சேர்ந்தார் சிறுமையெலாம் தீர்த்தருளும் பெருந்தகையாளரை அடைக - இனநலம், தருமதீபிகை 92
நேரிசை வெண்பா
சேர்ந்தார் சிறுமையெலாம் தீர்த்துச் சிறப்புதவி
ஆர்ந்த உயர்வை அளித்தருளும்; - தேர்ந்த
பெருந்தகை யாளரைப் பேணி அடைக;
இருந்தகை எய்தும் எளிது. 92
- இனநலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தம்மை அடைந்தவரது புன்மை யாவும் நீக்கி நன்மை பலவும் நல்கவல்ல நல்ல தன்மையாளரை நாடிக் கூடிக்கொள்க என்றும், கூடின், அரிய மேன்மைகளெல்லாம் எளிது கைவரும் என்றும் சொல்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் சேரத் தக்காரது சீர்மையும் நீர்மையும் உணர்த்திய படியிது.
சிறுமை - இழிந்த இயல்புகள், சிறப்பு - நன்கு மதிப்பு.
உயர்ந்தோரைச் சார்ந்தால் சின்னத்தனங்கள் ஒழியும், சிறந்த நலங்கள் விளையும், உயர்ந்த மேன்மைகள் உளவாமாதலால் அவரை விரைந்து சேர்ந்து கொள் என விழைவு தோன்ற வந்தது. சேர்க்கையின் பயனிலை வியனிலையில் விளைந்தது.
பாலொடு கலந்த நீர் பாலாய் விளங்குதல் போல் மேலோரோடு கூடினவர் மேலோராய் மிளிர்வர்.
அரிய பெரிய தன்மைகளை இரும்தகை என்றது. இரும் - பெரிய, இருமையும் பெருமைதர வல்ல அருமையாளரை அறிந்து தழுவிக்கொள் என்பது கருத்து.