காற்றுவெளி =============

==
காற்றுலவும் மரம்வெட்டிக் காடழித்து நாமும்
=கட்டிடங்கள் என்கின்ற கல்மரங்கள் செய்தோம்
ஊற்றுவந்து அருவியாகும் ஓடைகளுக் கெல்லாம்
=ஊறுசெய்து நீரின்றி ஊர்தவிக்க விட்டோம்
ஆற்றினடை யாளமுமே அழிவதற்கு மணலும்
=அகழ்ந்தெடுத்துச் சீரழிந்தது அவதியுற வைத்தோம்
ஈற்றினிலே காற்றில்லை என்றிங்கே மூச்சை
=இழுப்பதற்கும் வகையற்ற எழையாகிக் கொண்டோம்.
**
விஞ்ஞான அபிவிருத்தி என்கின்ற பேரில்
=வெளியேற்றும் தொழிற்சாலை விசவாயு வெல்லாம்
எஞ்ஞான்றும் இயற்கையை இரக்கமின்றிக் கொன்று
=இடர்சூழும் பேரழிவை ஏற்படுத்த நாமும்
கொஞ்சாமல் கொஞ்சுகின்றக் கொடுந்தன்மை யாலே
=குவலயத்தின் காற்றோசோன் குகைக்குள்ளே நாளை
தஞ்சமடை வதற்கிங்கே தகாததுகள் செய்தோம்
=தக்கதொரு காற்றுவெளி தனைசெய்ய மறந்தோம்.

**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Feb-19, 2:26 am)
பார்வை : 372

மேலே