பழைய கண்ணீர் துளிகள்

(நினைவுகளில் முங்கி எழும் போது கிடைக்கும் பொக்கிஷங்களுள் காதலும் அடங்கிவிடுகிறது.யாருக்கும் தெரியாமல்,ஒருவருக்கும் புரியாமல்.12 ஆண்டுகள் கழித்து  ஒரு மழை  காலத்தில் தன்  பழைய காதலியை  சந்திக்கிறான் ஒருவன் எதர்ச்சையாக அவனது உணர்வுகளை முடிந்தளவு  வார்த்தைகளால் வகுடெடுத்திருக்கிறேன்]





                                                                                     பழைய கண்ணீர் துளிகள்!

                                                                         
அது ஒரு மழைக் காலம் ...

கருத்த மேகம் 

பயமுறுத்தும் இரவு 

மேனி தொடும் குளிர்காற்று 

யாருமில்லா பேருந்து நிறுத்தம் 

அதில் அனாதையாய் நான்.....


கசக்கிய இமைகள் இடப்பக்கம் 

சாய்ந்த போது 

ஓங்கிய புருவங்கள் இன்னும் 

ஓய்ந்தபாடில்லை....


அதே கண்கள்,

பன்னிரண்டு  பாலைவன வருடங்களுக்கு முன்பு 

கண்ணீரோடு கடைசி விடை   சொன்ன 

அதே கண்கள்..

மனசும் முகமும் தான் வெளுத்துப்போயிருந்தன....


நா தளுதளுக்க,உடல் நடுநடுங்க 

உள்ளத்தின் உணர்வுகளை வார்த்தைகளாய் 

தொடுக்கமுடியாது ஒரு கணம் 

ஊமையாகிப் போனது இதயம்...


இரண்டடிகள் நகர்ந்து வந்து 

உன் இமைகள் பார்த்த போது  பெண்ணே 

உன் ஒற்றை கை சைகையின் காரணம் 

கண்டுகொண்டேன் -"நடக்கலாம்"

நடந்தோம்....


.டக்...டக் ...டக் ....டக் ....


இன்றேனும் பேசிவிடமாட்டாயா 

என்ற ஏக்கத்தில் நானும் 

பார்த்துவிடக்கூடாது என்ற அச்சத்தில்  நீயும் 

மண்பார்த்து நடந்த போது 


கழண்டுவிழுந்த என் பழைய 

கண்ணீர்த்துளிகள் காதோரம்  பேசியன 

மறந்து போன கதைகள்...


என்ன பயங்கர சத்தம்,ஓ!குமுறல்கள் .,

கொட்டவும் முடியாமல் 

அடக்கவும் முடியாமல் கதறியழும் 

வானின் நிலை கண்டு கலங்கி நிற்பார் 

ஒருவருமுண்டோ?



எப்போதும் வேகமாக நடப்பவன் நான் 

இப்போது என் கால்களுக்கு என்ன ஆயிற்று..


ஒருமழை  பொழுதினில் உன்னோடு 

நடக்கும் வரமொன்று கிடைக்க 

எத்தனை  நாள் தூங்காமல் கனாக்கண்டேன் 

என்பது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...



அதோ சற்று முன் கடந்து போன 

கல்லூரியின் கரும்பலைகையில்  

உன் பெயரை நான் எழுதி வைத்த 

வடுக்கள் கூட இல்லையே..

சுவற்றிற்கு வெள்ளையடித்துவிட்டார்கள் 

மனசுக்கு யார் வெள்ளையடிப்பது ....


ஒரு நிமிடம் நான்கு கால்களும் 

அப்படியே நின்றன...

மெல்லமாய் நீ ஏன் பெயரை உரைத்தது போல் 

ஒரு பிரமை...

பெண்ணே,நீ உரைக்கும் அழகான குறுங்கவிதை 

எனது பெயர்..இல்லை 

நீ உரைத்ததனால்  அது கவிதையாயிற்று....



கொஞ்சம் பொறு  பெண்ணே,நாம்  கடத்தி செல்லும் 

அந்த சாலையோர பூங்காவில் உனக்காக 

நான் தீட்டிய கவிதைகளின் வாசம் இன்னும்  இருக்கிறதா

என நுகர்ந்துவிட்டுவரட்டுமா?




அதோ தூரத்தில் தெரியும் 

விமான நிலையம் சொல்லும் அயல்நாட்டில் 

உன்னையும் என் கனவுகளையும் 

ஆண்டாண்டுகளாய் நெஞ்சினில் சுமந்த 

நினைவுகளை...



என் உள்ளத்தின் மௌன பூகம்பம் 

உனக்கு கேட்கவில்லையா?

பேசு பெண்ணே பேசு....!


சாலை சுருங்குகிறது,

நினைவுகள் நீளுகிறது,


இக்குறும்பயணம் முடிவதற்குள் 

ஒன்றுமட்டும் சொல்லிட்டு செல் 

 நீயும் என்னை  காதலித்தாயா என்று?


நின் வீடு வந்தது.

பயணம் முடிந்தது,

நான் திரும்பி செல்லைகையிலே 

உன் இதழ்களில் வழியே 

என் பெயர்  கேட்ட போது 

முகமலர்ந்து ஓடிவந்துனை  பார்த்தேன்.,

 உன் ஐந்து வயது தங்கமகன் 

வந்துன்னை அணைத்து கொள்ள 


அவன் தந்த புன்னகையை நான் வாங்கி 


திரும்பி சென்றேன்,

நான்  மறந்து சென்றேன் 

நான் கடந்து சென்றேன்....



கோவை.சரவண பிரகாஷ் 

எழுதியவர் : சரவண பிரகாஷ் (12-Feb-19, 7:37 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 205

மேலே