உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே போல்வாரும் உண்டு - மூதுரை 20

இன்னிசை வெண்பா

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு. 20 - மூதுரை

எதுகை, மோனை கருதி,

'மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
மாமருந்து போல்வாரு முண்டு' என்று இருந்திருக்கலாமோ, பிற்காலங்களில் மாற்றியிருக்கலாமோ என்றும் எண்ணுகிறேன்.

அம்மருந்து போல்வாரு முண்டு. - 'அ' விற்கு 'உ' பொழிப்பு மோனையாகுமா?

பொருளுரை:

உடல் நோயானது உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்கிறது. ஆதலால், உடன் பிறந்தவர் எல்லோரும் நன்மை செய்யும் உறவினர் என்று கருதியிருக்க வேண்டியது இல்லை.

உடன் பிறவாத பெரிய மலையில் இருக்கிற மருந்தே நோயைப் போக்கும். அம்மருந்து போல் அயலாரில் உதவி செய்பவர்களும் சிலர் உண்டு.

கருத்து: உடன்பிறந்தார்களில் தீமை செய்வோரும், அயலாரில் நன்மை செய்வோரும் உண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-19, 8:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே