வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள்
பாக்யா 8-2-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஒன்பதாம்) கட்டுரை – அத்தியாயம் 413paaபா
வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள் தயார், தயார்!
ச.நாகராஜன்
உலகின் அதிரடி மாற்றங்களைக் கண்டுபிடித்து வணிக நிறுவனங்கள் அவற்றை அறிமுகப்படுத்தும் வருடாந்திர திருவிழாவான சி.இ.எஸ் (Consumer Electronics Show) அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கோலாகலமாக நடந்து முடிந்தது. 4500 நிறுவனங்கள் இதில் பங்கு பெற்றன.250 மாநாடுகள் நடந்தன. 150 நாடுகளிலிருந்து 180,000 பேர் இதைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர். எல்லாம் பிஸினஸ் தான்! 25 லட்சம் சதுர அடியில் 24 விதமான நுகர்வோர் தயாரிப்புகள் இடம் பெற்றன.
இவற்றில் உலகையே மாற்றப் போகும் அதிரடி கண்டுபிடிப்புகளில் பெரிய ட்ரோன்கள், பெரிய டி. வி. பெட்டிகள், உள்ளிட்ட கண்டு பிடிப்புகளைப் பார்த்தவர்கள் மலைத்து நின்று விட்டனர். ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு எங்கும் கொடி கட்டிப் பறக்கிறது. அமேஸான், கூகிள் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் தொழில்நுட்பத் தலைமை இடத்தைப் பிடிக்கப் போட்டி போடுகின்றன.
தலையாய கண்டுபிடிப்புகள் சிலவற்றை இங்கு பார்ப்போம் :
தானாகவே வரும் சூட்கேஸ்!
ரயில் நிலையத்திலோ அல்லது ஏர்போர்ட்டிலோ எதற்காக சூட்கேஸ்களை தள்ளிக் கொண்டு போக வேண்டும்? அது தானாகவே இனி நம்முடன் நகர்ந்து வரும்! ஓவிஸ் (Ovis) என்ற சீனக் கம்பெனி ஒன்று முகத்தை அறிந்து கொள்ளும் காமரா பொருத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இயக்கத்திற்கான அலாக்ரிதத்தையும் தன்னுள் கொண்டு உங்களோடு அழகாக நடந்து வரும் சூட்கேஸை அறிமுகப்படுத்தி இருக்கிறது! ஜனக் கூட்டத்தில் யாருடனும் அது மோதாது. உங்களிடமிருந்து அது ஆறு அடிக்கு மேல் தள்ளிச் சென்றால் உங்கள் கையில் மாட்டப்பட்டிருக்கும் ரிஸ்ட் பேண்ட் அதிர்ந்தவாறே உங்களுக்கு அதை உணர்த்தும். அத்துடன் ஒரு ஜிபிஎஸ் வேறு! ஆகவே சூட் கேஸ் எங்கிருக்கிறது என்பதை ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கண்காணிக்கலாம். சரி, விலை? 799/ டாலர் தான்! அதாவது சுமார் 56000 ரூபாய்கள்!
ரத்தம் எடுக்காமல் ப்ளட் ஷுகர் அளவைச் சொல்லும் ஏர்பெடிக்!
டயபடீஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. அடிக்கடி கைகளைக் குத்தி ரத்தம் எடுத்து ப்ளட் ஷுகர் அளவைப் பார்க்க வேண்டாம். சான் டியாகோ கம்பெனியான ஏர்னஸ் என்ற கம்பெனி ஏர்பெடிக் என்ற கங்கணம் ஒன்றைத் தயாரித்துள்ளது. உங்கள் மூச்சுக் காற்றை வைத்தே அது ரத்தத்தின் ஷுகர் அளவைச் சொல்லி விடும். அது உங்களுக்கு மட்டும் இந்த அளவை அனுப்பாது; உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் கூட அனுப்பி விடும்! அதன் சென்ஸர்கள் மிகவும் நுட்பமானவை. செயற்கை அறிவின் சிகரம் இது – டயபடீஸ் நோயாளிகளுக்கு வரபிரசாதம்.
பறக்கும் கார்!
யாரால் இந்த டிராபிக் ஜாமை சகித்துக் கொள்ள முடியும்? காரில் ஊர்ந்து சென்று ஒரு இடத்திற்கு போவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது, இல்லையா! கவலையை விடுங்கள்.பிரபல கம்பெனியான ஊபர் தரையில் போகும் டாக்ஸியிலிருந்து சற்று உயர் மட்டத்திற்கு உயர்ந்து விட்டது; ஆமாம், அது பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தப் போகிறது. அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள பெல் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் டாக்ஸியில் பைலட் மற்றும் நான்கு பயணிகள் போகலாம். மணிக்கு 150 மைல் வேகத்துடன் இது பறக்கும். இதன் எல்லை 150 மைல் பரப்பளவு தான்! 2020இல் உலகின் எல்லா பெரிய நகரங்களிலும் இது பறக்கும்.
டிராபிக் ஜாமிலிருந்து விடுதலை தான், இனி!
மாயக் கண்ணாடி!
முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்து அலுத்துப் போய் விட்டதா! சேவி ஸ்மார்ட் மிர்ரர் (Savvy Smart Mirror) என்னும் மாயக் கண்ணாடி இதோ தயார்! இது தொடு திரை ஒன்றைக் கொண்டிருக்கும். பருவ நிலை பற்றி உடனுக்குடன் கூறும்; அவ்வப்பொழுது சுடச்சுட நாட்டு நடப்பு செய்திகளைத் தரும். இன்ஸ்டாகிராமுடன் கூட இதை இணைத்துக் கொள்ளலாம். எந்த வித ஆப்ஸையும் இதனுடன் இணக்க முடியும். வாஷிங்டனில் உள்ள எலக்ட்ரிக் மிர்ரர் என்ற கம்பெனி தயாரிக்கும் இதன் விலை 2500 டாலர்.(அதாவது சுமார் 1,75,000 ரூபாய்கள்!)
ஆலோசனை தரும் லு-மினி !
லுலுலாப் (Lulu Lab)என்று தென்கொரியக் கம்பெனி ஒன்று தயாரித்து அளிக்கும் பரிசு லு மினி(Lu Mini)! இந்த லு-மினியைக் கையில் பிடித்துக் கொள்ளலாம். 7 விநாடிகளில் உங்கள் முகத்தை அதனுடைய மல்டி – ஸ்பெக்ட்ரல் கேமராவினால் ஸ்கேன் செய்து பருக்கள், சொரசொரப்பு, குழிகள் போன்ற ஆறு விதக் கோளாறுகளைக் கண்டு பிடித்து உங்களுக்கு ரிபோர்ட் தந்து விடும். அவற்றைப் போக்க ஆலோசனைகளையும் தந்து விடும். இந்த வருடமே சந்தைக்குள் புகுவதற்கு இது தயார்.
இன்னும் சமையலறைக்குள்ளும் புகுந்து விட்டன பல நிறுவனங்கள்!சுவையான ப்ரெட் தயாரிக்கும் சாதனம், பர்கர் தயாரிக்கும் சாதனம் என்று பல சாதனங்களை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்துகின்றன பல உலக நிறுவனங்கள்!
இப்படி நூற்றுக் கணக்கான தயாரிப்புகள் தொழில்நுட்ப மேன்மையுடன் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைத்திருப்பதைப் பார்த்தவர்கள் பிரமிக்கிறார்கள்! நாளுக்கு நாள் உலகம் மாறி வருகிறது என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பத்திலேயே கட்டியம் கூறும் கோலாகலத் திருவிழா லாஸ்வேகாஸில் முடிந்தது; லாஸ் வேகாஸை Sin City என்று சொல்வது வழக்கம்; ஆனால் இந்த திருவிழாவைக் கண்டவர்கள் இதை சூப்பர் – டெக் சிடி (Super-Tech City) என்கின்றனர்!
அடுத்த மூன்று வருடங்களுக்கான தேதிகள் கூட இப்போதே அறிவிக்கப்பட்டு விட்டது. 2020 – ஜனவரி – 9 முதல் 12 முடிய (வியாழன் முதல் ஞாயிறு முடிய)
2021 – ஜனவரி – 7 முதல் 10 முடிய (வியாழன் முதல் ஞாயிறு முடிய)
2022 – ஜனவரி 6 முதல் 9 முடிய (வியாழன் முதல் ஞாயிறு முடிய)
நாளைய உலகைக் காண விரும்புவோர் கிளம்ப ஆயத்தமாகலாம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .
பிரான்ஸை சேர்ந்த டாக்டர் ரெனே தியோபில் ஹியாசிந்தே லானெக் (Rene Theophile Hyacinthe Laennec 1781-1826)என்பவர் தான் ஸ்டெதெஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். அவர் இதைக் கண்டுபிடித்த சம்பவம் சுவையான ஒன்று.
அவர் பாரிஸில் நெச்சர் – என்ஃபண்ட்ஸ் மலாடெஸ் மருத்துவ மனையில் (Necher-Enfants Malades Hospital)பணியாற்றி வந்தார். 1816ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு இள மங்கை அவரிடம் சிகிச்சைக்காக வந்தாள். அவளது இதயத்துடிப்பைச் சரி பார்க்க வேண்டி இருந்தது. அதற்கு அந்தக் கால வழக்கம் – கை விரல்களால் மார்பைத் தட்டிப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். ஆனால் ரெனே தியோபிலுக்கு அந்த இள மங்கையின் மார்பை, இப்படி விரலால் தட்டிப் பார்ப்பது நாகரிகமான ஒன்று இல்லை என்று தோன்றியது. ஆகவே ஒரு பேப்பரை சுருளாக மடித்து அவள் மார்பின் மீது வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். அவரே ஆச்சரியப்படும் படி இந்த முறையால் அனைத்தையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடனடியாக ஸ்டெதெஸ்கோப்பைத் தயாரித்தார்; வெற்றியும் பெற்றார்.
இது தான் ஸ்டெதெஸ்கோப் உருவான கதை!
***