நீர்மை – -------ந முத்துசாமி
மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான் ஆனால், அவள் எனக்குச் சாலைக்குளத்திலிருந்துதான் அறிமுகமாயிருக்க வேண்டுமென நிச்சயமாக இருந்தாள். எல்லாவற்றிலும் ஆச்சரியம் கொள்ளும் குழந்தைக்கு குளிக்கிறவள் என்று விநோதமற்றுப் போகாமல் அவள் நடுக்குளத்தில் தனித்துத் தென்பட்டிருப்பாள். நரைத்த பனங்காயைப் nMUTHUபோல அவள் தலைமிதந்து அலைந்து அவளென்று தெரிய இருந்திருக்கும்.
அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேல். அப்போது எனக்குப் பதினைந்து வயது. அவளை அறியாத ஒரு தலைமுறை பிறந்து முழுப் பிராயத்திற்கு வந்துவிட்டது. இப்போது அவளைப் பார்க்காத நாள் நினைவிலில்லாமல் தினம் பார்த்து வந்திருப்பதாகவே தோன்றுகிறது.
தெரு தோன்றிய நாளிலிருந்து வண்டி அறைந்த புழுதியைக் காலால் உழுது விளையாடிக் கொண்டிருந்தபோது அவள் கரையேறிக் கிழவியாக வரும் தோற்றம் முகத்தைக் குளத்தில் மிதக்கவிட்டு வந்தது போலிருக்கிறது. அது நீருக்குள் கற்பித்திருந்த உடம்புக்கு இணங்காத எல்லோருக்குமான நார் மடிப்புடவையின் தோற்றம்.
சில வருஷங்கள் கழித்து என் தம்பியும் என்னுடன் விளையாட்டில் கலந்து கொண்டான். அடுப்பங்கரை தயிர் கடையும் தூணில் முடிந்திருக்கும் மத்து இழுக்கும் கயிற்றை நாங்கள் அம்மாவுக்குத் தெரியாமல் விளையாட அவிழ்த்துக் கொண்டு வந்துவிடுவோம். அது நாள்பட்டு, இழுபட்டு, வெண்ணைக் கைபட்டு, திரித்தது என்பதைவிட, பயிரானது என்று இருக்கும். அதை இவன் கழுத்தில் போட்டு அக்குளுக்கடியில் முதுகுப்புறம் மடக்கிப் பிடித்துக்கொண்டு அவனை வண்டி மாடாக ஓட்டுவது எங்கள் விளையாட்டு. அவன் எட்டுக் குளம்புப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடுவான். முடிவில் மாடாகிக் களைத்துப் போவான். எனக்குக் கூடுதலாகச் சவாரிச்சுகம் கிடைத்திருக்கும்.
அவள் என்னைக் ‘கண்டாமணி’ என்பாள், நாங்கள் கால்சட்டை போடாமல் ஓடுவோம். எனக்கு இயற்கையாகவே கொஞ்சம் பெரிதாகத் தொங்கிற்று. வெகுநாள் கழித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் பருவ இயல்புக்குச் சுருங்கிற்று. இதே சொல்லை, வாக்கியமாக்காமல், ஓடும்போது அவளைச் சந்திப்பது ஒத்துக்கொண்டபோதெல்லாம் சொல்லி வந்தாள். அப்போது அவள் சந்தோஷப்பட்டிருப்பாள். சிரித்துக்கூட இருக்கலாம். ஓடி மேலக் கோடித் திருப்பத்தில், அவள் கவனமின்றி சொல் காதில் விழுகிறது. சிரிப்பு அவளிடம் பொருந்த முடியாமல் வேறு எம்முகத்திலோ போய் ஒட்டிக் கொள்கிறது;
சிறுகச் சிறுக மாறிவந்த அவள் முகத் தோற்றத்தை ஊர் காண முடியாமல் போய் விட்டது. நினைவில் இருப்பது எந்த வயதின் சாயலென்றும் தெரியவில்லை. பிறர் நினைவில் எந்தச் சாயலில் இருக்கிறாள் என்பதை எப்படி ஒத்துப் பார்ப்பது? அவள் பொதுவில் பெயராக மிஞ்ச ஆரம்பித்து விட்டாள்.
நாங்கள் கால் சட்டை போட ஆரம்பித்த பிறகு கண்டாமணி என்று சொல்வதை நிறுத்திவிட்டாள். அதற்குப் பிறகு அவளோடு பேசியதில்லை. சில வருஷங்களுக்குப் பிறகு ஒருமுறை என்னை வேறு யாரோவாக நினைத்துப் பேசினாள்.
எனக்கு வினவு தெரிந்தபோது அவள் பலருக்கும் ஆச்சரியமற்றவளாக மாறியிருந்தாள். என் வயதுக் குழந்தைகளும் எங்களுக்குள் விநோதமாக உணர்ந்து பேசிக்கொண்டதில்லை. அவர்கள் தங்கள் வீடுகளில் ஆச்சரியப் பட்டிருக்கலாம். பெரியவர்களைப் பார்த்து விநோதமில்லையென்றும் மறத்திருக்கலாம். சாதாரணமானவற்றில் அநேக விநோதங்களைக் கண்டு நாங்கள் கூட்டாக ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.
அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் எங்கள் அப்பாவிடம் தினம் நச்சரித்துக் கொண்டிருந்தேன். பிறகு எனக்கு அலுத்துவிட்டது அவருக்கு அவளுடைய இளமையைப் பற்றிய கதை என்னைவிட அதிகம் தெரியவில்லை. அவள் அவருக்கும் சாலைக் குளத்தில்தான் அறிமுகமானாள். அவருக்கு அவள் தலை மிதந்து கருப்புப் பனங்காயாகத் தோன்றியிருக்க வேண்டும்.
எங்கள் கிழப்பாட்டி மட்டும் பேரனிடம் காட்டும் தனி அபிமானத்துடன் பழமை தோன்ற அவள் கதையைச் சொல்லுவாள். அவள் வயதில், குழந்தைகளுக்குத் தேவையில்லாதவை என நினைப்பவைகளை ஒதுக்கி விடுவாள். இதனால் அவள் கதைகள் சில விநோத குணங்களை இழந்திருக்கலாம். ஆனால், குழந்தை ஆர்வத்தில் புதுத் தகவல்களின் விநோதங்களுடன் அவள் கதை இருந்திருக்கிறது. நிலா உள்ள முன்னிரவுகளில் நாங்கள் தெருவில் கூட்டமாக விளையாடிக் கொண்டிருப்போம். பாட்டி ரா ஆகாரத்தை முடித்துக் கொண்டு காற்றாட திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதும் விளையாட்டு ஆர்வம் குன்றிவிடும். கதை கேட்கத் திண்ணைக்கு ஓடிவருவோம். கால்களை நீட்டி முழங்கால்களைத் தடவி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பாள் பாட்டி. பாட்டியுள்ள ஒவ்வொரு பேரன்களும் இவ்விதம் திண்ணைக்கு ஓடிவிட, விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். அவள் தொடையில் தலைவைத்துப் பக்கத்துக்கொருவராகப் படுத்து கதை கேட்க ஆரம்பிப்போம். பாட்டி சொல்லும் கதை பகல் போல் இருட்டை நீக்கித் தெரியப்படுத்த முடியாத நிலா வெளிச்சம் போலவே இருக்கும். கதையைத் தவிர்க்க நினைக்கும் அவள் குதற்கங்களாலும், ஆரம்பிக்கும் ஆயத்தங்களாலும், குழந்தை அறிவுக்கு எட்டாதவைகளாலும் கதையில் ஆர்வம் கூடுதலாகும். பாட்டியின் மேல் அனுதாபமும் அபிமானமும் உண்டாகும்.
‘நான் பொறந்த கதையேச் சொல்லவா? வாழ்ந்த கதையேச் சொல்லவா? வாழ்ந்து அறுத்த கதையேச் சொல்லவா?’ என்று ஆரம்பித்து தன்னையும் சேர்த்து தன் கண்ணால் பார்த்த மனிதர்களின் மூன்று தலைமுறைக் கதைகளைச் சொல்லி விடுவாள் பாட்டி. முந்தின தலைமுறையைப் பற்றிக் கேட்டவைகளும் நடுவில் விளக்கக் குட்டிக் கதைகளாக வரும்.
எங்கள் பாட்டி உள்ளூரிலேயே வாக்கப்பட்டு ஊர்க் கண் முன் வாழ்ந்து கிழவியானவள்.
அவளுக்கும் புஞ்சைதான் பிறந்த வீடு. அவளும் புகுந்த ஊரில் வாந்த அனுபவம் இல்லாமல் பிறந்த வீட்டிலேயே வயதாகிக் கிழவியானவள். ஆனால் பாட்டிக்கும் அவளுக்கும் சமவயது. ஆனால், அவள் வீணானவுடன் பாட்டிக்கு அவளுடன் தொடர்பு விட்டுப் போயிற்று. கணவனின் அந்திமக் கிரியைகளுக்கு அப்பாவுடன் போயிருந்துவிட்டு காரியங்களை முடித்துக்கொண்டு வந்தவள்தான். அவ்வயதில் ஒரு ஆயுட்காலம் அவ்வூரில் வாழ்ந்தவளென்ற அதிர்ச்சியுடன் திரும்பியவள் போலும். பிறகு அவள் வெளியில் வரவேயில்லை. ஜனன மரணங்களைச் செய்தியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தாள். இப்படி முப்பது வருஷங்கள் உள்ளிருந்து விட்டு தன் நாற்பதாவது வயதில் அவளா இவளென வெளியில் வந்தாள். ஊர் அவளுக்குத் தெரிவிக்கப்பட்ட பெயர்களின் நிஜத் தோற்றங்களால் நிறைந்திருந்தது. அவளால் யாரையும் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. பிறர் அவளை நிஜமாகக் கண்டார்கள். அவள் ஒருவளானதால் அறிமுகம் சுலபம் போல் ஆயிற்று. அவள் செய்தி கேட்ட நாளின் கற்பனைத் தோற்றங்கள் தங்க இருந்து விட்டாள். அவற்றுள் ஒற்றுமை காண முடியாமல் வெளி உலகம் வயதடைந்து புஞ்சை அன்னியக் குடியேற்றத்திற்கு ஆளானது போலாயிற்று.
அவள் வெளியில் வந்ததும் தவிர்க்க முடியாமல் நேர்ந்ததுதான். அவளுடைய தந்தை இறந்த தினத்தன்று அவள் வெளியில் வந்தாள். பிரேதம் எடுத்துக்கொண்டு போனபிறகு கூட்டத்திலிருந்து மிரண்டு பயந்து அழுது ஓடிப்போய்ச் சாலைக் குளத்தில் விழுந்தாள். அவளைக் கரையேற்றி காவிரிக் கரைக்குக் கொண்டு போக பெரும்பாடு பட்டார்களாம். தூக்கிக்கொண்டு போவதாகவே காண இருந்ததாம். அவளை அணைத்து அழைத்துப் போனவர்களில் எங்கள் பாட்டி ஒருத்தி. துக்கத்தினால் அன்றி தொடு உணர்ச்சிக்கே அஞ்சியவளாகப் பாட்டியை அடையாளம் காணாதவளாக மிரண்டு பார்த்திருக்கிறாள் அவள். அவள் கையில் புல் வாங்கிக்கொண்டு தயாதிகளுள் ஒருவன் அவள் தகப்பனுக்கு நெருப்பு போட்டான். இத்துடன் அவளுக்கு நெருக்கமாய் இருந்த ஒரு பிரஜையையும் புஞ்சை இழந்தது.
“நம்மாத்துக்குக் கெழக்கே அவபோய்ப் பாத்திருக்கியோ?” என்று பாட்டி ஒரு கதை நாளில் கேட்டாள். உதடுகளை மடித்து ஈரப்படுத்திக் கொண்டாள் பாட்டி. இப்படி அவளுக்குப் பழக்கமாகியிருந்தது.
கால் கடுக்க அவளைத் தெருவில் பலமுறை நடத்திப் பார்க்கவேண்டியிருந்தது எனக்கு. பாட்டியின் மந்திரத்தில் அவள் கட்டுண்டவள் போலத் தோன்றினாள்.
“இல்லை”
பாட்டியின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த உதடுகளில்தான் கற்பனைகள் எல்லாம் இருப்பதாகத் தோன்றிற்று.
எங்கள் வீட்டிற்குக் கீழ்க் கையில் தெருவை இரண்டாகத் தடுத்து குறுக்கே மண் சுவர் ஒன்று தடையாக எழும்பியிருந்தது. அது முப்பத்தைந்து நாற்பது வருஷங்களாக மழையில் கரைந்துக் குட்டிச் சுவராக நின்றது. கீழே நாய்க்கடுகு முளைத்து கொடிப்பூண்டுகள் அடர்ந்திருந்தன. குழந்தைகள் கழுதை மேல் எறிந்த கற்கள் சிதறிக் கிடந்தன. கிழக்கே விளையாடிவிட்டு நேரங்கழித்து வீடு திரும்பும்போது குட்டிச்சுவரில் மோதிக் கொண்டுவிடுவேனென்றுத் தயங்கித் தயங்கி கடந்து வர வேண்டியிருக்கும். இருளில் வழியைத் தடவி வரும்போது உயர்ந்து வளர்ந்த செடிகள் குத்திவிடுமென்ற பயத்தில் இமைகள் நடுங்கும். நான் பட்ட காயங்களில் பல அங்கு தடுக்கி விழுந்து ஏற்பட்டவை.
தினமும் ஒருமுறையாவது அவளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எங்கள் வீட்டிலேயே இருந்தது. பால், தயிர் வாங்குவதற்கு அவள் வருவாள். ஒரு தேவையில் இது அவளுக்குப் பழக்கமாகியிருந்தது. தினமும் அம்மா தயிர் கடைந்து கொண்டிருக்கும் போதே வருவாள். நான் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து மோரில் மத்து துள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இடை, இடையில் அம்மாவுக்கு அடுப்பில் வேலை இருக்கும். காலையில் கறந்த பால் பொறை ஊற்ற வரட்டி வைத்து கணப்பு போல் எரியும் அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும். தூசி தட்டிய வரட்டியாலேயே பாலை மூடியிருப்பாள். அதிகம் எரியும்போது பாலில் ஆடை கெடாமலிருக்க அடுப்பைத் தணிக்கவும், அணையும் போது வரட்டியைத் திணித்துத் தூண்டவும் மத்தைக் கட்சட்டியில் சாத்தி வைத்துவிட்டு எழுந்து போவாள் அம்மா.
கயிறு ஓடித் தேய்ந்த மத்தின் பள்ளங்களில் கயிற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும் எனக்கு. அம்மாவைப் போல், மத்து மோரின் மேலே மிதந்து சிலுப்பாமலும் அமிழ்ந்து கச்சட்டியின் அடியில் இடிக்காமலும் கயிற்றின் மேல் கயிறு ஏறிக்கொள்ளாமலும் கடையும் வித்தையைச் செய்து பார்க்க வேண்டும். என்னை அறைந்து விலக்க அம்மா திரும்பி வருவள். அந்தத் தூணடியிலேயே நான் சண்டியாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். உடம்பை வளைத்து அம்மாவின் அடியை வாங்கிக் கொள்வேன்.
அம்மாவுக்கோ தயிர் கடைந்துவிட்டுக் குளிக்கப் போகவேண்டும். சமையலுக்கு ஆரம்பிக்க வேண்டும். நேரமானால் ‘ஒருவேளைப் பிண்டத்துக்கு தவங்கிடக்க வேண்டியிருக்கு இந்த வீட்டிலே’ என்பாள் பாட்டி. அவசர அவசரமாகத் தயிர் கடைய வேண்டியிருக்கும். அது அவசரத்திற்குக் கட்டுப் படாது. விட்டு விட்டுக் கடைந்தால் வெண்ணெய் சீக்கிரம் விடுபடும் என்று அம்மா இதர வேலைகளுக்கு ஓடுவாள். சுற்றுவட்டக்காரியங்கள் ஆகும் போது தயிர் கடைவது கவனத்தில் இருந்து பரக்கடிக்கும்.
”அம்மோவ்” என்று மாட்டுக்காரப் பையன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு போக வந்து கொல்லைப் படலுக்கு அப்பால் நின்று குரல் கொடுப்பான். படலைத் திறந்து வைத்துத் திரும்பி மாடுகளை அவிழ்த்து விட வேண்டும் அவனுக்கு. அவனைக் காக்க வைக்க முடியாது. மாடுகள் ஒவ்வொன்றாக வயிற்றை எக்கிக் குனிந்து ’அம்மா, அம்மா’ என்று அழைக்க ஆரம்பித்துவிடும். கொட்டாய்த் தரை அதிரும்படி அவை கூப்பிடும். அந்நேரம் ‘யாராத்து மாடு’ இப்படிக் கூப்பிடறது’ என்று தெருவில், குரல் கேட்ட ஒவ்வொருவரும் மனதிலாவது நினைத்துக் கொள்வார்கள்.
கொட்டாயிலிருந்து அம்மா திரும்பும்போது என் தம்பி அடுப்படியில் இருப்பான். காய்ந்த அவரைச் சுள்ளிகளைக் கையில் அடுக்கிக் கொண்டு ஒவ்வொன்றாய்த் தணலில் திணித்து அவை பின்னால் புகை விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். திரும்பிய வேகத்தில் அவன் முதுகில் ஒன்று வைப்பாள். கைச்சுள்ளிகளைப் பிடுங்கி அடுப்பங்கரைத் தொட்டி முற்றத்தில் எறிந்து விடுவாள். பாலைத் திறந்து பார்த்துவிட்டு மூடுவாள். அவன் அழமாட்டான். சுள்ளிகளைப் பொறுக்க ஓடுவான். அடுப்பங்கரையில் மூன்றில் ஒரு பங்கு தொட்டி முற்றம் எங்கள் வீட்டில்.
இதற்கும் ‘அம்பே’ என்று மாடுகளுடன் ஓடி விடாமல் பிடித்துக் கட்டிய பசுங்கன்றுகள் கொட்டாயிலிருந்து குரல் கொடுக்கும். கொட்டாய் பெருக்குபவள் வர நேரமாயிற்று என்ற எச்சரிக்கை இது. தாய்கள் மேயப் போன தனிமையை வைக்கோல் போரில் அசை போட்டுத் தணிக்க அவற்றுக்குப் பழக்கப் படுத்தப்பட்டிருந்தது. கொட்டாய் பெருக்குபவளைத் திட்டிக்கொண்டு அவற்றை அவிழ்த்து வைக்கோல் போர்க்கொல்லையில் விரட்டிவிட்டு உட்கொல்லை படலைச் சாத்திக் கொண்டு வருவாள் அம்மா. திரும்புகாலில் தம்பி கிணற்றுத் தலையீட்டில் குனிந்து தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காண வேண்டியிருக்கும். அவன் தண்ணீரில் பூச்சிகள் கோலமிட்டு ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஆர்வத்தில் அவன் பூச்சிகளோடு பேச ஆரம்பித்து விடுவான். எந்த நிமிஷமும் அவன் குப்புறக் கவிழ்ந்து விழுந்து விடலாம் என இருக்கும். “சனியனே, என்ன அவப்பேரை வாங்கி வைக்கக் காத்திண்டிருக்கே” என்று அவனை இழுத்துக்கொண்டு வருவாள். அவன் நடக்காமல் அம்மாவின் இழுப்புக்குக் காத்து. கால்களைப் பதித்துக் கொள்வான். குளிப்பாட்ட தண்ணீரைத் துறையில் இழுபடும் கன்றுக்குட்டியைப் போல நிற்பான். அவன் இதை ரசித்து அனுபவிப்பான்.
இன்னும் தயிர் கடைந்த பாடில்லையே என்று அம்மா தினம் அலுத்துக் கொள்வாள். “சனியன்களே பாட்டிண்டே போய்த் திண்ணையிலே ஒக்காந்திண்டிருங்களேன், சனியன்களே. ஒரு எடத்திலே இருப்புக் கொள்ளாத சந்தம்” என்று வைவாள் அம்மா. இது பாட்டியின் காதுக்கு எட்டினால் “ஏண்டி கொழந்தைகளே கரிக்கறே” என்பாள்.
நான் இழுத்துச் சிலுப்பிய தயிர், கச்சட்டிக்குப் பக்கங்களில் சிந்தியிருக்கும். இப்போது அம்மாவைக் கண்டதும் ஓடத்தோன்றும். அம்மா இப்போது அடித்தால் அழுவேன். சிந்திய தயிரைத் துடைத்துவிட்டுக் கை கழுவப் போகும்போது தொட்டியில் தண்ணீர் இருக்காது. குளிக்கப் போகுமுன் கொல்லைக் கிணற்றிலிருந்து அடுப்பங்கரைத் தொட்டிக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொட்ட வேண்டும். எச்சில் கை கழுவும் இரண்டாம் கட்டுத் தொட்டிக்கும் நிரப்ப வேண்டும். முன்பே அவற்றைக் கழுவிக் கொட்டிவிட்டதை அம்மா மறந்து போயிருப்பாள். அநேகமாக தினம் எங்கள் இருப்பு இட்ம் மாறியிருப்பதைத் தவிர அவள் காரியங்கள் இவ்விதமாகவே சற்று முன்னும் பின்னுமாய் இருந்து கொண்டிருக்கும். இந்நேரங்களில் தினமும் ஒருமுறையேனும் அலுப்பின் உச்சத்தில் “புஞ்சையான் குடும்பத்துக்கு ஒழைக்கறாத்துக்கின்னே பொறப்பெடுத்தாச்சு” என்று நொந்து கொள்வாள் அம்மா.
அம்மா தயிர் கடைந்து கொண்டிருக்கும் போதோ, கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கும்போதோ தாழ்வாரத்திலிருந்து ‘பட்டு’ என்று குரல் வரும். இது அம்மாவுக்கு நேரம் காட்டும் குரல். அது அவளுடைய குரல். அம்மாவுக்கு எட்டியிருக்காது என்ற அனுமானத்தில் ‘பட்டு’ என்று இன்னொரு முறை கேட்கலாம். அப்படியானால் இது எங்கள் பாட்டியின் குரலாக இருக்கும். இது அவசியத்தைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட முறையும் கேட்கும். ஒரு கடமையாகப் பாட்டி இதைச் செய்வாள். நாங்கள் வெளியில் இருந்தால் “அம்மாவ்…. அம்மாவ்” என்போம்.
கிணற்றங்கரையிலிருந்து கொட்டாய் வாசற்படையைத் தாண்டி வரும்போது அவள் தாழ்வாரத்துச் சின்னத்திண்ணை ஓரமாய் நின்ரு கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தயிர் கடைந்து கொண்டிருந்தால் அடுப்பங்கரையை ஒட்டிய தாழ்வாரத்து நெரைச்சல் மறைப்பில் பிய்ந்த கீற்று ஓட்டை வழியாக அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளுள்ள எவ் வீடுகளும் இதே அமைப்பில் நெரைச்சலில் தாழ்வாரத்தைக் காண துவாரம் செய்யப்பட்டிருக்கும். அவள் உருவைக் கிரகிக்க இரண்டு கோணங்கள் போதாதென ஓர் அரூபச் சாயலில் அவள் உயிர் கொண்டிருப்பதாகத் தோன்றும். அவள் குரலுக்கு எந்த இடத்திலிருந்தும் அம்மா “இதோ வந்துட்டேன்” என்பாள். குளத்தில் இருப்பவளுக்குக் கேட்கச் சொல்வதாய் இரைந்தே சொல்வாள். பால் கணக்குச் சொல்வதைத் தவிர அழைப்பிற்கு இருப்பைக் காட்டிக் கொள்வதல்லாமல் அம்மாவுக்கு அவளுடன் வேறு பேச்சில்லை.
இது காலைக் காரியங்கள் ஆகி எல்லோரும் குளிக்கக் கிளம்புகிற நேரம். ஒவ்வொருவரும் தயிர் கடைந்து விட்டுப் போக வேண்டும். வற்றாத நாளில் காவிரிக்கும், மற்ற நாளில் குளத்திற்கும் அக்ரகாரப் பெண்கள் குளிக்கப் போக வேண்டும். குளத்தில் கோடையில் மீன் பிடித்த பிறகு கொல்லைக் கிணற்றங் கரையில் தண்ணீர் இழுத்துக் கொட்டிக் கொண்டு குளிப்பார்கள். நேரம் தப்பிப் போய் பெயர் வாங்கிக் கொள்ளாமல் எல்லோருக்கும் நேரம் ஒத்துக் கொண்டுவிடும். இதில் ஒத்துக் கொள்ளாமல் தூரத்திற்கு ஒதுங்காதவர்களென ஓரிருவரும் இருந்தார்கள்.
தினம் இந்த நேரம்தான் அம்மாவின் பரபரப்பில் பால்வாங்க வர அவளுக்கு ஒத்துக் கொண்டது. நேர உணர்வு துல்லியமாக மிருகத்துடையதைப் போல அவளுக்கு இருந்திருக்கிறது.
அவள் சாலைக் குளத்திலிருந்து கரையேறிய வேகத்தில் வந்திருப்பாள். ரேழிவாயிற் படியைத் தாண்டி தாழ்வாரத்தின் முனையில் சின்னத் திண்ணையின் ஓரமாய் நிலைப்படியில் சாய்ந்துகொண்டு காத்து நிற்பாள். காத்திருத்தல் அவளுக்கு அலுப்புத் தருவதாகத் தோன்றாது. ‘பட்டு’ என்ற ஒரு அழைப்பே காத்திருத்தலுக்கு அவளுக்குப் போதுமானது போலிருக்கும். இதில் நின்ற இடத்தை மறந்தவளாகத் தோன்றுவாள். உடல் பாரத்தைக் கால்களில் ஓரிருமுறை மாற்றிக் கொள்வாள்.
அவள் நிற்கும் இடம் தண்ணீரும் தெருமணலும் சேர்ந்து குழம்பிப் போயிருக்கும். எண்ணெய்ப் பிசுக்கும் நீர்க்காவியும் ஏறிய பழைய நார்மடிப்புடவையோடு தவிர்க்க முடியாமல் தெருமண்ணையும் பாதங்களில் அப்பிக் கொண்டு வந்திருப்பாள். நின்ற சந்தர்ப்பத்தில் புடவையின் நீர் வடிந்து கால் மண்ணைக் கழுவி விடும். மண் சிமெண்டுத் தரையில் தங்கி நீர் பிரிந்து முற்றத்திற்கு ஓடும்.
அம்மா தயிரையும் பாலையும் அவளுடைய பாத்திரங்களில் மாற்றும் போது ‘இன்னியோட ஒம்பதே காலணா ஆச்சு’ என்பாள். நின்ற நேரத்தில் வேறு இடத்தில் வாழ்ந்தவளாகத் தோன்றியவள் நிலைக்குத் திரும்பிய இடறல் இல்லாமல் இயல்பாகப் பாத்திரங்களில் ஏந்திக் கொள்வாள். இதில் அவள் நின்ற இடத்தை மறந்திருந்தாள் என எப்படிச் சொல்வது? கால அளவும் அவளுக்கு வேறுபட்டிருக்கும் போலிருக்கிறது.
பதினைந்தே முக்காலணாவுக்கு மேல் ஒரு ரூபாய் என்று அம்மா சொல்லக் கேட்டதில்லை. அவள் கையிலிருந்த சில்லறை அம்மாவின் கைக்கு மாறியதையும் பார்த்ததில்லை. கணக்குச் சொல்லி பாத்திரங்களில் மாற்றும்போது அவள் சம்மதத்தின் அறிகுறியும் தென்படாது. தகராறு நேராததிலிருந்து வியாபாரம் நாணயமாய் நடந்து வந்திருக்கிறதென்று ஊகிக்க்க இருந்தது. அவளுக்குப் பால் கொடுப்பதால் புண்யமுண்டு என்றும் அம்மா சொல்லுவாள்.
இடையில் தயிர் வாங்க வருவதை இரண்டொரு மாதங்கள் நிறுத்தி விடுவாள். அப்போது யாரிடம் வாங்கினாள் என்பதைத் தெரிந்து கொள்ளும் அக்கறை இருந்ததில்லை. ஏன் அப்படி இடம் மாற்றினாள் என்பதும் தெரியவில்லை. மறதியில் ஒரே வீடு என்று வாங்கி வந்திருப்பாளோ? என்னவோ? மேற்கேதான் எங்காவது வாங்கியிருப்பாள். கிழக்கு மேற்கான தெருவில் சாரியைப் பொறுத்து தெற்குப் பார்த்தோ வடக்குப் பார்த்தோ ஒரு தாழ்வாரத்துச் சின்னத் திண்ணையருகில் நின்று ஒரு பையன் நெரைச்சல் இடுக்கு வழியாகப் பார்க்க வாங்கி வந்திருப்பாள். மேலண்டைச் சுவர் வீட்டின் தாய்ச் சுவராக இரண்டு சாரி அமைப்பில் எதிரெதிராக வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும்போது கொல்லைத் தலைமாடுகளிலிருந்து பார்க்க நேர்ந்தால் நடுவில் தெரு மறைந்து ஒரே வீட்டின் பல நிலைப்படிகளாகத் தோன்றும். ஒரு பயணியைக் கொண்டு ஞாபகம் வரலாம். தெரு தாழ்ந்திருப்பதில் தாழ்வாரத்தில் நடப்பவரென்று கொள்ளமுடியாது. ஒரு சாரியின் கொல்லைச் சந்திலிருந்து எதிர்ச்சாரியின் கொல்லைச் சந்துக்குப் போக எல்லோருக்கும் குறுக்குப் பாதை வீடு. அவள் ஒரே இடத்தில் நின்று பழக்கமானதில் பார்க்கும் திசையைக் கொண்டு எச்சாரி என தீர்மானிக்க இருக்கலாம். அநேகக் குறுக்குப் பாதைகள் ஒன்றில் கடந்து போகும் ஒருவரென்று மறதியில் தோன்றினாலும் சாரிப்பிரிவினை சாத்யமற்றுப் போகும். இப்பொதுத் தன்மைகளில் வேறுபட்ட வீடுகள் ஒருவரை விநோதம் ஏதுமற்றவராகக் காட்டலாம்.
அங்கும் அவள் ‘பட்டு’ எனக் கூப்பிட்டிருக்கக்கூடும். இப்பெயர் கொண்ட இன்னும் சிலர் இருந்தார்கள். பாட்டி சொன்னதைப் போல அவள் பிழியாத ஈரப் புடவையில் ‘அவ ஆம்படையான் இன்னிக்கித்தான் செத்தான்’ என்று அவர்களுக்கும் தோன்றியிருக்கலாம்.
இப்படி ஒருவரின் நினைப்பாக இல்லாமல் அவளைத் தண்ணீர்ப் பிசாசு என்று எல்லோரும் சொல்வார்கள். இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிசாசாகப் பிறந்து வந்தவளாகக் கண்டார்கள் போலிருக்கிறது. ஆனால் அவளைக் கண்டு யாரும் பயந்து கொண்டதில்லை. அவள் தன் இருப்பைத் தூக்கலாய் உணர்த்தியும் பழக்கத்தில் மறந்து விட்டார்கள்.
அவளுடைய சாலைக் குளம் வீட்டு விலக்கான பெண்கள் குளிக்க வசதியாக இருந்தது. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஆண் பார்வை படுமுன் திரும்பிவிடலாம். கணவன் கண்ணில் படாமல் உப்பும் அரிசியும் போட்டுக்கொண்டு விடலாம். ஒரு பெண் துணையுடன் குளிக்கப் போகும்போதும் அவள் குளத்தில் இருப்பாள். கண்களில் படாமல், இருட்டில் அலைந்து எழுப்பும் சலசலப்பு நிசப்தத்தில் பயமூட்டுவதாக இருக்கும். ஒருவருக்கொருவர் பேசும் ஒலிக்கும் பயந்து மௌனமாய் இருக்கும் நேரம் இது. தங்கள் நினைப்பே பயமுறுத்துவதாக இருக்கும். கண்களில் தென்படாமல் மரக்கிளையை ஆட்டிச் சலசலக்க வைக்கும் நிறையப் பிசாசுக் கதைகள் தெரியும். சுவாரஸ்யத்தில் கதை கேட்டு விடுவார்கள். பின்னால் நினைத்துப் பயந்து கொண்டிருப்பார்கள். இப்போது அக்கதைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வரும்.
ஏதோ ஒரு தலைமுறையில் வீட்டு விலக்கானவளை துணையாக வந்து குளிக்க இதே குளத்திற்கு அழைத்துக் கொண்டு போன பிசாசுக் கதை வீட்டு விலக்காகும் பெண்களுக்கெல்லாம் தெரியும். இந் நாட்களில் தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கைகளில் ஒன்றாக புஞ்சைப் பெண்களுக்கு மரபாகச் சொல்லப்பட்டு வந்தது இது. மற்ற நாட்களில் மறந்திருப்பவள் இதை வீட்டு விலக்கு நாட்களில் நினைவுபடுத்திக் கொண்டு விடுவாள்.
விலக்காகி மாட்டுக் கொட்டாயில் ஒதுங்கியிருந்தவளைக் காமமுற்று மூன்று நாட்களும் கொல்லைப் புளிய மரத்திலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததாம் பிசாசு. மூன்றாம் நாள், குளிக்கக் கிளம்ப வேண்டுமென்று அரைத் தூக்கத்தில் இருந்தவளைப் பக்கத்து வீட்டில் விலக்கானவள் வேஷத்தில் வந்து வாசல் கதவைத் தட்டி எழுப்பிக் கொண்டு போயிற்று. முதல்நாள் அவர்கள் கொல்லையில் ஒருவருக்கொருவர் துணையாகப் போக வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது அது. முதலில் அவளைக் குளத்தில் குளிக்க விட்டு, இவளை வந்து அழைத்துக் கொண்டு போயிற்று. பக்கத்தில் துணையாக வந்தவள் முன்பே குளத்தில் குளித்துக் கொண்டிருப்பது கண்டு இவள் திரும்பிப் பார்க்க, வந்தவளைக் காணவில்லை. தன்னோடு குளிக்க இறங்கியவள் இப்போதுதான் வீட்டிலிருந்து வரும் கோலத்தில், முழுகி எழுந்தவள் பார்த்துத் தன்னோடு குளிக்க இறங்கியவள் எங்கே எனத் தேடிக் கு ழம்பி விட்டாள். உண்மையான இருவரும் ஒருவரை ஒருவர் பிசாசு என்று பயந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்து வீட்டுக் கதவை இடித்து வாய் குழறி நின்றார்கள். பிறகு விடிந்து கொல்லைக் கிணற்றடியில் தண்ணீர் இழுத்துக் கொட்டக் குளித்துவிட்டு வந்து படுத்தவர்கள்தான். பேய் விரட்டிய பிறகே இருவருக்கும் ஜுரம் தணிந்தது. இருவரும் அடுத்தமாதம் விலக்காகவில்லை. அவர்கள் வயிற்றில் பிசாசு கரு வளர்கிறது என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். மீண்டும் இரண்டு பேரும் பேயாட ஆரம்பித்தார்கள். ‘பிசாசுக்கு வாக்குப்பட்டா புளியமரத்திலே குடும்பம் நடத்தணும்’ என்ற பழமொழிக்கு எல்லோருக்கும் இப்போதுதான் உண்மையான அர்த்தம் தெரிந்ததாம். கருத்தரிக்காத நாட்கள், கருத்தரிக்கும் நாட்கள் என்ற விவரமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பிசாசுக் கருவைச் சிதைத்துப் பேய் விரட்டிய பிறகே அவர்கள் தன் நிலைக்குத் திரும்பினார்கள். ஊரிலும் குடும்பத்திலும் நிம்மதி ஏற்பட்டது. எப்படி பிசாசைப் பெற்று வளர்ப்பது? ஊர் குழந்தைகளை விளையாடப் போகாமல் கட்டுப் படுத்தி வைக்க முடியுமா?
வீட்டு விலக்கானவர்கள் குடும்பத்தில் ஒருவர் வீட்டிலிருந்தே தூங்கி எழுந்து வருகிறவர் என்ற நிச்சயமான துணையுடன் தான் குளிக்கப் போவார்கள். மாற்றி மாற்றி ஒருவர்காலை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். பார்வையில் தாங்களே பிசாசாகும் பயமும் இருக்கும். ஆனால், முன்பே அவள் குளத்தில் அலைந்து கொண்டிருப்பதில் யாரும் பயந்து கொண்டதில்லை. அது பிசாசாகவே இருந்தால்கூட பயந்திருக்க மாட்டார்கள். அவள் இறக்கும்வரை மற்றொரு துணையாகவே இருந்து கொண்டிருந்தாள்.
குளத்திலும் ஊரிலும் அவள் இல்லாத சமயங்களும் இருந்திருக்கின்றன. இதை யாரும் உணர்ந்ததில்லை. நினைவில் உறுத்துகிற முந்தானை முடிச்சைப் போன்ற இதை யாரும் உணராதது முடிச்சை மீறிய மறதி போலிருக்கிறது. ஒரு முறை நான் அவளை முற்றிலும் அன்னியச் சூழ்நிலையில் கண்டேன். ஒரு நாள் சாயங்காலம் செம்பனார் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது அவள் எதிரில் வந்து கொண்டிருந்தாள். இப்போது குளத்தில் கண்டு கொண்டிருக்கக் கூடுமென்று தோன்றிற்று. நான் பார்த்ததும் ஒரு உருவெளித் தோற்றமோ என்று இருந்தது. அவள் கையில் ஒரு பொட்டலத்துடன் தோற்றத்தில் பொருந்தாமல் வந்து கொண்டிருந்தாள். ஜவுளிக் கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருப்பவளாக இருக்கலாம். பொட்டலம் கட்டப்பட்டிருந்த தோரணை அவ்விதம் நினைக்க இருந்தது. ஒருவன் அவளைக் குளத்தில் பார்த்த நேரத்தில் ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களில் ஒருவராகப் பலர் கண்டிருப்பார்கள்.
இன்னொரு முறை அவளை நாங்கள் அவள் வீட்டிலேயே கண்டோம். ஒரு கிருஷ்ண ஜயந்திக்கு குழந்தைகள் நாங்கள் எண்ணெய் தண்ட கிண்ணங்களை எடுத்துக் கொண்டு ‘சீசந்தி அம்பாரம், சிவராத்திரி அம்பாரம்’ என்று பாடிக் கொண்டு போனோம். அவள் வீட்டுக் கதவும் திறந்திருந்தது. அவளும் வீட்டிலிருந்தாள்.
அவள் வீடு நூறு வருஷத்திற்கு முந்தியது. என்றாலும் குடுமியுள்ள ஒற்றைக் கதவில்லை. இரட்டைக் கதவுகள்.அவை சித்ர வேலைப்பாடுகள் செய்த நிலைப்படியும் கதவுகளும். சட்டம் சட்டமாக இழைத்து அலுத்து தச்சன் கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் சொந்தத் திருப்திக்காகச் செய்தவை போலிருக்கும் அவை. இடப்புறக் கதவு கிராமப் பழக்கம் போல மேலும் கீழும் தாழிட்டு எப்போதும் போல் சாத்தப்பட்டிருந்தது. வலக்கதவு திறந்திருக்கும்போது ஒருக்களித்திருப்பது போல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்தது. மூடிய கதவின் ஓரங்களைச் சுவரோடு வைத்துத் தைத்து விட்டது போல சிலந்தி வலை பின்னியிருந்தது. நிலைப்படியின் மேல் சிற்ப இடுக்குகளில் வெள்ளை வட்டங்களாகத் தம்படி அளவில் பூச்சிக் கூடுகள் இருந்தன. அவற்றை காயம்படும்போது காயத்தில் ஒட்டிக் கொள்ள எடுக்கப் போவதுதான் அவள் வீட்டுடன் எங்களுக்குப் பரிச்சயம். அங்குதான் கிடைக்கும் அவை. காயத்திற்கான அரிய மருந்து எங்களுக்கு.
ஒருக்களித்திருந்த கதவை முழுதாகத் திறந்து வைத்துவிட்டு நாங்கள் உள்ளே போனோம். அப்போது என் மூக்கில் சிலந்தி இழை ஒன்று ஒட்டிக் கொண்டு மூக்கணாங் கயிறு போல் காதுகளில் மாட்டி பாதி ரேழி வரையில் வந்தது நினைவிருக்கிறது. கையில் பற்ற முடியாமல் அதை எடுப்பதற்குத் தடுமாறித் தயங்கி நடு ரேழியில் நான் தாமதிக்க வேண்டியிருந்தது. மற்றவர்கள் எனக்கு முன்னதாக அவள் வீட்டின் உட்புறத்தைக் கண்டார்கள்.
சாதாரண நாளில் ஒற்றைக் கதவும் திறந்திருந்து முற்றம் தெரிந்து தெருவில் போவார் யாரும் பார்த்ததில்லை. குத்தகைக் காரன் நெல் கொண்டு வந்து போடும்போது கதவுகள் இரண்டும் திறக்கப்படும். அவன் வீட்டின் எதிர்ப்புற காலிமனையில் நின்று கொள்வான். குடியானவன் ஒருவன் வண்டி மூட்டைகளை முதுகில் புரட்டி உள்ளே கொண்டுபோய் போடுவான். இந்நேரங்களில் பார்வைக்கு மூட்டைகள்தான் தென்படும். முற்றம் தென்படுவதில்லை.
ரேழியில் வௌவால் புழுக்கையின் நாற்றமடித்தது. இது கிராமத்தில் தொன்மையின் நெடியாக சுவாசிக்க அனுபவமாகியிருப்பது. அரவம் கேட்டவுடன் உத்திரத்திலும் சரத்திலும் தொங்கித் தரையைக் கூரையாகப் பார்த்து எங்களைத் தொங்குவதாகக் கண்டு வௌவால்கள் அச்சத்துடன் சிதறிப் பறக்க ஆரம்பித்தன. காக்கைகள் அடங்கும் மரத்தில் இரவில் கல்லெறிந்தது போலாயிற்று. காக்கைகள் போல கூச்சலிடாமல் இறக்கைகளைப் புடைத்துக் கொண்டு பறந்தன. அவற்றின் உயிர்ப்பை அகாலமாய் அவற்றுக்கு நினைவூட்டியது போலாயிற்று.
முற்றத்தில் வேலைக்காரி அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அவள் அசை போட்டுக் கொண்டிருந்த அரிசி கடைவாயில் வெள்ளையாயிருந்தது. பூந் தவிடு படிந்து மீசையிருப்பது தெரிந்தது.
நாங்கள் முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் ஏறியபோது அவள் பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அழுக்குப் பிடித்த பழந்திரியை நிமிண்டிவிட்டு விளக்கை ஏற்றினாள். சுடர் பிடிக்க ஆரம்பித்தது. தலையிலோ, புடவையிலோ எண்ணெய்க் கையைத் துடைத்துக் கொள்ளும் கிராமப் பொம்மனாட்டிகளின் வழக்கம்போல அவள் கை எண்ணெய்க் கரியைப் புடவையில் துடைத்துக் கொண்டாள்.
விளக்கு, சரத்திலிருந்து தொங்கிய சங்கிலியின் முனைக் கொக்கியில் மாட்டப் பட்டிருந்தது. துருப்பிடித்தும் அங்கு மாட்டியவரை நினைக்கத் தூண்டுவதாகவும் இருந்தது. சங்கிலி ஆடிக் கொண்டிருந்ததில் விளக்கின் நிழல் சுவரிலும் தரையிலுமாக ஆடிக் கொண்டிருந்தது. அறையின் பொருள்களும் அவளும் நிழலோடு பெயர்ந்து ஆடினார்கள். தரையில் கிடந்து சுவரில் ஏறி ஆடும் நிழல்கள் திரிந்து பூச்சாண்டி காட்டின. அவை இவற்றின் நிழல்கள் என வேர்பிடித்துத் தெரிந்தன. அவற்றில் அவள் நிழல் பூதாகரமாய் ஆடிற்று. போதை போல் தணிந்து ஆட்டம் நிலைக்கு வர நேரம் பிடித்தது.
விளக்கின் எண்ணெய் தங்கும் குழிவு நீலமாய், பாசி படிந்து எரிந்த திரித்துண்டுகளோடும் ஒட்டடைத் தூசியோடுமிருந்தது. கூரையின் சாத்துகளை இணைத்து சாம்பல் தூவிய பாத்தியைக் கவிழ்த்து, விதானம் கட்டியதுபோல் எங்கும் ஒட்டடை. விளக்குச் சரம் அதில் பயிரான கொடி போலிருந்தது. ஓடுமாற்ற அவள் வீட்டுக்கூரையில் ஆள் ஏறிக் கண்டதில்லை நாங்கள். அவள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தது. அவள் செத்த மறு வருஷம் பெருங்காற்று மழையில் சிரமத்துடன் முனகிக் கொண்டு கூரை கூடத்தில் உட்கார்ந்து விட்டது.
தரை முழுவதும் காற்றுச் சலித்த புழுதி படிந்ததிருந்தது. பாதம்பட்ட புதிய சுவடுகளும் பழைய சுவடுகளில் புழுதி படிந்து மறைவதும் பூச்சிகள் ஓடிய கோலங்களுமாய் இருந்தது தரை. அவள் காலத்தில் வம்சாவளியாய் பூச்சிகள் கோலமிட்டு வந்திருக்க வேண்டும். அவற்றின் சுவடுகள் மறைந்தும் தோன்றிக் கொண்டுமிருந்தன. அவள் பாதத்தின் பரிணாமச் சுவடுகள் அறையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றிருந்தது.
விளக்கின் அடிவிளிம்பில் எண்ணெய்ச் சொட்டுக்கள் வரிசையாக கீழே விழ கசிந்து வரும் கனத்திற்குக் காத்துக் கொண்டிருந்தன. விளக்கு ஓட்டையை எண்ணெய்க் களிம்பு அடைத்துக் கொண்டிருக்கலாம். சுடர்க்கசிவும் நல்ல விளக்கை ஓட்டையாகக் காட்டியிருக்கலாம். சொட்டிய எண்ணெய்த் தரையில் சுவறியிருந்தது. பழைய பிசுக்கில் புழுதி படிந்து மீண்டும் சொட்டி விளக்கின் அடித்தரை அங்கு மேடிட்டிருந்தது. ஆடி விலகிச் சொட்டியவை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தோன்றின.
எங்கள் வருகை அவள் கவனத்தைக் கவரவில்லை. விளக்கேற்றிவிட்டு மேற்புறச் சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். அவள் பார்த்து நின்ற சுவரிலிருந்த படங்கள் புழுதி படிந்து கண்ணாடிச் சட்டங்களாகத் தோன்றின. நம் பார்வைக்குத் தோன்ற அவற்றில் ஒன்றுமில்லை. படங்களின் கீழிக் கஸ்தூரிக் கட்டைகளில் பாராயண புத்தகங்கள் போலும் ஓலைச்சுவடிகள் போலும் புழுதி படிந்த குப்பல்களிருந்தன. எல்லாம், அன்னியக் கைபடாமல் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற நிலையில் காப்பாற்ற இயலாதென இருந்தன. அவற்றிலிருந்தவை அவள் நினைவிலிருக்கலாம். அவள் இப்போது விமோசனம் இல்லாத சாபம் போலத் தோன்றினாள்.
ஒருவன் ‘பாட்டி’ என்றான். இதுவரை அவளை யாரும் இவ்விதம் கூப்பிட்டதில்லை. கூப்பிட்டவன் ஒருமாதிரியாக உச்சரித்தான். அவன் கூப்பிட்டதற்கு மற்றக் குழந்தைகள் வெட்கப்பட்டார்கள் போலிருந்தது.
இன்னொருவன் ஓரடி உள்ளே எடுத்து வைத்தான். சுவர்ப்புறம் பார்த்துக்கொண்டிருந்தவள் கையை நீட்டி அவனைத் தடுத்தாள். அவன் நிழலும் விளக்கு வெளிச்சத்தில் அறைக்கு வெளியில்தான் விழுந்திருக்க முடியும். நிழலைக் காண்பிக்க வெளியில் இருட்டவில்லை. அவள் ஒரு உள்ளுணர்வில் மட்டுமே அவனை உணர்ந்திருக்க வேண்டும். இப்போதும் அவள் எங்கள் பக்கம் திரும்ப வில்லை. அறைக்கு வெளியில் உள்ள எதுவும் அவள் கவனத்தைக் கவர முடியாது போலிருக்கிறது.
“கொஞ்சம் எண்ணெய் ஊத்தரேளா?” என்று யாசித்தாள் எங்களில் ஒரு பெண்.
அவள் கேட்டது, ஒலி வெளியைக் கடந்து அவள் காதுக்குப் போய்ச்சேர முடியும் என நம்புவதாக இருந்தது. பேச்சுக் காற்று பட்டு ஒட்டடை சல்லாத் துணியாய் ஆடிற்று. அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
விளக்கு வெளிச்சத்தில் பெரிய சிலந்திகள் மின்னின. புதிதாக நூலிழுத்து ஓடி நெய்து கொண்டிருந்தன. புதிய இழைகளும் மின்னின.
நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
‘சீசந்தி அம்பாரம்… சிவராத்திரி அம்பாரம் பட்டினி அம்பாரம் பாரணை அம்பாரம்’ என்று திடீரென்று ஒருமித்துணர்ந்து பாடினோம். சப்தம் இங்கு விகாரமாய் ஒலித்தது.
”ஏன் சும்மா நின்னுக்கிட்டு, அது எங்கே ஊத்தப்போவுது” என்றாள் அரிசி புடைத்துக் கொண்டிருந்தவள்.
பூஜை அறையிலிருந்து கிளம்பி அவள் வாசலுக்குப் போக ஆரம்பித்தாள். களவுக்கு வீட்டில் எதுவும் இல்லையென நம்புபவள் போலத் தோன்றினாள்.
“அந்த எண்ணெயே வாங்கினாக்கூட ஒரே வெஷம்டா, எண்ணேய்ச் சொம்பேப் பாரேன். ஒரே கரும்புளிச்சிருக்கு” என்று ஒருவன் சொல்ல நாங்கள் திரும்பினோம்.
அவள் மேற்கே குளத்திற்குப் போய்க் கொண்டிருந்தாள். இருட்டுவதற்கு இன்னும் நேரமிருந்தது. எண்ணெய் தண்ட இன்னொரு வீடு மேற்கே பாக்கியிருந்தது. ஒவ்வொருவனும் ஒரு நோக்கில் புழுதியை உழுது கொண்டு போனான். பெண்கள் சிணுங்கினார்கள்.
“மாட்டுக்காரப் பசங்க வெசவு அவளுக்கு வேணும்” என்றான் ஒருவன். மந்தையிலிருந்து ஒரு பசு மாடு தவறி வாயிற் புறமாய் வந்து கொண்டிருந்தது. வாசலாலும் வீட்டை அடையாளம் காணத் தெரிந்தது போலிருக்கிறது அது.
குளத்தின் மேல்கையில் இலுப்பைத் தோப்பில் பையன்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவளைப் பார்த்துப் பாடுவார்கள். ‘அக்ரகாரப் பாப்பானுவோ சாவக்கூடாதா? ஆத்தங்கரை ஓரத்திலே வேவக்கூடாதா?’ என்று. அவளிடமிருந்து எதிர்ப்பில்லாமல் ஏமாந்து ‘ஏ பாப்பாத்தி காது ஓட்டையா பூடிச்சா?’ என்று கத்துவார்கள்.
“தண்ணிப் பிசாசு” என்று ஒருவன் திட்டினான்.
”அவ செவிடுன்னே நெனெக்கிறேன்” என்றான் இன்னொருவன்.
“செவிடுன்னா என்ன? கைக் கிண்ணத்தைப் பாத்தே ஊத்தலாமே” என்று அடுத்தவன் சொன்னான்.
“அவ நம்மே பாக்கவே இல்லை. பொட்டையும் போலிருக்கு” என்று பின்னால் ஒருவன் சொன்னான்.
“அவ கண்ணுலே பாப்பா இருக்காண்ணு பாக்கணும்” என்று ஒருத்தி சிரித்தாள்.
“அவ ஒரு நிதானத்லே நடக்கறா போலேருக்கு” என்று மற்றொருவன் சொன்னான்.
“மாட்டுக்காரப் பசங்க வெசவு அவளுக்கு நன்னா வேணும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் இதை முதலில் சொன்னவன். அவளை நாங்கள் கூட்டமாய்ச் சேர்ந்து வெறுத்தது இதுதான். இதற்கு முன்னாலும் பின்னாலும் இன்னொரு சந்தர்ப்பம் இல்லை. நான் அவளைத் தனியாக வெறுக்க நேர்ந்திருக்கிறது. இது பின்னால் சுதந்திரத்திற்கு முன்பு நடந்தது. இடுப்பில் குடத்தோடு குளத்திலிருந்து அவள் வந்து கொண்டிருந்தாள். நான் மேற்கே போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து கல்லடிக்குப் பயந்து ஓரத்தில் கூனிக் குறுகி அடியைத் தவிர்த்து விடலாம் என்ற நம்பிக்கையோடு ஒடுங்கும் வெற்றுத் தெரு நாயைப் போல ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டு “யாருடா?” என்றாள். கையைக் குவித்துப் பார்வைக்குக் குடை பிடித்துக் கொண்டாள்.
“நாந்தான்”
“இம்” உன்னிப்பான பார்வையை ஆள் மேல் தடுத்து நிறுத்தச் சிரமப்படுபவள் போல இருந்தாள்.
“நாந்தான் கண்ணன்”
“யாரு, வெட்டியாரக் கோவிந்தன் மக்னா?” கையை எடுத்துவிட்டு, ஆள் மேல் பார்வையை நிறுத்திவிட்டவளாகக் கேட்டாள்.
”நாந்தான் கண்ணன். கண்ணன். நடேசய்யர் பையன். நீங்க தயிர் வாங்கவல்லே? கண்ணன்… கண்ணன்” செவிடும் குருடுமென்று அருகில் போய்க் குரலை உயர்த்திச் சொன்னேன். இன்னும் விலகிச் சுவரோடு ஒண்டிக்கொண்டாள். குடத்துத் தண்ணீரை அங்கேயே கொட்டிவிட்டு குளத்திற்குத் திரும்பி விட்டாள். உடனே வெறுக்கத் தோன்றிற்று. என் மேலும் வெறுப்பாய் இருந்தது. பிறகு மாட்டுக்காரப் பசங்க வெசவு நியாயம் என்று தோன்றிற்று.
வெட்டியாரக் கோவிந்தன் அவள் குத்தகைக்காரன் வரதராசுவின் பாட்டன் என்றும், தான் குழந்தையாக இருக்கும் போதே கிழவனாகச் செத்து விட்டான் என்றும் பாட்டி பிறகு சொன்னாள்.
முதல் சுதந்திர தினத்தன்று பள்ளிக்கூட வாத்தியார்கள் சேர்ந்து சேரிக்காரர்களை ஊர்வலமாக அக்ரகாரத்திற்குள் அழைத்து வந்தார்கள். கொட்டு மேளத்துடன் ஊர்வலம் கிழக்கிலிருந்து மேற்கே வ்நது அவள் வீட்டைக் கடக்கும்போது அவள் தண்ணீர்க்குடத்துடன் குளத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள்.
அக்ரகார வாத்தியார் விகண்டையாகச் சொன்னார் “ஏலே ஒங்களுக்குத்தாண்டா… அம்மா பூரணக்கும்பம் எடுத்தாரங்கடா” என்று அவர் தானே சிரிக்க வேண்டியிருந்தது. பிறகு அவர்கள் சிரித்தார்கள்.
இப்போது அவள் எப்படி நடந்து கொள்ளப் போகிறாள் என்று எனக்குத் தோன்றிற்று. குடத்துத் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றிக் கொள்ளப் போகிறாளா? சுவரோரம் ஒதுங்கிக் கொள்ளப் போகிறாளா? ஒருவருக்கானால் அவள் ஒதுங்கிக் கொள்ளலாம். பலருக்கானால் அவள் சுவருக்குள்ளேயே போக வேண்டுமென்று தோன்றிற்று. கல் சுவர், ஈர மண் சுவரைப் போல அவளுக்கு வழிவிட வேண்டும். ஈர உடலோடு மன், உடலில் ஒட்டாமல் அவள் மண்ணில் புதைந்து புறப்பட வேண்டும். அவள் போன இடம் ஆள் வடிவில் ஓட்டை விழுந்திருக்க வேண்டும். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டேன். எல்லோரும் சிரித்து முடித்த பிறகு நான் சிரித்திருந்தேன்.
“என்ன கண்ணா நான் சொல்றது” என்றார் வாத்தியார். இரண்டாம் முறை அவர் சிரித்தார். மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள். அவர் மிகவும் சந்தோஷமாய்ச் சிரித்தார்.
ஊர்வலத்தில் வரதராசு இருந்தான். சந்தோஷத்துடனும், கூச்சத்துடனும், ஆச்சரியத்துடனும் இரண்டு சாரி வீடுகளாலும் நெருக்கப்படுவது போல நிதானமில்லாமலும் நெளிந்து ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.
இவளைக் கண்ட வரதராசு “டேலி, ஒத்திக்கிங்கடா… அம்மா வராங்கடா” என்று ஒதுங்கினான். எல்லோரும் வெடித்துச் சிரித்தார்கள். வரதராசுவும் சிரித்தான். ஊர்வலத்தில் தான் விட்டுச் சென்ற பொக்கையை திரும்பி வந்து நிரப்பினான். நாதசுரக்காரன் கெட்டி மேளம் கொட்டினான்.
அவள் ஊர்வலத்தைக் கண்டவளாகத் தோன்றவில்லை. வரதராசுவை அவள் அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம். இடுப்பில் குடத்துடன் வீட்டுக்குள் போய்விட்டாள். அவள் காந்தி கட்சியில் சேர்ந்து விட்டாளென்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அக்ரகார வாத்தியார் கொஞ்ச நாட்கள், ஊர்வல தினத்தன்று தான் சந்தைக்குப் போய் வந்தவன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவள் உயிருடன் இருந்த மூன்று வருஷமும் வரதராசு குத்தகை நெல்லை, வண்டியை வாசலையொட்டி ஓட்டி நிறுத்திக் கொண்டு மூட்டைகளை முதுகில் புரட்டி ரேழியில் உருட்டிவிடுவான். ஆடாதொடைத் தழையால் பூச்சிக்கூடுகளைத் தட்டுவான். குடியானவன் அங்கிருந்து உள்ளே கொண்டுபோய் போடுவான்.
இந்த மூன்று வருஷங்களில் ஒழுங்காகத் தயிர் வாங்க வருவதை அவள் நிறுத்தி விட்டாள். நேர்ந்த சமயங்களில் வந்து சின்னத் திண்ணையில் உட்கார்ந்து யாராவது பார்க்கும் வரை காத்துக் கொண்டிருந்து வாங்கிக் கொண்டு போவாள். விலைக்கு வாங்குபவளாகத் தோன்றாது. யாசித்து நிற்பவளாகத் தோன்றும். சில நாட்கள் விடுபட்டுப் போகும். முன்பு சில சொற்களில் முடிந்தது இப்போது மௌனமாகவே சாத்யமாயிற்று. ஆனால், அவள் மௌனமாக இருந்ததில்லை. அருகில் போனால் லேசான முனகல் கேட்கும். பெரிதாகச் சத்தம் போட்டு தொண்டைகட்டி சப்தம் வராமல் முனகலானது போலிருக்கும். இனிமேல் அதிக நாட்கள் தாங்க மாட்டாளென்று தோன்ற ஆரம்பித்தது. அவள் சீக்கிரம் சாகக் காரணம் அந்த ஊர்வலம் தான் என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் காலை அவளைக் காணவில்லை. அதிசயமாய் உணர்ந்து வீட்டைப் பார்த்தவருக்கு வீட்டில் பூட்டுத்ட் ஹொங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் சாக்காட்டை முன்னதாய் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் செத்து, குளத்தில் மிதக்கப் போகிறாள்; அல்லது வீட்டில் செத்து நாறியபிறகுதான் அவள் சாவு தெருவில் தெரியப் போகிறது என்றுதான் நாங்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இவ்வளவு விரைவிலென்று எதிர்பாராத அவள் சாக்காட்டுச் செய்தியை வரதராசு கொண்டுவந்து விட்டான்.
மூச்சு இறைக்க, வியர்வைத் துளித்துளியாய் சேர்ந்து கோடிட்டு மார்பில் ஓட, முகத்தில் வழியும் வியர்வை, கடைவாயில் வழிய அக்ரகாரத்தில் துப்பத் தயங்கி, ”அம்மா எறந்து பூட்டாங்க” என்று இறைக்க இறைக்கச் சொன்னான். ஊரைத் தகித்துக் கொண்டிருந்த வெயிலில் ஓடிவந்திருந்தான். கோடைப் பந்தலில் தண்ணீர் தெளித்துவிட்டு நாங்கள் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் பேசிக் கொண்டிருந்தோம்.
“வண்டியே… கட்டுங்க வண்டியே கட்டுங்க” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே தயாராக எழுந்து கொண்டார் அவர்.
நாங்கள் மூலைக்கொருவராக ஓடி, அவன் வண்டி; இவன் மாடு; இவன் பூட்டணாங்கயிறு; இவன் முளைக்கழி; இவன் தார்க்கழி என்று கொண்டுவந்து சேர்ந்துவிட்டோம். அவர் ஆளவடியில் கிழிந்த ஜமக்காளத்தை உதறிக் கொண்டு நின்றார். இரட்டிப்பான சாமான்களை அவர் வீட்டுத் திண்ணையிலேயே போட்டு விட்டு நொடியில் வண்டியைப் பூட்டினோம்.
தலைக்கயிற்றை அவர் தன் கையில் வாங்கிக் கொண்டார். நாங்கள் தொத்திக் கொண்டோம். அதற்கு முன்பே வண்டி புறப்பட்டு விட்டது. மாடுகள் பாய்ச்சலில் போயின. வரதராசு பின்னால் ஓடிவந்தான்.
அவள் காலையில் கீழப்பாளையத்தைத் தாண்டி வரப்பில் நடப்பதை எவனோ கண்டானாம். அவள் போன திக்கிலிருந்து அவள் தன் தாயாதிக்காரனைத் தேடிக் கொண்டு போயிருக்க வேண்டுமென்று தோன்றிற்று. அங்கிருந்து அவள் அதிக தூரம் போகவில்லை. களைத்து ஒரு களத்தின் ஆலங்கிளை நிழலில் போய் உட்கார்ந்து விட்டாள். வெயிலுக்கு அஞ்சியவன் எவனோ வைத்துச் சில வருஷங்களே ஆன ஆலங்கிளை கொஞ்சம் தழையை பூ போல் வைத்துக் கொண்டு நின்றது. நரிப்பயறில் மேயும் மாடுகளை விரட்டிக் கொண்டு போன வரதராசு அவளைக் கண்டிருக்கிறான்.
“ஏம்மா இந்த வெயில்லே பொறப்பட்டு வந்தீங்க” என்றிருந்திருக்கிறான் அவன். அவள் பதில் சொல்லவில்லை. விழிகள், மேல் இமையில் சொருகலிட்டிருந்திருக்கின்றன. வாய் பிளந்து ஆகாசத்திற்கு உயர்ந்து விட்டிருந்திருக்கிறது.
வண்டி கீழப்பாளையத்தைத் தாண்டி எருவடிக்க பாரவண்டிகள் போன சோடையில் இறங்கி ஓடிற்று. சோடை நரிப்பயறுக்கு அடியில் புகுந்து கண்ணுக்கு எட்டும் தூரத்தைத் தாண்டி முடிவற்றுப் போயிற்று. நரிப்பயறு சூடேறி வெப்பம் அடித்துக் கொண்டிருந்தது. துவண்டு தாகத்தைத் தூண்ட இருந்தது. அடிநிலம் தாறுமாறாய் வெடிப்போடியிருந்தது. கானல் பேரோடையாக எங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. ஆயிரம் வாய் பிளந்த நிலம் எங்கும் கானல் நீரைக் குடித்துக் கொண்டிருப்பதாய் இருந்தது.
”இங்கேதாங்க” என்றான் வரதராசு.
அவன் சொல்லுமுன்பே இடம் தெரிய இருந்தது. சூழ்ந்து பார்த்துக் கொண்டும், பார்த்துத் திரும்பிக் கொண்டும், பார்க்கப் போய்க் கொண்டும் இருந்தவர்கள் வண்டிச் சப்தத்தை தூரத்தில் கேட்கும்போதே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வண்டியைக் களத்தருகில் திருப்பி நிறுத்தி விட்டுக் களத்தில் ஏறினோம். நிழலில் கிடந்தவள் இப்போது சுற்றி நின்று பார்த்தவர்களின் நிழலில் கிடந்தாள். முக்காட்டை முகத்தில் இழுத்து விட்டிருந்தார்கள். இதற்கு முன் யாரும் அவளை இவ்வளவு நெருக்கமாய்ப் பார்த்திருக்க முடியாது. முக்காட்டை விலக்கி முகத்தைப் பார்க்க வேண்டுமென்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. அவள் சாக்காட்டைத் தீர்மானிக்கும் ஆவலும் இல்லை. வரதராசுவின் செய்தியும், பார்த்து நின்றவர்களின் தீர்மானமும் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைத்தோம் போலிருக்கிறது. தாயாதிக்காரனுக்கு சாவுச் செய்தி சொல்ல வரதராசுவை அனுப்பினோம். பிணத்தை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் காட்டும் ஆர்வத்துடன் போன வேகத்திலேயே திரும்பினோம்.
அவளைப் பார்க்க எல்லோரும் வந்தார்கள். சாவுக்குத் துக்கம் விசாரிப்பவர்களாக இல்லை. அவள் சாவுக்கு யாரிடம் போய் துக்கம் விசாரிப்பது? அவள் இருக்கும்போதே எல்லோரும் வந்துவிட்டார்கள். ரேழியில் கிடத்தப்பட்டிருந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் பலரும் அவளைக் குளத்தில் கண்டதாகச் சொன்னார்கள். வெகுநாள் வரையில் அவளைக் குளத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அவளைக் குளத்தில் பார்க்காத நாள் என்று ஆரம்பமாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அதில் நானும் ஒருவன்.
நன்றி: கசடதபற, ஜூலை 1972 இதழ்
----------------
Posted by ராம்பிரசாத் on டிசம்பர் 19, 2012 ·