவில்லை
நேரடியாய் தேர்வெழுதி வேலைக்கு வந்ததினால்
கருணையினால் இங்கு பணியை பெற்றவருக்கும்
வேலை வாய்ப்பகத்தால் பணியில் வந்தவருக்கும்
ஆட்சியரால் பணியில் அமர்த்தியவருக்கும்
நீதிக்கு புறம்பாய் நான் வேலை பெற்றதாக எண்ணம்
ஆதிசிவனின் நெற்றி பார்வை கனலைப்போலே
கண்ணில் கோரப்பல்லை வைத்து கோதுகின்றனர்
அலுவலக பணியை யேதும் சொல்லித்தர மறுகின்றனர்
பத்தில் மூன்று பதவிகளே நேரடியாய் வழங்க
சட்டத்திலே திட்டம் வைத்து எடுக்கின்றனர்
கட்டுப்பட்டு படித்து விட்டு பதவிக்கு வந்தால்
எட்டிக்காயாய் எம்மைப் பார்க்க வேண்டாமையா!
- - நன்னாடன்