காதல் கற்பனைகள் -2

பதினெட்டு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இன்று கண்ணில் பட்டது . 12 ம் வகுப்பு விடுமுறையில் , கவிதை எழுதி பழகி கொண்டிருக்கும் பொழுது எழுதியவை . முதன் முதலில் கவிதை எழுதும் ஒருவனுக்கு காதலை தவிர வேறு என்ன எழுத தோன்றும் ? எழுதியது அனைத்தும் காதல் கவிதைகளே . ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்ததால் அனைத்தும் வெறும் கற்பனையே . நமது வாழ்வில் தான் காதல் என்ற அசம்பாவிதம் நடக்கவே இல்லையே . காதலர் தினம் அருகில் வருவதால் சரியாக இருக்கும் என மறுபடியும் , கந்தலாகி போன காகிதங்களில் இருந்து .

ஆண்டுதோறும் விடுமுறைக்கு
கிராமம் செல்வோம் !
வயல் வரப்புகளில்
ஆடி ஓடி
திருட்டு மாங்காய்
அடித்துத் தின்று
ஆலமரத்தில் உஞ்சல்
கட்டி
அற்று நீரில்
ஊரிக் கிடந்து
விடுமுறையை கழிப்போம்
நண்பர்கள் நாங்கள் !!

பருவம் வந்து
நலம் விசாரித்ததில்
மற்றம் கண்ட
மனநிலையில்
பெண்கள் எங்கள்
கவனம் ஈர்க்க
சுற்றி ஊருக்குள்
திரிகையில் !

நீராடிக் களைத்துப்போய்
இருளில் முழுமதியாய்
கூந்தல் நடுவே
உன் முகம் !

பருவம் விசாரிக்கவில்லை
பந்தி போட்டு
பாய் விரித்து
குடி இருந்தது
உன்னில் !

விரும்பி மீறி
பார்த்துக்கொண்டே
இருக்கையில்
முறைத்தபடி
மறைந்தாய்!!


ஊரின் சிறப்பு
விடுமுறையில் திருவிழா !
கரகம் , சிலம்பம்
ஒயில் , கூத்து
பலவும் நடக்கையில்
உன்னை பார்த்து
விட்டால்
உன் கண்களில் நடக்கும்
கரகம் , சிலம்பம்
ஒயில் , கூத்து

அதிர்ஷ்டம் வருகிறதென
கடைக்குள் அழைக்க
ஒரு போட்டியே
நடக்கும்
அதிர்ஷ்டம் வரவேண்டுமென
பின் தொடரும் நான் !

விடுமுறைகள் பல
கடந்து விட்டன
கிராமம் செல்வது
நிற்கவில்லை
ஆச்சிரியப்பட்டனர்
நண்பர்கள்
ஊர் பாசமென
எனக்குத்தானே தெரியும்
உன் பாசமென

தேடியபடி செல்கையில்
வரப்பில் எதிரில்
நீ !


விலகி வழிவிட்டு
தலைகுனிந்து
உன் கால்கள்
என்னை கடக்கும்
எனப் பார்க்கையில்
அசையாமல் இருந்தது
கால்கள் !

ஓர் பக்கம்
தலை சாய்த்து
கைகளை கட்டிக்கொண்டு
கோவமாய் அவள் !

என்ன செய்வதாய்
உத்தேசம் ?
வேகமாய் வந்தன
வார்த்தைகள் !!

காற்று மண்டலம்
கற்கண்டு மண்டலமாக
நீ எனக்கு மட்டும்தான்
என்று
பொரிந்து விட்டு
மறைந்து போனாள்!!

காரணம் புரியாமல்
தனியாக வெட்கப்பட்டுக்கொண்டு
நான் !!

- பாவி

எழுதியவர் : பாவி (8-Feb-19, 10:13 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 204

மேலே