கண்டார் உளங்கவரும் கட்டழகு அரிய பாக்கியம் ஆம் - அழகு, தருமதீபிகை 76

நேரிசை வெண்பா

கண்டார் உளங்கவரும் கட்டழகும் காணாரும்
கொண்டாடி நிற்கும் குணநலனும் - தண்டார்
முடிமன்னர் ஆகு முறையும் அரிய
படிமன்னும் பாக்கியம் ஆம். 76

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கண்டவர் உள்ளங்களைக் கவரத்தக்க கட்டழகும், காணாதவரும் கருதி மகிழ்கின்ற குணநலனும், பெரிய அரசுரிமையும் இவ்வுலகில் உயர்ந்த பாக்கியங்களாய்ச் சிறந்துள்ளன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அதிசயமான பேரெழிலைக் கட்டழகு என்றது. தன்னை நோக்கியவரது கண்ணையும் கருத்தையும் பிணித்து நிற்பது என்பது அப்பேரால் தனித்துணரலாம்.

கண் எதிரே காணாதவரும் ஒருவனது குண நலங்களை வினவியறிந்து அவனை உவந்து பாராட்டி வருவர்; அவ்வரவு தலைசிறந்த குண கணங்களுக்கே அமையுமாதலால் அந்நிலை தெரிய வந்தது. எழிலுருவும் புகழுருவும் இணைந்து நின்றன.

குளிர்ந்த மலர் மாலைகளை தண் தார் என்றது. தாரும் முடியும் அரச போகத்தின் சீரும் சிறப்பும் தெரிய நின்றன. குறுநிலத் தலைவர் முதலிய பலரையும் அடக்கி ஆளும் பேரரசரை முடி மன்னர் என்றது.

அழகும் குணமும் அரச பதவியும் மிகவும் உயர்ந்த நிலையின; தம்மை யுடையாரை யாண்டும் மகிமைப்படுத்தும் மாண்புடையன; ஆதலால் பெறலரிய பெரும் பேறுகளாக ஈண்டு இவை ஒரு வரிசையில் வைத்து உரிமையுடன் பேச வந்தன.

படி மன்னும் பாக்கியம் என்றது உலகக்கில் நிலைபெற்ற பாக்கியங்கள் ஆகும். இந்த அருமைச் செல்வங்கள் என்றும் பெருமைக் களஞ்சியங்கள் என்பதாம்.

அதிகார நிலையானும், எதிர் காணவே இனிமை பயக்கும் தனி உரிமையாலும் அழகை முதலில் குறித்தது.

பிறப்புரிமையான் அன்றி எவரும் எளிதாகப் பெறலரிய இவ்விழுமிய பாக்கியங்களைப் பெற்றவர் மேலும் உயர்ந்து மேன்மையாளராய் ஒழுக வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Feb-19, 8:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே